பிளாஸ்டிக் அரிசியா, போலி அரிசியா? – அறிவியல் சொல்லும் ஆதாரம்!

டந்த சில மாதங்களாகச் சமூக வலைதளங்களில் அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளிகள்… பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை ஆகியவை குறித்து வந்தவைதான். அவற்றை வைத்து பரப்பப்பட்ட ‘மீம்ஸ்’களும் பட்டையைக் கிளப்பின. ‘பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை உண்மையிலேயே இருக்கின்றனவா? அவற்றைத் தயாரித்துக் கலப்படம் செய்ய முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல், அந்தக் காணொளிகளைக் கண்டதுமே கலவரப்பட்டவர்கள் நிறைய பேர்.

அதைத்தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகின. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள், ‘சுத்தமான கலப்படமில்லாத இயற்கை அரிசி, இயற்கை சிறுதானியங்கள் எங்களிடம்தான் கிடைக்கின்றன’ என்று சொல்லி விளம்பரப்படுத்திக் கல்லா கட்டவும் முயன்றார்கள். பார்ப்பதற்கு நீரைப்போலத் தோற்றம் தந்தாலும் கானல்நீர் தாகம் தீர்க்காது.

அதுபோலத்தான் பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகள். ஐயம் திரிபட அறியாமல் ஒன்றை அப்படியே ஏற்பதைவிடுத்து, கேள்விகள் கேட்டு அறிதலே அறிவியல். அதுதான் பகுத்தறிவு.

‘சீனாவிலிருந்து அரிசி, முட்டை ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றனவா? எந்த வகை அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது?’ என்றெல்லாம் நாம் யோசிக்கவில்லை. காணொளியைக் கண்டவுடன் அப்படியே நம்பிவிட்டோம் என்பதுதான் உண்மை. இப்படி ஏமாறாமல் பகுத்தறிவுச் சிந்தனையைக் கூர் செய்தால்தான்… வணிக வெறிக் கும்பல்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்நிலையில், சீனாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் உண்மை.
முதலில் பிளாஸ்டிக் அரிசி ஏன் சந்தைக்கு வர வேண்டும் என்பதற்கான காரணத்தை ஆராய்வோம். அதை அரிசியோடு கலப்படம் செய்து விடுவார்கள் என்ற பதில் வருமானால் அது தவறு. ஏனென்றால் பொருளாதார ரீதியாகப் பிளாஸ்டிக், அரிசியைவிட பிளாஸ்டிக் மிகவும் விலை உயர்ந்தது. அதனால், கலப்படம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. இது, பொருளாதாரம் சார்ந்த விஷயம்.
தரமான தூய அரிசியே ஒரு கிலோ ஐம்பது ரூபாய் அளவில்தான் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பிளாஸ்டிக் கிட்டத்தட்ட 120 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. இப்படி இருக்கும்போது, நூறு ரூபாய்க்குமேல் செலவு செய்து பிளாஸ்டிக்கில் அரிசி தயாரித்துக் கலப்படம் செய்ய முட்டாள்கள்கூட நினைக்க மாட்டார்கள். இதேபோலத்தான் முட்டையும். செயற்கையாக முட்டையைத் தயாரிக்க வேண்டுமானால் உண்மையான முட்டை விலையைவிட பலமடங்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால், வணிக நோக்கில்கூட இந்தப் புரளிகள் நம்பும்படியாக இல்லாமல் அபத்தமாகவுள்ளன.

அரிசியைவிட எடை குறைவான பிளாஸ்டிக் பொருளில் அரிசிபோலச் செய்தால் எடை தில்லுமுல்லுகூட செய்ய முடியாது. கல்லில் அரிசிபோல செய்தால் அல்லது கற்களையே கலந்துவிட்டால் ஒரு கிலோ அரிசியில் சுமார் நூறு கிராம் வரை பித்தலாட்டம் செய்யலாம். பிளாஸ்டிக்கில் அதுகூட சாத்தியமில்லை. அதனால், எந்த விதத்திலும் பிளாஸ்டிக் அரிசியை உருவாக்குபவருக்கு லாபகரமாக இருக்காது.
அடுத்து வேதியியலுக்கு வருவோம். பிளாஸ்டிக் அரிசியைச் சமைக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும். ‘பிளாஸ்டிக்கை வேக வைக்க எந்த வெப்பநிலை வேண்டும்? அதற்குத் தேவையான வெப்பநிலை தண்ணீர் கொதிக்கும்போது கிடைக்குமா?’ போன்றவை வேதியியல் சார்ந்த கேள்விகள்.
கொதித்து இறக்கிய தேநீரைப் பிளாஸ்டிக்கில் வடிகட்டும்போது அது உருகுவதில்லை. ஏனெனில், பிளாஸ்டிக்கின் உருகும் நிலை 170 டிகிரி செல்சியஸ். 100 முதல் 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சில வகைப் பிளாஸ்டிக்குகள் உருகும் என்றாலும் நூறு டிகிரி செல்சியஸுக்குமேல் தண்ணீரை வெப்பப்படுத்த முடியாது. இது, அடிப்படை வேதியியல். தண்ணீரின் கொதிநிலையான நூறு டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பத்தில்தான் அரிசியை வேகவைக்க முடியும். இப்படியிருக்கும் நிலையில், பிளாஸ்டிக் அரிசியைத் தயாரித்து, தூய அரிசியுடன் கலந்து வேகவைத்தால் பிளாஸ்டிக் அரிசி வேகாமல் அப்படியேதான் இருக்கும். தூய அரிசி மட்டுமே வெந்திருக்கும்.

சரி, இந்தப் புரளிக்குப் பின்னால் இருக்கும் சில விஷயங்களைப் பார்ப்போம். வடஇந்தியாவில் பாசுமதி அரிசிபோல  பிரசித்தி பெற்றது சீனாவில் ‘வுசங்’ (Wuchang) எனப்படும் அரிசி வகை. நல்ல மணம்தரும் இந்த அரிசியின் விலை அதிகம். அதனால், மட்ட ரக அரிசியில் வாசனைப் பொருளைச் சேர்த்து வுசங் அரிசி எனப் போலியாக விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். 2010-ம் ஆண்டில் இதுகுறித்த செய்தி வெளிவந்தவுடன், சீன உணவுப் பொருள் தரச்சோதனை அலுவலர்கள் இந்தக் கலப்படத்தைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். இதைத்தான் அப்போது ‘பிளாஸ்டிக் அரிசி’ என்று அழைத்தார்கள். இதற்கும் பிளாஸ்டிக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இங்கே ‘பிளாஸ்டிக்’ எனும் சொல் ‘போலி’ என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவத்துறையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யில் எந்தவிதமான பிளாஸ்டிக்கும் பயன்படுத்துவது இல்லை. அதுபோலத்தான் இதுவும். இதை அறியாத சிலர் பிளாஸ்டிக் பொம்மை செய்வதுபோல சீனாவில் செயற்கையாகப் பிளாஸ்டிக் அரிசி தயாரிகிறார்கள் எனப் புரளியைக் கிளப்பிவிட, அது காட்டுத் தீபோலப் பரவிவிட்டது.
‘சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள்தான் இந்த வதந்தியைப் பெரிதாகப் பரப்பின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உண்மையான இயற்கை உணவு பொருள்களை விற்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி ‘இயற்கை உணவு வணிகர்கள்’ அதிகளவில் அரிசி விற்பனையில் உள்ளே நுழைந்துவிட்டார்கள்கள்.
நவீனம் என்றாலே ஆபத்து என்ற மயக்கத்தை ஏற்படுத்திவிட்டால் பாரம்பர்யம், மரபு எனும் கருத்துகள் விமர்சனமின்றிக் கொண்டாடப்படும் நிலைக்குச்செல்லும். பாரம்பர்யத்தைப் போற்றுதலுக்குரியதாக மாற்றிவிட்டால் அதன் பின்னணியில் பல பத்தாம்பசலி விஷக்கருத்துகளை விதைத்துவிடலாம் எனச் சிலர் முயல்கின்றனர்’ என எச்சரிக்கை செய்கிறார் நரேந்திர நாயக் எனும் பகுத்தறிவாளர்.
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவையெல்லாம் வெற்று வதந்திதானே ஒழிய அவற்றில் கொஞ்சம்கூட உண்மையில்லை. இன்னும் சில காலங்கள் கழித்துப் பிளாஸ்டிக் கேழ்வரகு, பிளாஸ்டிக் கம்பு என்றுகூட காணொளிகள் வந்தாலும் ஆச்சர்யமில்லை. அப்படிப் பரப்புரை செய்யப்பட்டால், உடனடியாக அதை நம்பி கலவரமடையாமல் அதிலுள்ள உண்மைகளை ஆராயவேண்டியது அவசியம்.
கட்டுரையாளர்:
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்,
முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார்,
புதுடெல்லி.


கலப்படத்தை நீங்களே கண்டுபிடிக்கலாம்!
பிளாஸ்டிக் முட்டையை எளிய முறையில் சோதனை செய்து கண்டுபிடிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கருவில் சிறு அளவு எடுத்து, அதைப்போல ஆயிரம் மடங்கு நீரில் நன்றாகக் கரைக்க வேண்டும். இந்தக் கரைசலில் அதே அளவு பியுரெட் ரியேஜென்ட் (Biuret Reagent) சேர்க்க வேண்டும். அப்போது, அந்தக் கரைசல் ஊதா நிறத்தில் மாறினால் அந்த முட்டை இயற்கை முட்டைதான். முட்டையின் வெள்ளைக்கருவில், அமினோஅமிலங்களைச் சேர்த்துப் பிணைந்து உருவாகும் பெப்டைடு (Peptide) எனும் பொருள் இயற்கையிலேயே உள்ளது. பிளாஸ்டிக் முட்டை என்றால் ஊதா நிறத்துக்கு மாறாது.
தூய அரிசியில் சமைத்த சோறு ஆறிய பிறகு, அதில் சில துளி அயோடினை விட்டால்… ஸ்டார்ச் காரணமாக அயோடின் ஊற்றிய பகுதி ஊதா நிறத்துக்கு மாறும். பிளாஸ்டிக் என்றால் மாறாது. பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில் பியுரெட் ரியேஜென்ட் (Biuret Reagent) மற்றும் அயோடின் ஆகியவை இருக்கும். இவை, எளிய வேதியியல் பரிசோதனைதான். யார் வேண்டுமானாலும் செய்து பார்க்க முடியும்.


சோற்றுருண்டையும் துள்ளிக்குதிக்கும்!
விவசாயியிடமிருந்து அரிசியை நேரடியாக வாங்கி அதை வேகவைத்துச் சோறாக்கி, உருண்டையாகப் பிடித்துத் தரையில் வீசினாலும், அது துள்ளிக்குதிக்கும் (பவுன்ஸ் ஆகும்). அரிசியில் உள்ள சில வேதிப்பொருள்கள், பிளாஸ்டிக்கை ஒத்த நீண்ட மூலக்கூறுகள் கொண்ட பாலிமர் ரகத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு வகை அரிசியிலும் இந்த மூலக்கூறுகளின் தன்மை வேறுபடலாம். இந்த வகை மூலக்கூறுகள் இருப்பதால்தான் அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றிலிருந்து இயற்கை பிளாஸ்டிக் தயார் செய்யும் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

%d bloggers like this: