அலெர்ட் அறிகுறிகள் 5

வைட்டமின் சத்துகளில் ஏ, பி, சி, டி, கே எனப் பல வகைகள் உள்ளன. உடலின் செயல்பாடு சீராக இருக்க, இந்தச் சத்துகள் அவசியம்.
இந்தக் குறைபாடுகளைக் கண்டறிய பெரிய பரிசோதனைகள்கூட செய்யவேண்டியதில்லை, “நம் முகமே வைட்டமின் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி” என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அறிகுறிகளை அறிந்துகொள்வதோடு, நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாகவே இதைச் சரிசெய்யவும் முடியும். அவை இங்கே….

உலர்ந்த கூந்தல்


தலைமுடி எளிதில் உடைந்து போவது, உலர்ந்த கூந்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்னைகள் இருந்தால், அது வைட்டமின் பி 7 (பயோட்டின்) குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். முட்டை, பாதாம், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழுத் தானியங்களைச் சாப்பிடுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

வெளிறிய உதடு
உதடு வெளிறிப்போவது இரும்புச்சத்துக் குறைபாட்டின் (Iron deficiency) அறிகுறியாக இருக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதால், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். கடல் உணவுகள், இறைச்சி, பீன்ஸ், அடர் பச்சை நிறக் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பட்டாணி போன்றவற்றில் இந்தச் சத்துகள் நிறைவாக உள்ளன.

வெளிறிய சருமம்
பொதுவாக, குளிர்காலங்களில் சருமம் சற்று வெளிறிய நிறத்தில் இருக்கும். அதுவே மற்ற காலங்களில் இயல்புக்கு மாறாக அதிகமாக இருக்கும்பட்சத்தில், அது வைட்டமின்  பி 12 குறைபாடாக இருக்கலாம். அதேபோல, இந்தக் குறைபாடு இருக்கும்போது எளிதில் களைப்படைவீர்கள். தானியங்கள், மீன், இறைச்சி, யோகர்ட் மற்றும் சீஸ் போன்றவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது.

வீங்கிய கண்கள்
காலையில் தூங்கி எழுந்ததும் கண்கள் வீங்கியதுபோல இருந்தால், நாம் சரியாகத் தூங்கவில்லை என்றுதான் நினைப்போம். ஆனால், அது உடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இதைப் போக்க யோகர்ட், உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஈறுகளில் ரத்தப்போக்கு
ஈறுகளில் ரத்தம் வழிதல், புண்கள் ஆறத் தாமதமாவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அது வைட்டமின்  சி குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். அதேபோல, உடலுக்கு வைட்டமின்  சி போதியளவு கிடைக்கவில்லையெனில், அது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கும். வெள்ளை மிளகு, முளைகட்டிய பயறுகள், புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

%d bloggers like this: