டாஸ்மாக் கடைகளுக்கு டாட்டா? எடப்பாடி பழனிசாமியின் ‘எம்.ஜி.ஆர் பாணி’

சுதந்திர தினத்துக்குள்ளாக தமிழகத்தில் மேலும் கணிசமாக டாஸ்மாக் கடைகளை மூட அரசு யோசனை செய்துவருவதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. சுதந்திர தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் அவர்கள்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டுவரும் மதுபானக்கடைகள் தமிழக மக்களின் பெரும்பிரச்னையாக இருந்துவருகிறது. இருப்பினும் அரசுக்கு பெரும் வருவாய் ஆதாரமாக இருந்ததால் கடந்த ஆட்சிக்காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அதுபற்றி கவலைப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயம் டாஸ்மாக் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பள்ளி மாணவிகள் துவங்கி பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின. உச்சக்கட்ட சோகமாக மதுவை எதிர்த்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் எதிர்பாராதவிதமாக இறந்தார். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த தேர்தல் வாக்குறுதியாக  முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுபானக் கடைகள் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படியே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 500 கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் மேலும் 500 கடைகள் மூடப்பட்டன.
முன்னதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதால், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்’ என்று வழக்கறிஞர் பாலு 2012-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேற்முறையீடு செய்தது தமிழக அரசு. ஆனால், கடந்த மார்ச் மாதம், வெளியான இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை எடுக்க கறாராக சொன்னது உச்ச நீதிமன்றம். அதன்படி 3303 கடைகள் தமிழகத்தில் காணாமல் போயின. தாய்மார்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

இருப்பினும் மீதமுள்ள கடைகளை எடுக்க சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி துாக்கியவண்ணமே உள்ளனர். இந்நிலையில், மீண்டும் அரசே முன்வந்து தமிழகத்தில் மேலும் கணிசமான கடைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அதன்பின்னணியில் ‘அரசியல்’ இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஓ.பி.எஸ். அணியின் மவுன யுத்தம், தினகரன் அணியினரின் நேரடி யுத்தம் இவற்றுக்கிடையில் சத்தமில்லாமல் ஸ்கோர் செய்யவே எடப்பாடி அரசு  இப்படி ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் ஆதரவு இருந்தால் எந்த திசையிலிருந்து வரும் பிரச்னைகளையும் எளிதில் சமாளிக்கமுடியும் என்கிற எம்.ஜி.ஆரின் பாலபாடத்தை எடப்பாடி கையில் எடுத்திருக்கிறாராம். எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் எதிர்கட்சிகளால் எந்தப்பிரச்னை எழுப்பப்பட்டாலும், “மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என அதற்கு எதிர்வினையாற்றமாட்டார். காரணம் மக்களிடையே அவர் பெற்றிருந்த ஆதரவு; குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு.
எம்.ஜி.ஆர் வழியில் தாய்மார்களின் அன்பைப்பெற எடப்பாடி பழனிசாமி பல விஷயங்களைச் செய்கிறார். ஒரு வழக்கமான முதல்வராக இல்லாமல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்களிடம் தனிப்பட்ட அன்பைப்பெற விரும்புகிறார். மக்களின் அபிமானத்தைப்பெற்றுவிட்டால் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னால் ஸ்திரமாக அரசியல் செய்ய முடியும் என கணக்குப் போடுகிறார் என்கிறார்கள். 

அந்த கணக்குப்படியே காலம் காலமாக பிரச்னைக்குள்ளாகியிருக்கும் டாஸ்மாக் கடைகளை இன்னும் கணிசமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதிரடியாக சில நுாறு கடைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள். இதற்கான பணிகள் கோட்டையில் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் சத்தமின்றி நடந்துவருகின்றனவாம். மூடப்படும் கடைகளின் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்குவதற்கான வேலைகளையும் விறுவிறுப்பாக செய்துவருகிறார்கள் கோட்டையில். அநேகமாக ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று தமிழகத் தாய்மார்களுக்கு அரசு அளிக்கும் சுதந்திர தினப்பரிசாக இது இருக்கலாம் என்கிறார்கள்  கோட்டை வட்டாரத்தில்.

%d bloggers like this: