அ.தி.மு.க அணிகள் இணைப்பு! – தினகரன் மீண்டும் கைது?

டெல்லியில் வட்டமடித்துவிட்டு அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகாரிடம் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தன. பகிர்ந்துகொள்ள நிறைய தகவல்கள் அவரிடம் இருந்தன. கேட்க ஆரம்பித்தோம்.
‘‘ஒரே நேரத்தில் தமிழக முதல்வர் இ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்களே… வரவழைத்ததும், சொல்லி அனுப்பியதும் என்ன?”

‘‘ஓ.பன்னீர்செல்வம் மீது ஆரம்பத்தில் பிரதமர் மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. காரணம், மோடியின் எதிர்பார்ப்புகளைப் பன்னீரால் பூர்த்திசெய்ய முடியவில்லை. ‘தன் பக்கம் 50 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்’ எனப் பொய்யான நம்பிக்கையைப் பிரதமருக்குக் கொடுத்தார் ஓ.பி.எஸ். ஆனால், 15 பேர்கூட அவர் பக்கம் வரவில்லை. இதனால் ஆரம்பத்திலேயே நம்பிக்கையை இழந்துவிட்டார் பன்னீர். ஓ.பி.எஸ் சொதப்பிய இடங்களில் எல்லாம் இ.பி.எஸ் ‘ஸ்கோர்’ செய்கிறார். மெஜாரிட்டி          எம்.எல்.ஏ-க்கள் அவர் பக்கம் இருக்கின்றனர். அதோடு முதல்வர் பதவியும் இருக்கிறது. பி.ஜே.பி விரும்பியதுபோல, சசிகலா குடும்பத்தைக் கட்சியைவிட்டுத் தள்ளியே வைத்திருக்கிறார். இதுபோன்ற காரணங்களால், இ.பி.எஸ் கிடுகிடுவென பிரதமர் மோடியை நெருங்கிவிட்டார். ஆனால், மக்கள் ஆதரவு ஓரளவு இருப்பதால், பன்னீரையும் விட்டுக்கொடுக்கவில்லை பி.ஜே.பி.”

‘‘இருவருமே பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளைகள்தான். இவர்களை வைத்து என்ன செய்ய நினைக்கிறது டெல்லி?”
‘‘முதலில் என்ன செய்யச் சொல்லி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். இருவருக்கும் கெடு வைத்து அனுப்பி வைத்துள்ளது டெல்லி. இரண்டு அணிகளையும் விரைவில் இணைக்கச் சொல்லி இருக்கிறார்கள். ‘உங்களுக்கு நாங்கள் கொடுத்த கெடு முடியப்போகிறது. ஆனால், இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள்… எப்போது அணிகளை இணைப்பீர்கள்?’ எனக் கறாராகக் கேட்டுள்ளனர். அதோடு, தினகரன் விதித்திருந்த ஆகஸ்டு 5-ம் தேதி கெடுவை நினைவுபடுத்தி, ‘தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்தால், கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடக்குமே… அதையெல்லாம் எதிர்கொள்ள நீங்கள் தயாரா?’ என்றும் கேட்டுள்ளனர். அதற்கு இருவரிடமும் சரியான பதில் இல்லையாம்.’’
‘‘எங்கே நடந்தன இந்தப் பேச்சுவார்த்தைகள்?”

‘‘ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்தபோது டெல்லிக்கு வந்தால் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவார். அதே தமிழ்நாடு இல்லத்தில், ஓ.பி.எஸ் தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கும் அதே அறையில்தான் இந்த முறை இ.பி.எஸ் தங்கினார். ஓ.பி.எஸ், அவரது அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் வீட்டில் தங்கிக்கொண்டார். டெல்லியில் இருந்த நாட்களில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே ஆளுக்கொரு திசையில் முறுக்கிக்கொண்டு திரிந்ததை பி.ஜே.பி டெல்லி தலைவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. அவர்கள் இருவரிடமும் பிரதமர் தரப்பில் இது சுட்டிக் காட்டப்பட்டதாம். ‘இருவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும்’ எனக் கறாராகச் சொல்லப்பட்டபோது, இருவரும் அரைமனதுடன் தலையை ஆட்டினார்களாம்.”
‘‘ஓஹோ!”
‘‘பிரதமரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததுக்கு முந்தைய தினமே  பன்னீர்செல்வத்துக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டது. பன்னீர் அணிக்கு அதுவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘காலதாமதம் செய்யாமல் முடிவெடுங்கள். நீங்கள் செய்யும் காலதாமதம் உங்களுக்கும் உங்கள் அணிக்குமே பாதகமாக முடியும்’ என்று அட்வைஸ் செய்துள்ளார் பிரதமர். ‘நீங்கள் பழனிசாமியுடன் நேரடியாக ஏன் பேசவில்லை? உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைக் குழப்புகிறார்களா?’ என்றும் கேட்டதாகத் தகவல்.”
‘‘இ.பி.எஸ் சந்திப்பில் என்ன நடந்ததாம்?”
‘‘முதல்வர் எடப்பாடியுடனும் பிரதமர் மோடி தனியாக 15 நிமிடங்கள் பேசினார். அப்போது இணைப்பை வலியுறுத்தியதாகச் சொல்கிறார்கள்.’’ 
‘‘பி.ஜே.பி-யில் இணையப் போகிறார் ஓ.பி.எஸ் என்று ஒரு செய்தி அடிபட்டதே?’’
‘‘ஓ.பி.எஸ்ஸே முன்வந்து, ‘நான் உங்கள் கட்சியில் இணைந்து கொள்கிறேன்’ என்று சொன்னால்கூட அதை ஏற்கும் மனநிலையில் பி.ஜே.பி இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க என்ற குதிரையில் ஏறிச் சவாரிசெய்ய அவர்களுக்கு ஒரு ஆள் வேண்டும். அதற்கு அவர்கள் தயார் செய்து வைத்துள்ளவர்தான் ஓ.பி.எஸ். அவரை வைத்து அ.தி.மு.க-வை ஒரே தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும். ‘அந்தத் தலைமை சசிகலா குடும்பத்துக்கு எதிரானதாகவும் தங்களுக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும்’ என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அப்படி இருக்கும்போது, பன்னீரை அவர்கள் கட்சியில் இணைத்து அதன் மூலம் அ.தி.மு.க-வில் தங்களுக்கு இருக்கும் பிடிமானத்தை விட்டுக் கொடுப்பார்களா? எடப்பாடி – பன்னீர் அணிகள் இணைய வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோர் முழுமையாக ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஆட்சி மத்திய அரசைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதாக அமைய வேண்டும்… இதுதான் டெல்லியின் ஆசை.’’
‘‘பி.ஜே.பி-யின் திட்டம் எல்லாம் பீகார் ஸ்டைலில் இருக்கிறதே?’’
‘‘ஆமாம்! தங்களுக்குத் தோதானவர்கள் மட்டுமே மாநிலங்களில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறது பி.ஜே.பி. பீகாரில் லாலுவின் ஆதிக்கத்தை ஆட்சியில் இருந்து ஒழித்துக் கட்டியதுபோல, தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் துளியும் இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அங்கு லாலுவை வெளியேற்றியது போல, இங்கு சசிகலா தரப்புக்கு நெருக்கடி கொடுத்து, அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.’’
‘‘வேறு என்ன நடந்தது டெல்லியில்?”
‘‘பிரதமரை எடப்பாடி சந்திப்பதற்கு முதல் நாள் இரவு, திடீரென ஒரு கார் தமிழ்நாடு இல்லம் அருகே வந்து நின்றதாம். தங்கமணி, வேலுமணி போன்ற முக்கிய அமைச்சர்கள் சிலர் வாக்கிங் போவது போல் நடந்துபோய் அந்த மர்மக் காரில் ஏறினார்களாம். அதன்பிறகு நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் தமிழ்நாடு இல்லம் திரும்பினார்களாம். அதே நேரத்தில், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரையும் காணவில்லையாம். இரு தரப்பையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து, மனம்விட்டுப் பேச வைத்தனர். இதைச் செய்தவர்கள் டெல்லியைச் சேர்ந்த வி.ஐ.பி-க்கள் சிலராம். பி.ஜே.பி மேலிட கண் அசைவில்தான் இந்தச் சந்திப்பு நடந்ததாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.”
‘‘இதை எல்லாம் தினகரன் எப்படி ஏற்பார்?”
‘‘கட்சிப் பணியில் முழு வீச்சில் இறங்க தினகரன் திட்டமிட்டுள்ளார். ‘ஆட்சியைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. கட்சியைக் கைப்பற்றுவதுதான் முதல் அஜெண்டா. அதன்பிறகு தமிழகத்தில் மதவாதக் கட்சிக்கு வேலை இருக்காது’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம். ‘நமது எம்.ஜி.ஆர்’ இப்போது ‘தாய் சொன்ன தத்துவக் கதைகள்’ என்று ‘ஒற்றுமை’ குறித்து ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைகளைத் தினம் தினம் பிரசுரிக்கிறது. அவர்கள் நினைக்கும் ஒற்றுமை என்பது, ‘தினகரன் தலைமையில் எடப்பாடி அணியினர் சேரும் ஒற்றுமை’. கச்சத்தீவு முதல் கதிராமங்கலம் வரை மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பட்டியல் போட்டு ‘மதியாலே சதியை வெல்ல…’ என்று கடுமையான கவிதை வெளியாகி உள்ளது. இதெல்லாம் பி.ஜே.பி தரப்பைக் கொதிக்க வைத்துள்ளது. ‘ஆகஸ்ட் கலாட்டா’வைத் தினகரன் ஆரம்பிக்கும் முன்பே அவர் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிடவேண்டும் என்று பி.ஜே.பி நினைக்கிறது. அவர் எந்த நேரத்திலும் மீண்டும் கைது ஆகலாம் என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன.”
‘‘இந்தக் கைது எதை வைத்து?”
“சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்புச் சலுகைகளைப் பெற இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஒரு விவகாரம் வெளியானது அல்லவா? இந்த விவகாரத்தில் பிரகாஷ் என்பவரின் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது. அந்தப் பிரகாஷும் தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் நெருங்கிய நண்பர்கள். இந்தத் தொடர்புகளை வைத்தே, சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகளைப் பெற்றிருக்க முடியும்; தினகரன் அதற்காக ரகசியப் பேரங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது கர்நாடக போலீஸாரின் சந்தேகம். இந்த விவகாரத்திலும் தினகரன் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப் படலாம்.”
‘‘ஓஹோ!”
‘‘சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்பைக் கிளப்புவதற்கு முதல்நாள், தினகரன் பெங்களூருவில் இருந்தார். இந்த வாரம்கூட அவர் பெங்களூருவுக்கு திடீரென கிளம்பிப்போனார். சசிகலாவைச் சந்திப்பதில் பிரச்னை இருக்கும் இந்த நேரத்தில் ஏன் இவர் பெங்களூரு போனார் என்பது மர்மமாக இருக்கிறது. கர்நாடகா உளவுத்துறையினர் ஒருபக்கம் விசாரிக்கும் அதே நேரத்தில், அமலாக்கத் துறையினரும் சில தொடர்புகளைத் துருவி வருகிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு நடக்கும்போது தினகரனைச் செயல்படவிடாமல் சிறையில் வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் ‘சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது’ என்ற அறிவிப்பு டெல்லி தேர்தல் கமிஷனில் இருந்து வந்துவிடும் என்கிறார்கள். பொதுச்செயலாளர் பதவியே செல்லாது என்கிறபோது, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் பதவியும் செல்லாததாக ஆகிவிடும். ‘கட்சியின் பதவியில் இல்லாதவர்கள்… கட்சி சின்னத்துக்கு எப்படி உரிமை கோர முடியும்’ என்கிற லாஜிக்கில் கச்சிதமாக காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு மேல் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்து விடும் என்கிறார்கள்” என்றபடியே பறந்தார் கழுகார்.

%d bloggers like this: