தூங்குவதிலும் தொல்லையா?!

தூங்கி விழித்ததும் கழுத்தில் வலி கடினமாக தாக்குவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மெத்தையில் தூங்கி எழுந்ததும் உடல் சூடு பிடிப்பதற்கும் என்ன காரணம்? – எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி – 7. சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் அரசு மோகன். ‘மெத்தையில் தூங்கும் பழக்கம் உடையவர்களில் பெரும்பாலானோர் இதுபோல் முதுகுவலியோடு கழுத்து வலியாலும் அவதிப்பட்டு

வருவார்கள். இதற்கு முக்கியமான காரணம், மெத்தையில் படுக்கும்போதும் 2, 3 தலையணையை தலைக்கு வைத்து படுப்பதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். இதனால்தான் காலையில் தூங்கி எழுந்ததும் கழுத்துப்பகுதியில் அதிக வலி உண்டாகிறது. உங்களிடம் இதுபோன்ற தவறான பழக்கம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
வலியில் இருந்து மீள்வதற்கு கட்டாந்தரையில் தலையணை வைத்துக்கொள்ளாமல் தூங்கிப் பழகலாம். அவ்வாறு படுப்பது கஷ்டமாக இருந்தால், மெலிதான போர்வையை இரண்டாக மடித்து தலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். மரக்கட்டிலும் நல்லது தான். உடல் சூடு அடைவதற்கு உறங்கும் மெத்தையின் தன்மைதான் பெரும்பாலான காரணமாக இருக்கிறது. ஃபோம் மற்றும் சிந்தட்டிக் மெட்டீரியலால் தயாரிக்கப்படும் மெத்தைகள் வெளியே இருக்கும் வெப்பத்தை கிரகித்துத் தன்னுள் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதில் உறங்கும்போது தானாகவே சூடு பிடிக்கும் வாய்ப்பு உண்டு. இந்த அவதியைத் தவிர்க்க இலவம் பஞ்சால் தயாரிக்கப்பட்ட மெத்தை, தேங்காய் நார் பாய், கோரைப் பாய் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உடல் சூடு அடைவதை பெருமளவு குறைக்கலாம். பஞ்சிலும் தரமான இலவம்பஞ்சு பயன்படுத்தும்போது பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்!

%d bloggers like this: