விளையாட்டின் முக்கியத்துவம்!

நமது இயல்பு வாழ்க்கைக்கு, உழைப்பு, உணவு, அத்தியாவசிய தேவைகளாக இருக்கின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும், நம்முடைய ஆரோக்கியத்தை வலுவூட்டுகின்றன. ஆனால், காலையில் எழும் போது சோம்பல் தலைதூக்குகிறது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று, இன்றைய காலையை கடத்துகிறோம். இதனால், நமது சுறுசுறுப்பு குறைகிறது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது.

உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. விளையாட்டு இதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கம், இறுக்கம், அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையை தருகின்றன.
நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது. எனவே, உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்துக்கு மாற்றாக, நடைபயணம், நடைபயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடை பயிற்சியால், ரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன், உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன், நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது.
நடப்பது, நமது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடல் வலிமைக்கு வித்திடுகிறது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது. பல்வேறு விளையாட்டுகளை, சிறு வயதில் விளையாடினாலும், பணிக்கு சென்ற பின், இதுபோன்ற அம்சங்கள் மறந்து விடுகின்றன. நீச்சல், வேக ஓட்டம், மெது ஓட்டம், உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்வது, தோட்ட வேலை, நாட்டியம் ஆகியவை, மிகச்சிறந்த பயிற்சிகளாக உள்ளன. இவையெல்லாம் எனக்கு முடியுமா? என்றால், நடைபயிற்சியாவது மேற்கொள்ளலாம். நடைபயிற்சி எளிதானதும் கூட. நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுனர்கள், தனியாக மைதானம், இடம் தேவையில்லை.
அனைத்து நகரங்களிலும், காலை நேரங்களில், கூட்டம், கூட்டமாவோ, தனியாகவோ நடந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மாற்றத்துக்கான அறிகுறியாக தெரிகிறது. மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட, நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வேண்டும் என, மருத்துவர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.
அதிகாலையில் எழுந்து நடக்க வேண்டும் என்று, எதற்காக வலியுறுத்துகிறார்கள் என்றால், சுத்தமான காற்றை சுவாசிக்க வழி வகுக்கும். அதிகாலையில் எழுந்தாலே, அன்றைய நாளின் சோம்பலை முற்றிலுமாக தவிர்க்க முடியும். பணிபுரியும் இடங்களில், கவனத்தை செலுத்த வாய்ப்பு ஏற்படும். குழந்தைகள் மத்தியிலும், இதே நடைமுறையை, மெல்ல, மெல்ல பழக்கப்படுத்தினால், அவர்களும் நாளடைவில், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த துவங்குவர்.
இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது என்றாலும் கூட, வீட்டு வளாகத்தில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

%d bloggers like this: