Advertisements

நலம் தரும் கிராம்பு!

கிராம்பு… லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, கோசம், திரளி, வராங்கம் எனப் பல பெயர்களைக்கொண்டது. இது இந்தோனேசியாவில் தோன்றினாலும், இந்தியா மற்றும் இலங்கையில்தான்  அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, மினரல், ஹைட்ரோகுளோரிக், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஏ உள்ளிட்ட சத்துகள் கிராம்பில் உள்ளன.

சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படும் கிராம்புக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுவதோடு, எடை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவுகிறது. செரிமான மண்டல உறுப்புகளைத் தூண்டி, நொதிகளைச் சுரக்கச்செய்வதால் ஜீரணக்கோளாறுகளையும் நீக்குகிறது.

ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கிராம்புப் பொடியை தினசரி உணவில் தூவி சாப்பிட்டு வந்தால் இயல்புநிலைக்கு வருவார்கள்.

கிராம்பைப் பொடியாக்கி வறுத்து, அரை கிராம் எடுத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். தொண்டை எரிச்சல், கரகரப்பு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சமையல் உப்புடன் கிராம்பைச் சேர்த்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு சுவாசக்குழலில் அழற்சி ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் மூன்று சொட்டுக் கிராம்பு எண்ணெயுடன்  தேன், வெள்ளைப்பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இதை உறங்குவதற்குச் சற்றுமுன் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் 30 மி.லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.

பல்வலி, ஈறு வீக்கம், வாய் நாற்றம் என அவதிப்படு பவர்கள் பற்பொடியுடன் கிராம்புப் பொடியைச் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட ஈறுகளில் கிராம்பு எண்ணெ யைத் தடவிவந்தாலும் பிரச்னை தீரும்.

காதுவலி இருந்தால், சுமார் ஐந்து சொட்டு  நல்லெண்ணெயில் ஒரு கிராம்பைப்போட்டுச் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் காதில் சில துளிகள் விட்டுவந்தால் நிவாரணம் கிடைக்கும்.

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அந்த இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வந்தால் குணம் கிடைக்கும்.

துளசிச்சாற்றுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்துச் சாப்பிட, நரம்புத்தளர்ச்சி விலகும்.

கிராம்பையும் மிளகையும் திராட்சைச்சாறு விட்டு அரைத்து நீர் சேர்த்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

சருமநோய்கள் குணமாக கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்து துவையல் செய்தும் சாப்பிட்டு வரலாம். 

Advertisements
%d bloggers like this: