தி.மு. – தி.பி. – எகிறும் எடைக்கு என்னதான் காரணம்?

திருமணம், பிரசவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு உடல் எடை அதிகமாகிறது என்ற ஒரு கருத்து உண்டு. பல ஆய்வு முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. எப்போதும் உடல் எடையைக் குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருப்பவர்கள், அதற்குப் பழகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல… குழந்தை பிறந்ததும் தங்கள் எடையைச் சீராக்கிவிடுவார்கள், அதன் பிறகு வரும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஆக, முயன்றால் யாரும்

திருமணத்துக்குப் பின்னர் தங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். திருமணத்துக்குப் பிறகு உடல் எடை ஏன் அதிகரிக்கிறது, என்னென்ன விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.

உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?

பொதுவாக, பெண்கள் திருமணத்துக்கு முன்னர், உடல் எடை விஷயத்தில் அதிகக்  கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவர்களால் உணவுக் கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சியிலோ கவனம் செலுத்த முடிவதில்லை. அதுதான் எடை அதிகரிப்புக்கு முதல் மற்றும் முக்கியக் காரணம். திருமணத்துக்கும் குழந்தை பிறப்புக்கும் இடைப்பட்ட காலம் ஒன்று உண்டு. அந்தக் காலக்கட்டத்தில், மணமகள் – மணமகனுக்காகப் பல கொண்டாட்டங்கள், விழாக்கள் குடும்பத்தினரால் நடத்தப்படும். விருந்து உபசரிப்பையும், வெளிநாட்டு இன்பச் சுற்றுலாவையும் சொல்லலாம். இதுபோன்ற நேரங்களில், வெவ்வேறான உணவு முறைகளை அவர்கள் உண்ண வேண்டியிருக்கும். எந்த அளவுகோலும் இல்லாமல், பெரியவர்களின் உபசரிப்பால், அதிகக் கலோரிகள் கொண்ட உணவு மற்றும் அதிகக் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்ண நேரிடும். இந்தச் சூழலில் உணவுக் கட்டுப்பாடின்மை காரணமாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். ஆண்களின் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்கும். விருந்துகளுக்குப் பிறகு, பெண்கள் புதியதொரு சூழலில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். அதாவது திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டில் தங்கும் சூழல். அங்கே உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்யும் சூழல் இல்லாமை போன்றவற்றால் அவர்களின் உடல் எடையில் பிரச்னைகள் நீடிக்கும்.

குழந்தை பிறக்கும்போது, உணவு முறை மாற்றங்களால் உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதன் காரணமாக, உடல் எடை அதிகரிக்கும். கர்ப்பக் காலத்தில், குழந்தைக்கும் சேர்த்து உணவு உட்கொள்ள வேண்டும் எனக் கூறி, வீட்டிலுள்ள பெரியவர்கள் அதிகச் சத்துள்ள உணவை உண்ணுமாறு அறிவுறுத்துவார்கள். அது அவசியமில்லாத ஒன்று. வழக்கமாக எப்போதுமான அளவில் உணவை உட்கொண்டாலே போதும். கர்ப்பக் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் போனால், எடைப் பிரச்னை குழந்தைப் பிறப்புக்குப் பிறகும் தொடரும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது, தாய் 9 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிப்பது வழக்கம். குழந்தை பிறந்த பிறகு, தாயின் எடையில் 6 கிலோ வரை குறையும். ஏற்கெனவே 11 கிலோவுக்கு மேல் எடை அதிகமானவர்கள், இதுபோன்ற சூழலில் எடையைக் குறைக்கச் சிரமப்படுவார்கள். குழந்தை பிறந்த பிறகு, சிலர் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். தாய்ப்பால் தர வேண்டும் என்பதால், அதிகச் சத்துள்ள சில உணவுகளை உட்கொள்வார்கள். இதனால், எடை மேலும் அதிகரிக்கத் தொடங்கும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் எடையை அதிகரிக்கச் செய்து, ஹார்மோனல் இம்பேலன்ஸை (Hormonal Imbalance) ஏற்படுத்தும். உடலில் அதிகச் சதை போடுவது, இதன் முக்கிய அறிகுறி. இந்தப் பிரச்னை, ஹார்மோன்ரீதியான வேறு சில பிரச்னைகளுக்கும் வழிசெய்யும். உதாரணமாக தைராய்டு, 30 வயதுகளில் மெனோபாஸ் ஏற்படுதல் மற்றும் இதயக்கோளாறுகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உடற்பயிற்சி ஆலோசனைகள்

பொதுவாக, கலோரிகளைக் குறைத்துவிட்டால், உடல் எடை எளிதில் குறைந்துவிடும். திருமணத்துக்குப் பிறகும்  தினமும் உடற்பயிற்சி செய்யத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

ஒருவேளை, தினமும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், தங்கள் அன்றாடப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமணமான பெண்கள், அவர்களின் சில உணவு முறை மற்றும் உடற்பயிற்சி கவனக்குறைவால், எடை அதிகரித்திருப்பார்கள். மீண்டும் தங்கள் பயிற்சியைத் தொடர்வதே அவர்களுக்குச் சிறந்தது. புதிய வீடுகளுக்குச் சென்றவர்கள், சிறிது காலம் சங்கடமாக உணரலாம். அவர்கள், அதிகாலை வேளையில் தியானம் செய்வது நல்லது. மேலும், வீட்டின் சில அடிப்படை வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக, துணிகளைத் துவைப்பதோடு மட்டுமன்றி உலர வைத்து, மடித்து வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். இப்படிச் செய்வது, உடற்பயிற்சியை மீண்டும் தொடர நினைக்கும்போது, அதை எளிதாக  உணரச் செய்யும். வீடு ஓரளவுக்குப் பழகியதும், தங்களது யோகா முறை, நீச்சல் பயிற்சி, ஜாகிங் போன்றவற்றைத் தொடரலாம்.

குழந்தை பெற்ற பெண்மணிகள், குழந்தையைத் தோளில் சுமந்தபடி நடப்பது, அவர்களது இதயத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. இதயத்துடிப்பு சீராகி, தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். இவற்றால், தேவையான அளவு தூக்கமும் மன நிம்மதியும் கிடைக்கும். குழந்தை பெற்றவர்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு, அவர்கள் உடலின் சத்து அளவைப் பொறுத்தே, உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படும். உதாரணமாக, உடலில் சர்க்கரை அளவு, கொழுப்புச்சத்து அதிகம் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறாமல் பயிற்சி எடுப்பது, குழந்தைக்கும் அவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

– ஜெ.நிவேதா


டயட் ஆலோசனை

கர்ப்பக் காலங்களில், அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவைத் தவிர்ப்பது நலம். அதற்குப் பதிலாக, வைட்டமின் சி, ஒமேகா 3, கால்சியம், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது போதுமானது. ஃபோலிக் அமிலம் உள்ள உணவை (சிட்ரஸ் பழங்கள், பட்டாணி, பீன்ஸ்) உண்பது குழந்தைக்கும் நலம் பயக்கும்.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகரிப்பது, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழலில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகவும் சர்க்கரை குறைவாக உள்ளவற்றையும் சேர்த்துக் கொள்வதுதான் சிறந்தது. இவர்கள், கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பால் வகைகளையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை நெய் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். நட்ஸ், மீன், பால் போன்ற உணவுகளின் மூலம், 400 முதல் 500 மி.லி வரை கொழுப்புச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் கால்சியம் அதிகம் இருக்கும் என்பதால், அவை உடலுக்கு நன்மை பயக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, காய்கறிகள், பழங்களில் கவனம் செலுத்த வேண்டும். புரதச்சத்தும் கால்சியமும் அதிகம் உள்ள பாலக் கீரை, பட்டாணி, கூழ் வகைகள், வெந்தயம், கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகள், தாய்ப்பால் சுரப்பைச் சீராக்கும்; உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பது போன்ற பிரச்னைகளைத்  தீர்க்கும். பழங்களைச் சாறுகளாக்கி, சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது. தண்ணீர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

%d bloggers like this: