122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது!’ – டி.டி.வி.தினகரன் அதிரடி

டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ”நான்தான் சசிகலாவிடம் பேசி பிரிந்து கிடக்கும் அணிகளை இணைப்பதற்கு 60 நாள்கள் அவகாசம் கொடுக்கலாம் என்று யோசனை கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதன்படியே இந்தக் கால அவகாசம் அளிக்கப்பட்டது. சீக்கிரமே அனைவரும் பயம் தெளிந்து கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள். இரு அணிகளும் இணைந்தால் கட்சிக்கு நல்லதுதான். இணைந்த பின்பு என் நடவடிக்கை பற்றி தெரியும். நான், ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமைக் கழகத்துக்கு நிச்சயம் செல்வேன். எப்போது செல்வேன் என்பதைப் பொதுத் தளத்தில் கூறுவேன். நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சி மூன்று மாதங்களாகச் செயல்படாமல் இருக்கிறது. 122 எம்.எல்.ஏ-க்கள் என் பக்கம்தான் உள்ளார்கள். விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கும் தமிழக அரசுக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியவர், 

மேலும், ”மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக் கூட்டங்கள் நடக்கும். பொதுக் கூட்டத்தில் என் நிலைப்பாடு மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்குவேன். பொறுத்திருந்துப் பாருங்கள். சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா மீது நிச்சயம் வழக்குத் தொடரப்படும். சசிகலாவைப் பல்வேறு அவதூறுகளுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்” என்று கூறியவரிடம் ‘அ.தி.மு.க அரசை கமல் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.’ 

அதற்கு அவர், ”அரசியலுக்கு வருவதும் வராததும் கமலின் சொந்த விஷயம். அரசியலுக்கு கமல் வந்தால் நல்லதுதான். அரசியலுக்கு வந்து அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும். அவர் மட்டுமல்ல, யார் வந்தாலும் நான் வரவேற்பேன். ஊழல் ஆட்சி நடக்கிறது என்று கமல்ஹாசன் சொன்னால், அதற்கு ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவர் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பேசுவது போல் ஆகிவிடும்” என்று விளக்கினார். 

%d bloggers like this: