ஆகஸ்ட் புரட்சி… சசிகலா குடும்பம் நீக்கம்?

கஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி     அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது.
“டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்?’’

“ஆகஸ்ட் 4-ம் தேதியோடு டி.டி.வி. தினகரன் விதித்திருந்த 60 நாள் கெடு முடிகிறது. ‘கட்சி நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தொடங்குங்கள்; செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ என்று அவரைச் சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் இப்போதே கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டனர். தினகரனும் ஆகஸ்டு 5-ம் தேதியை அதிரடி சரவெடியாக்கிவிட வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அதிரடியில் முதல் அடியாக, அ.தி.மு.க தலைமை அலுவலகப் பிரவேசம் இருக்கும் என்கின்றனர். தினகரன், தனது எண்ணத்தை  தன் அணியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள்,   எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களிடம் விவாதித்துள்ளார். அவர்களும் ‘இதுதான் சரியான மூவ் ஆக இருக்கும்’ என்று க்ரீன் சிக்னல் காட்டிவிட்டனர்.’’
‘‘ம்!’’
‘‘மாவட்டச் செயலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் அன்றைய தினம் தலைமைக் கழகத்துக்கு வருகிறார்கள். அவர்களும் டி.டி.வி ஆதரவு அணியைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து பிரமாண்ட வரவேற்பைத் தினகரனுக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.’’
“துணைப் பொதுச்செயலாளரை வரவேற்க தலைமைக் கழக நிர்வாகிகள் வருவார்களா?’’
“உச்ச நீதிமன்றத்தில் ‘சசிகலாவைக் கட்சி நிர்வாகிகள் சந்திக்கவும் அவரது ஆலோசனையைக் கேட்கவும் தடைவிதிக்க வேண்டும்’ என ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘சசிகலாவின் கட்சிக்காரர்கள், அவரிடம் ஆலோசனை கேட்க எந்தத் தடையும் இல்லை’ என்று சொல்லிவிட்டது. அதைத் தினகரனின் ஆதரவாளர்கள் பெரிய வெற்றியாகப் பார்க்கின்றனர். ‘எங்கள் கட்சிக்குச் சின்னம்மாதான் பொதுச்செயலாளர்; அவர் நியமித்த தினகரன்தான் துணைப் பொதுச்செயலாளர். அதை அமைப்புச் செயலாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் மற்றவர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டாக வேண்டும்’ என்கின்றனர்.’’
‘‘வரவேற்பு ஏற்பாடுகள் எப்படி இருக்குமாம்?’’
“ ‘ஜெயலலிதாவுக்கு எப்படி கட்சியின் அதிகார வரிசை அடிப்படையில் வரவேற்பு கொடுக்கப்படுமோ… அதேபோல வரவேற்பு கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்; தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை, அமைப்புச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அன்று ஆஜராக வேண்டும்’ எனப் பேசி வருகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களும் அன்றைய தினம் தலைமைக் கழகத்துக்கு வரும் மனநிலையில் இல்லை. அரசுப் பணியைக் காரணம் காட்டி அவர்கள் புறக்கணிக்கலாம் என்று சொல்கிறார்கள்.’’

‘‘எடப்பாடி உள்பட மற்ற அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக ஏதாவது செய்யலாம் என்று திட்டம் வைத்துள்ளார்களா?’’
“ ‘தினகரன், கட்சி அலுவலகத்துக்குள் வருவதைத் தடுக்க வேண்டும்’ எனச் சில அமைச்சர்கள் எடப்பாடியிடம் வலியுறுத்தினார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘கட்சி அலுவலகத்துக்குள் தினகரன் வந்துவிட்டால்… கட்சி முழுமையாக தினகரன் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். தினகரன் தரப்புக்குக் கட்சியைத் தாரைவார்ப்பதைவிட   ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஆட்சியையும் கட்சியையும் கொண்டு செல்லலாம். அதனால் அவர் கட்சி அலுவலகத்துக்குள் வருவதைத் தடுத்தே ஆக வேண்டும்’ என்ற ரீதியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒரு ‘மினி’ ஆலோசனையை நடத்தி உள்ளனர்.’’
‘‘ம்…’’
“அதே நேரத்தில், தினகரன் தரப்பிலிருந்து எடப்பாடி தரப்பைத் தொடர்புகொண்ட சிலர், ‘கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றும் எண்ணம் இப்போது எங்களுக்கு இல்லை. முதலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி நடத்தும் திட்டம்தான் தினகரனுக்கு இருக்கிறது’ எனச் சொல்லியுள்ளார்கள். இதனால் எடப்பாடி தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இதே காரணத்தை ஓ.பி.எஸ் தரப்பிடமும் எடுத்துச் சொல்லி, இணைப்புப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி உள்ளது எடப்பாடி அணிக்குள் இருக்கும் ஒரு அணி. இதற்கிடையில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்…’’
“அது என்னவாம்?’
‘‘சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க-வில் இருந்து அதிரடியாக நீக்கப் போகிறார்கள் என்பதுதான் அது. சசிகலாவையும் சேர்த்து நீக்கப்போகிறார்களா அல்லது அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை நீக்கப் போகிறார்களா எனத் தெரியவில்லை. தினகரனை அவர் வகிக்கும் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்குவார்களாம். கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத நடராசன், திவாகரன் ஆகிய மற்றவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பார்களாம். ஆகஸ்ட் 5-ம் தேதி தலைமைக் கழகத்துக்குத் தினகரன் வருவதற்கு முன்னதாக இந்தக் காரியங்களைச் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ‘இதற்கு அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் எடப்பாடி வாங்கிவிட்டார். பெரும்பான்மை  எம்.எல்.ஏ-க்கள் இதனை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தினகரன் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்களையும் மனமாற்றம் செய்துவிட்டார்கள். மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் எடப்பாடி தனித்தனியாக போன் போட்டு பேசிவிட்டார். அ.தி.மு.க ஆட்சி மன்றக்குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியவை விரைவில் கூடலாம்’ என்றும் சொல்கிறார்கள்!’
‘‘ம்..’’
‘‘செவ்வாய்க்கிழமை, கோட்டையில் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதே நேரத்தில் பன்னீர் அணியினரும் பரபரப்பாக ஆலோசனையில் இறங்கினர். இரண்டு தரப்புக்கும் இடையே அவசரமாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ‘இணைப்புக்குத்தானே தினகரன் கெடு விதித்தார். இணைந்துவிட்டால் அவர் கட்சிக்குள் தலையிட மாட்டார் அல்லவா?’ என்கிற ரீதியில் பேசிக் கொண்டார்களாம்.’’  
‘‘காட்சிகள் இவ்வளவு துரிதமாக மாறுவதற்கு என்ன காரணம்?”
“ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எனவே, அதற்கு அ.தி.மு.க-வைத் தயார்படுத்த வேண்டி இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பி.ஜே.பி மேலிடம் பல்வேறு நெருக்கடிகளைத் தருகிறது. சசிகலா, தினகரன் இல்லாத அ.தி.மு.கதான் அவர்களது இலக்கு.’’
‘‘இதைத் தினகரன் எப்படி சமாளிப்பார்?’
‘‘என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் தினகரன். ஆகஸ்ட் 5 அன்று தலைமைக் கழகம் செல்வது அவரது முதல் இலக்கு. அடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறார். தனது முதல் பொதுக்கூட்டத்தை       ஓ.பி.எஸ்-ஸின் கோட்டையான தேனி மாவட்டத்திலிருந்து தொடங்க வேண்டும் எனத் தினகரன் விரும்புகிறார். பெரியகுளம் தொகுதியில்தான் தினகரனின் அரசியல் பயணம் தொடங்கியது. அதனால், பெரியகுளம் தொகுதியை சென்ட்டிமென்டாகப் பார்க்கிறார். தேனியில் ஆரம்பித்து, கோவை, ஈரோடு, கரூர், திருவள்ளூர் எனச் சுற்றுப்பயணப் பட்டியல் திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் கூட்டத்துக்குக் குறைவு இருக்கக்கூடாது எனத் தினகரனிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. ‘இனியும் அமைதியாக இருந்தால், தன்னை முழுமையாக ஓரம்கட்டிவிட்டு எடப்பாடி தனி ஆவர்த்தனம் செய்துவிடுவார்’ என்றும் அவர் கருதுகிறார். அதனால், கட்சியைப் பலப்படுத்துவதோடு, தன் பலத்தையும் நிரூபித்து எடப்பாடிக்கு செக் வைக்க நினைக்கிறார்.’’

‘‘அந்தத் திட்டத்தை முன்வைத்துத்தான் தஞ்சாவூர் துக்க வீட்டிலும் மீட்டிங் நடந்ததா?’’
‘‘கட்சியைத் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தினகரன், திவாகரன் ஒற்றுமையாக இருப்பது போல பேசுகின்றனர். இந்த ஒற்றுமை, கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் வரைதான் இருக்கும். அதன்பிறகு மீண்டும் அதிகார கோதாவில் இருவரும் இறங்க ஆரம்பித்துவிடுவார்களாம்.’’
‘‘அங்கு நடராசன் தலை தென்படவில்லையே?’’
‘‘குற்றாலத்துக்கு ஓய்வெடுக்கச் சென்றவருக்கு அங்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அவரால் அங்கிருந்து துக்க வீட்டுக்கு வர முடியவில்லை. அவர் சார்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் வந்திருந்தார். ஆளுயர மாலையைக் கொண்டு வந்து சந்தானலெட்சுமிக்கு வைத்து அஞ்சலி செலுத்தினார். வெளியில் வந்தவரிடம் ‘தினகரனைப் பார்த்துவிடுங்கள்’ எனச் சிலர் சொல்ல, அவர்களை முறைத்துக்கொண்டே போனவர், நேராக திவாகரனைப் போய் கட்டிக்கொண்டார். அதன்பிறகு சில நொடிகளில் காரில் ஏறிப் பறந்துவிட்டார்.’’
‘‘ஜெயா டி.வி-யில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகிறதே..?’’
‘‘ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவர் சம்பந்தப்பட்ட ‘பாஸிட்டிவ்’ செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துத் தலைப்புச் செய்திகளாகவும் முக்கியச் செய்திகளாகவும் ஒளிபரப்புவார்கள். நலத்திட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளுக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படும். இவற்றைத் தவிர்த்து, நாட்டில் நடக்கும் எந்தச் செய்தியாக இருந்தாலும்… அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தாலும், அவற்றுக்குக் கடைசி இடம்தான். இப்போது அந்தத் தொலைக்காட்சியின் பொறுப்பு, சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியின் மகனான விவேக் ஜெயராமன் கையில் உள்ளது. ‘அனைத்து செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். கட்சியின் செய்திகளும் இருக்கட்டும்; அவற்றுக்கு இணையாக மக்கள் பிரச்னை தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்; தினகரன் அணி, எடப்பாடி அணி, திவாகரன் ஆட்கள், ஓ.பி.எஸ் அணி என்று பார்க்க வேண்டாம். அனைத்துக் களங்களுக்கும் நமது நிருபர்கள் சென்று செய்திகளைக் கொண்டு வரட்டும்’ என உத்தரவிட்டுள்ளார் விவேக். கடந்த சில வாரங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றங்கள், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளதாம்.’’
‘‘அவர்கள் பிசினஸில் குறியாக இருக்கிறார்களா?’’
“ஹா… ஹா… தன்மேல் உள்ள கறைகளைத் துடைக்க ‘நீட்’ தேர்வு விவகாரத்தைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி என நினைக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தாண்டு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறவேண்டும் என்று டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். விஜயபாஸ்கரும் எடப்பாடியும் பிரதமரைச் சந்தித்தபோது ‘நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கிச் சொன்னார் விஜயபாஸ்கர். ‘ஹெல்த் மினிஸ்டர், ஹெல்த்தி மினிஸ்டரா பேசுகிறார்’ என்று எடப்பாடியிடம் கமென்ட் அடித்துள்ளார் மோடி. ‘சட்டப்படி என்ன செய்யமுடியும் எனத் துறை அமைச்சரிடம் ஆலோசனை செய்கிறேன்’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் மோடி.’’

‘‘சட்டச் சிக்கல் இருக்கிறது என்று மோடி சொல்லியுள்ளாரே?’’
‘‘அதை மனதில்வைத்துத்தான் எடப்பாடியும், தமிழக அமைச்சர்களுடன் டெல்லியில் வைத்தே ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பி.ஜே.பி முக்கியப் புள்ளி ஒருவரைத் தொடர்புகொண்டு ‘இந்த ஆண்டுக்காவது விலக்கு வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளனர். ‘மத்திய அரசை நம்பித்தான் இன்னும் மெடிக்கல் கவுன்சலிங்கையே தொடங்காமல் இருக்கிறோம்’ என்றனர்.  எடப்பாடியும் ‘நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றால்தான் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியும் என நம்புகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் மூன்றாவது முறையாக விஜயபாஸ்கர் டெல்லி சென்று மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவைச் சந்தித்துள்ளார். ‘இந்த ஆண்டு மட்டும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்.’’
‘‘மணல் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதே?’’
‘‘ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், அதிலும் ஏராளமான குளறுபடிகள்.  பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு தனி சிண்டிகேட் நடத்துகின்றனர் சிலர். அவர்கள் ஆன்லைன் புக்கிங் லாரிகளை ஓரம்கட்டிவிட்டு, தங்கள் லாரிகளில் மணலை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆன்லைனில் புக் செய்த லாரிகளுக்கு மணல் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில் இந்தப் பிரச்னையால் அடிதடி. கடலூர் மாவட்டம் மதகளிர்மாணிக்கம் குவாரியில் நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரத்தின் மீது சிலர் நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆளும்கட்சியின் அடாவடித்தனத்தைக் கண்டித்துத்தான், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் குவாரியிலும் விரைவில் பஞ்சாயத்து ஏற்படும் என்கிறார்கள்’’ என்றபடி பறந்தார் கழுகார்!

%d bloggers like this: