கைது செய்தால் பாக்கியம் அடைவேன்!’ – எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் தினகரன்

கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்’ என்று ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார், டி.டி.வி.தினகரன். சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் அலுவலகம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய, 60 நாள்கள் காலக்கெடு விதித்த டி.டி.வி.தினகரன், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்தக் காலக்கெடு வரும் ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை இரண்டு அணிகளும் இணையவில்லை. இதையே காரணமாக வைத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்று பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். கூடவே, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து, ஆதரவாளர்களைச் சந்திக்கவும் முடிவுசெய்திருக்கிறார். இந்த நேரத்தில், தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் மரணத்தால் சுற்றுப்பயணம் தள்ளிப்போய்விட்டது. துக்கவிழாவில் தினகரனும் திவாகரனும் கை குலுக்கியது அமைச்சர்கள் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருவரும் இணைந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

‘திவாகரனும் தினகரனும் சேர்ந்து செயல்பட்டால், அ.தி.மு.க-வில் அது நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர். தினகரன், திவாகரனின் அடுத்தகட்ட நகர்வுகளை உளவுத்துறைமூலம் தெரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, தினகரனுக்கு ‘செக்’ வைக்க முடிவுசெய்துள்ளது. ஆகஸ்ட் 4 அல்லது 5-ம் தேதி, தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், அவரைக் கைதுசெய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக உள்ளது. இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட தினகரனும் ‘ நானும் தயார்’ என ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘நாங்கள் அமைதியாகச் செயல்படவே விரும்புகிறோம். எங்களை அடக்க முயன்றால், அது அவர்களுக்கும் ஆபத்து என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதையும் மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்தால், அது ஆட்சிக்கே சிக்கலை உண்டுபண்ணிவிடும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். எங்களுக்கு வெளிப்படையாகவே 36 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. மறைமுகமாக மேலும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் ஆதரவுகொடுத்துள்ளனர். எங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே எதிரியில்லை. அவருடன் நாங்கள் இன்னமும் நட்புடனே இருக்கிறோம் என்பது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க-வையும் ஆட்சியையும் நடத்த ஆசைப்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்களும் சம்மதிக்க மாட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு ஆலோசனை சொல்லும் சில அமைச்சர்களும் பதவிக்காக அ.தி.மு.க-வை அழிக்க முயல்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால், மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் ” என்கிறார்கள் கொந்தளிப்புடன்.

நேற்று, தன்னுடைய ஆதரவாளர்களிடம் விரிவாக ஆலோசனை செய்திருக்கிறார், டி.டி.வி.தினகரன். அப்போது, ‘தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் கைதுசெய்வதாகத் தகவல் வந்துள்ளதே’ என ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். ‘காரணமில்லாமலேயே என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். கட்சிக்காகக் கைதுசெய்வதை பாக்கியமாகக் கருதுவேன். இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட பொய்ப் புகாரில், டெல்லி போலீஸார் என்னைக் கைதுசெய்தபோதே நான் கலங்கவில்லை’ என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, “தினகரனின் கட்சிப் பதவியே நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவரால் எப்படி கட்சி அலுவலகத்துக்கு வர முடியும்? அதை அவர் உணர்ந்தால் நல்லது. குறிப்பாக, கட்சி சின்னம், பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. கட்சி அலுவலகத்துக்கு அவர் வந்து, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கட்சித் தலைமை அலுவலகத்தைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கும். இப்படியொரு சூழல் உருவாக தினகரன் காரணமாகிவிடக்கூடாது. அவர் சொல்லி, நாங்கள் இணையவேண்டிய அவசியமில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும்’ என தர்மயுத்தத்தை நடத்திவருகின்றனர். அவர்கள், தினகரனுடன் நட்பாக இருக்கிறார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆகஸ்ட் மாதத்தோடு அ.தி.மு.க-வில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும். சுதந்திர தின விழாவில் கொடியேற்றத் தயாராகிவிட்டார் முதல்வர் பழனிசாமி” என்கின்றனர் உறுதியாக.

%d bloggers like this: