எக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் – டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி

றிவியல் வளர்ச்சியில் உள்ளுறுப்பு களின் செயல்பாடுகளைக் கண்டறிய எக்ஸ்-ரே, ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஞ்சியோகிராம்  உள்ளிட்ட சில சோதனைகளில் உடல் பாகங்களைப் பரிசோதிக்கும்போது அதிகளவில் கதிர்வீச்சு செலுத்தப்படுவதால் டாக்டர்கள், டெக்னீஷியன்கள், நோயாளிகளின் உடன் வருபவர்கள் என அனைவரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மருத்துவமனைகளில் அவர்கள் காரீய ஏப்ரன் அணிவது கட்டாயம்.  5 கிலோ எடை, மறுசுழற்சி செய்யவோ, மடித்து வைக்கவோ முடியாதது போன்ற காரணங்களால் இந்த ஏப்ரனைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள்  நிறைய இருக்கின்றன. 

காரீயத்தால் ஆன இந்த ஏப்ரனுக்கு மாற்றாகவும் மறுசுழற்சி செய்யும் வகையிலும் அணிவதற்கு எளிதான ஏப்ரனைக் கண்டறிந்துள்ளார் மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் எக்ஸ்ரே பிரிவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார். இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்த ‘அசோசியேஷன் ஆஃப் மெடிக்கல் பிசிஸ்ட் ஆப் இந்தியா’ இவருக்குத் தேசிய அளவில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. செந்தில்குமார் இதற்கு முன் கேன்சர் நோயாளிகளுக்குத் துல்லியமாக ரேடியோதெரபி அளிக்கும் கருவி, சிடி ஸ்கேன் எடுப்பதை எளிமையாக்கும் சாதனம் எனத் தனது பிற கண்டுபிடிப்புகளுக்கும் தேசிய அளவில் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
‘‘பொதுவா மனித உடல் 20 sieverts அளவு கதிர்வீச்சைத் தாங்குற தன்மை கொண்டது. எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுக்குற அறை, கதிர்வீச்சு வெளியே போகாதபடி கட்டப்பட்டிருக்கும். டெக்னீஷியன்ஸ் தொடர்ந்து பல மணி நேரத்துக்குக் கனமான ஏப்ரனைப் போட்டுக்கிட்டே வேலை பார்க்க ரொம்பச் சிரமப்படுவாங்க. ஏப்ரனோட வெயிட் அதிகம் என்பதால் முதுகுவலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். அதனால பலர் இந்த ஏப்ரனைத் தவிர்க்கிறதைப் பாத்திருக்கேன். சில நோயாளிகளால எழுந்து எக்ஸ்ரே ரூமுக்கு வரமுடியாது. அந்தச் சமயத்துல நோயாளி இருக்கும் இடத்துக்கு எக்ஸ்ரே மெஷினைத் தள்ளிட்டுப் போயி எக்ஸ்ரே எடுக்க வேண்டிய சூழலும் ஏற்படும். இந்தச் சிக்கல்களைப் போக்க நடைமுறையில இருக்கிறதைவிட எளிமையான ஏப்ரனை, ஐந்து வருடங்கள் ஆய்வு பண்ணிக் கண்டுபிடிச்சேன். என்னோட ஏப்ரன் பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட்னு மூணு மெட்டீரியல்களால் ஆனது. நடைமுறையில் இருக்கிற காரீயம் ஏப்ரனைவிட 20 சதவிகிதம் எடை குறைவானது. உபயோகிக்க வசதியானது. மடிச்சு வைக்கவும்  மறுசுழற்சி செய்யவும் முடியும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது.   இந்தியா முழுவதும் இந்த ஏப்ரனின் பயன்பாட்டைப் பிரபலப்படுத்துவதே என் லட்சியம்’’ என்கிறார் செந்தில்குமார் தன்னம்பிக்கையுடன்.

%d bloggers like this: