எடப்பாடி பழனிசாமி வியூகத்துக்குத் திணறும் தினகரன்!

ஜெண்டாவே இல்லாமல் ஒரு கூட்டத்தை நடத்தி, தினகரன் தரப்புக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், தினகரன் தரப்பைத் திணறடிக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  அடித்துள்ள பழனிசாமி, அ.தி.மு.க வின் சூத்திரதாரியாகவே  இப்போது பார்க்கப்படுகிறார்.

அ.தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் 5 – ம் தேதி அன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வருகை தரவுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதுதான் பழனிசாமிக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பதை, கடந்த சில நாள்களாகவே தனது ஆதரவு அமைச்சர்கள் மூலம் அவ்வப்போது சூசகமாக மீடியாக்களிடம் தெரிவித்து வந்த அவருக்கு இது ஷாக் தந்தது. கிட்டத்தட்ட தினகரனிடமிருந்தும் கடந்த 2 மாதங்களாக எதிர்ப்பு அரசியல் தென்படாததால் இயல்பாகவே அவர் ஒதுங்கியிருப்பதாக நினைத்த நேரத்தில் இந்த அறிவிப்பு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தினகரன் கட்சி அலுவலகத்துக்குள் வந்தால் கட்சியினைக் கட்டுப்படுத்தும் சக்தியாக அவர் உருவாகிவிடுவதோடு, கடந்த காலத்தைப்போன்றே காலம் முழுவதும் பவ்யம் காட்டியே அரசியல் செய்யவேண்டியதிருக்கும் என்ற அச்சம் எடப்பாடி தரப்புக்கு. எப்படிப்பார்த்தாலும், ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலா குடும்பத்தினரிடம் இறங்கிச் செல்வதை விரும்பவில்லை எடப்பாடி தரப்பு. அதனால் கட்சியில் மீண்டும் தினகரன் கை ஓங்குவதைத் தடுக்கும் முயற்சியாகவே அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்தான் நேற்றைய அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்.

எதற்காகக் கூட்டம்… கூட்டத்தின்  பொருள் என்ன என்று எதையுமே சொல்லாமல் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் எம்.எல்.ஏ-க்களையும் அழைக்கலாம் என்று ஆலோசனை செய்துள்ளார்கள். ஆனால், இப்போது அவர்கள் வேண்டாம், தலைமைக் கழகத்தின் நிர்வாகிகளை வைத்துக் கூட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு போனில் தகவல் சொல்லியுள்ளார்கள். எதற்காகக் கூட்டம் என்றுகூடச் சொல்லாமல் ‘கூட்டம் நடக்கிறது; வந்துவிடுங்கள்’ என்று மட்டும் சொல்லியுள்ளார்கள்.

எடப்பாடியின் திட்டமே, தினகரன் தரப்புக்கு கிலியை ஏற்படுத்த வேண்டும் என்பதால், கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற தகவலையும் மீடியாக்கள் மூலம் கசியவிட்டனர். தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் ஆதரவாளர்களும் இருப்பது எடப்பாடி தரப்புக்குத் தெரியும். ஆனால், அவர்களையும் கூட்டத்துக்கு அழைக்கச் சொல்லியுள்ளார். 

கூட்டம் தொடங்கும் நேரம்வரை பரபரப்பாகவே இருந்தது. கூட்ட அரங்குக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் தொடங்கியதும், செங்கோட்டையன் வரவேற்புரை நிகழ்த்த வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அனைவரும் எடப்பாடியின் பேச்சை  ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் “எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்த வேண்டும். நான்கு ஆண்டு அம்மாவின் ஆட்சி சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று உப்புச்சப்பில்லாத விசயங்களைப் பேசி, கூட்டத்தை முடித்துவிட்டார். கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள், ‘இதைப் பேசுவதற்கு எதற்கு எங்களை அழைக்கவேண்டும்’ எனப் புலம்பித்தள்ளினர்.

ஆனால், எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் “கூட்டம் கூட்டியதே தினகரன் தரப்புக்குக் குழப்பத்தை ஏற்படுத்தத்தான். என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற டென்ஷனை தினகரன் தரப்புக்கு ஏற்படுத்தினார். கூட்டம் முடிந்து சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் தனி அறையில் அமர்ந்து பேசிய தகவல் தினகரன் தரப்புக்குச் சென்றுள்ளது. இவையெல்லாமே தினகரன் தரப்புக்கு மனரீதியாக பலவீனத்தை ஏற்படுத்துவதற்காகவே. சூத்திரதாரி இனி எடப்பாடி பழனிசாமிதான். இனி ஓ.பி.எஸ், தினகரன் என்பதெல்லாம் கிடையாது!” என்கிறார்கள்.

ஆடுபுலி ஆட்டம், அ.தி.மு.க.வில் உச்சகட்டத்தை எட்டியுள்ளதை மட்டும் அறியமுடிகிறது.

%d bloggers like this: