பாடுபடுத்தும் வலிக்கு பாட்டி வைத்தியம்

மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்புவலி, முதுகுவலி, வயிற்றுவலி ஆகியவற்றுக்கு இயற்கை மருத்துவம் மூலம் தீர்வு காணும் வழிகளைச் சொல்கிறார்… கடலூரைச் சேர்ந்த, 93 வயதாகும் இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி.

* சோற்றுக்கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, நன்றாகக் கழுவி, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துகக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது வயிற்றுவலியைப் போக்கும்; அதிக ரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கும்.

* புதினா இலை – கைப்பிடியளவு, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, பனங்கற்கண்டு – தேவையானளவு  எடுத்துக்கொள்ளவும். புதினா இலையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்துச்  சாறு எடுக்கவும். அதனுடன் தேவையான அளவு  பனங்கற்கண்டு சேர்த்து, வயிற்றுவலி வரும் நேரத்தில் பருகலாம்.

* வாழைப்பூவை அதிகக் காரமில்லாமல் பொரியல் செய்து சாப்பிடலாம், அல்லது மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். வயிற்றுவலி நீங்கும்.

* கல்யாண முருங்கை இலை – கைப்பிடியளவு, தோல் உரித்த பூண்டு – 2 பற்கள்,  மிளகு – 5,  மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை… இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக்கி வைத்துக்கொள்ளவும். மாதவிடாய் தேதிக்கு மூன்று நாள்களுக்கு முன், நாள் ஒன்றுக்கு ஓர் உருண்டை எனச் சாப்பிடவும். தொடர்ந்து ஆறு நாள்கள் சாப்பிட்டு வர, மாதவிடாயால் ஏற்படும் வலிகளிலிருந்து  விடுபடலாம்.

* சதக்குப்பை (நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்) 50 கிராம் எடுத்து, வறுத்துப் பொடியாக்கி, மூன்று  பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். அதில் ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து, அந்த அரை பாகத்துடன் பனைவெல்லம் சிறிதளவு சேர்த்து, உருண்டையாக்கிச் சாப்பிடவும். இவ்வாறு காலையும் மாலையும்  தொடர்ந்து மூன்று நாள்களுக்குச் (ஆறு வேளை) சாப்பிடவும். இதனால், தாமதமாக ஏற்படும் மாதவிடாய் சீராக்கும்.

* கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்துக்கொண்டு, பொன்னிறமாக வறுத்துப் பொடியாக்கி, வெல்லத்துடன் கலந்து, அந்த மூன்று நாள்கள் சாப்பிட்டால், வயிற்றுவலி வராது.

* சிறிது சோம்பை எடுத்து வறுத்துப் பொடியாக்கி, சிறிதளவு தண்ணீரில் கலந்துகொள்ளவும். இதைக் காலை வெறும் வயிற்றிலும், மதியம் சாப்பிட்டதில் இருந்து 3, 4 மணி நேரத்துக்குப் பின்னர் மாலை வேளையிலும் அருந்தினால் வயிற்றுவலி ஏற்படாது. சோம்புத் தண்ணீரை அவ்வப்போது புதிதாகச் செய்துகொள்ளவும்.

* சோற்றுக்கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்த மோரில் கலக்கிக் குடிக்கலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும்.

* புளிய இலை, பொடுதலை இலை… இவை இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு துணியில் சின்ன மூட்டையாகக் கட்டி வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் போலக் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால், இடுப்புவலி மற்றும் முதுகுவலி நீங்கும்.

* ஏலக்காயைப் பொடியாக்கி அதை வாழைப்பழத்தில் தொட்டுச் சாப்பிட, அதிக ரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கும்.

%d bloggers like this: