தினகரனா… நானா… பார்த்துவிடுகிறேன்!’ – ஆலோசனையில் கொந்தளித்த முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘இந்த முறை தினகரனா… நானா… என்று பார்த்துவிடுகிறேன்’ என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க-வில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, தீபா அணி என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே அக்கப்போர் நடந்துவந்தது. சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி முடிவுசெய்தபிறகு, இந்த இரண்டு அணிகளுக்குள் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலா அணியிலிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உள்ள மோதல், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் கெடு, ஆகஸ்ட்  4-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வரத் தயாராகிவிட்டார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், தினகரனுக்கு எதிராகப் பெரும்பாலான அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்களிடம் பேசினோம். “முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தினகரன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வந்தால், அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, தினகரனை கட்சி அலுவலகத்துக்கு வர விடாமல் தடுக்க வேண்டும். மேலும், அவருக்குக் கட்சியில் செல்வாக்கு இல்லை என்பதைத் தொண்டர்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால், ஆகஸ்ட் 5-ம் தேதி அவரால் கட்சி அலுவலகத்துக்கு வரமுடியாது’ என்று மூத்த அமைச்சர் ஒருவர் பேசினார். அதை, மற்ற அமைச்சர்களும் ஆமோதிப்பதைப்போல தலையசைத்தனர்.

இதையெல்லாம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அமைச்சர்களின் கருத்துகளைக் கேட்டபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ‘ஏற்கெனவே, சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கக்கூடாது என்பதை நாம் முடிவுசெய்துவிட்டோம். கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால், தினகரன் நமக்கே மிரட்டல் விடுக்கும் தொனியில் கட்சி அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் வரவுள்ளதாகத் தகவல் அனுப்பியுள்ளார். ‘ஆட்சியைக் கலைத்துவிடுவோம்’ என்று அவரது ஆதரவாளர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இனிமேலும் நாம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லதல்ல.

தினகரனா… நானா… என்பதை இந்த முறை முடிவுசெய்துவிடுவோம். தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசிப் பார்ப்போம். நம்முடைய முடிவுக்கு அவர்கள் கட்டுப்படவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டால், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களுடன் சமரசம் செய்துகொள்ளலாம்’ என்று கொந்தளித்துள்ளார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிராக சில அமைச்சர்கள், தினகரனுடனும் சமரசமாகச் செல்லலாம் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக இன்று மாலை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் ஒன்றிணைவது தொடர்பான தகவல், மூன்று அமைச்சர்கள்மூலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் சொல்லப்பட்டுள்ளது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டதாம். முதலாவதாக, ‘எங்கள் அணியில் உள்ளவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பதவிகளும் அமைச்சரவையில் இடமும் கொடுக்க வேண்டும். மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் வழங்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளதாம். இந்தத் தகவல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகே பொதுச் செயலாளர் பதவிகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அமைச்சரவையில் இடம் அளிப்பதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. 

ஆலோசனைக் கூட்டம்குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”கட்சியும் ஆட்சியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும், கட்சி அலுவலகத்துக்கு வழக்கம்போலச் செல்கிறோம். தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்லப்படும் அனுமானத்துக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசியவர்கள், “கட்சி அலுவலகத்துக்குச் செல்வது தொடர்பாக நீண்ட நேர ஆலோசனை நேற்று நடந்தது. கட்சி அலுவலகத்துக்கு வருபவர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் வருவதாக உறுதியளித்துள்ளனர். எங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இதனால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக ஆலோசனை நடத்திவருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்குப் பிறகு எங்களது முடிவை அறிவிப்போம். நாங்கள் விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் சேர்வதை வரவேற்கிறோம்” என்றனர்.

தினகரன் கிளப்பிய புயலால், அ.தி.மு.க-வில் பிளவுபட்ட அணிகள் ஒன்றிணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

%d bloggers like this: