ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை!”

ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுற்றியபடி வந்த கழுகாரைப் பார்க்க விநோதமாக இருந்தது. ‘‘இதைச் சுழற்றி விளையாடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! விஜயகாந்த் விட்ட பம்பரத்தின் 2.0 வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். உலகம் முழுக்கப் பள்ளிக் குழந்தைகளின் விருப்ப விளையாட்டாக இது மாறியிருக்கிறது. ‘குழந்தைகளின் மன அழுத்தத்தை நீக்கும், கற்றல்

குறைபாட்டுக்குத் தீர்வு தரும்’ என்றெல்லாம் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இதைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை விளையாடும் குழந்தைகளுக்குக் கவனிக்கும் திறன் குறைந்து, கல்வியில் ஆர்வம் போய்விடுவதாகத் தெரிய வந்துள்ளது. அதனால், சில பள்ளிகளில் இதைத் தடை செய்துள்ளார்கள்’’ என்று சீரியஸான விளக்கமும் கொடுத்த கழுகாரிடம், நம் ஓவியர் வரைந்து வைத்திருந்த இந்த இதழ் அட்டைப் படத்தைக் காட்டினோம்.

ஃபிட்ஜெட் ஸ்பின்னரில் தடுமாறும் தினகரனைப் பார்த்துவிட்டு புன்னகை புரிந்தவர், ‘‘ஜூ.வி எப்போதும் டிரெண்டிங்கில்தான் இருக்கும்’’ என்று தட்டிக்கொடுத்துவிட்டு அரசியல் பரபரப்புகளுக்குள் நுழைந்தார். “சுதந்திரத் தினக் கொண்டாட்டத்துக்கு ஜார்ஜ் கோட்டை தயாராகி வருகிறது. ஆனால், கொடியேற்றுவதற்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும் என்று கங்கணம் கட்ட ஆரம்பித்துவிட்டது தினகரன் தரப்பு” என்றார்.

‘‘முதல்வரைக் கொடியேற்ற விடாமல் தினகரன் தரப்பு தடுத்துவிடுவார்களா?’’
‘‘தினகரன் கொடுத்த 60 நாள் கெடு எந்த முன்னேற்றத்தையும்         அ.தி.மு.க-வில் கொடுக்கவில்லை. இரு அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையை முடக்கியதோடு, தினகரன் உள்பட சசிகலா உறவுகளை ஒதுக்கி வைப்பதில் எடப்பாடி பழனிசாமி அணி முனைப்பு காட்டியதால் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் தினகரன். அதனால்தான், ‘ஆட்சியே போனாலும் பரவாயில்லை, கட்சியை நாம் கைப்பற்றிவிட வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தினகரன். அவரது தரப்பிலிருந்து இரண்டு முறை எடப்பாடியைச் சந்தித்துள்ளார் அவருடைய ஆதரவாளரான தளவாய் சுந்தரம். ஆனால், எடப்பாடியின் பதில் தினகரனை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. அதனால், ‘கட்சி இருந்தால்தான் ஆட்சியைக் காப்பாற்ற முடியும். கட்சி என்னிடம்தான் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கு எந்த விலையும் கொடுக்கத் தயார் என்கிற நிலையில் தினகரன் இருக்கும்போது, ஆட்சி பற்றி அவர் கவலைப்படவா போகிறார்? முதல்வரை நிம்மதியாகக் கொடியேற்றவிடாமல் தடுக்கும் வகையில் சில காரியங்களில் இறங்கி இருக்கிறார் தினகரன். ஆனால்…’’
‘‘என்ன ஆனால்..?’’
‘‘கடைசியாக டெல்லியில் இருந்து வந்த தகவலால் ‘திக்’ என்று இருக்கிறார் தினகரன். சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி, தனது ஆட்சிக்கு தினகரனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்று சொல்லி விட்டு வந்துள்ளார். ‘நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை இந்த ஆட்சி அப்படியே நிலைக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதுதான் எங்களது திட்டம். அதற்குமுன் தமிழக அரசைக் கலைக்க விடமாட்டோம்’ என்று உத்தரவாதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், மோடிக்கு நெருக்கமான தமிழகப் பிரமுகர் ஒருவரை நீண்ட சமரசத்துக்குப் பிறகு  தினகரன் சந்தித்துள்ளார். ‘நீங்கள் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதையோ சுற்றுப்பயணம் செய்வதையோ நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் இறங்கினால், உங்களைச் சிறைக்குள் அனுப்பும் திட்டத்தில் டெல்லி மேலிடம் கவனமாக இருக்கிறது. ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான்’ என்று ‘அன்பாக’ சொல்லியுள்ளார். அதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் லேசாக அவர் கோடிட்டுக் காட்டியதாகத் தெரிகிறது. இதில் ஆடிப் போயிருக்கிறார் தினகரன். இதனால்தான் கட்சியினர் சந்திப்பு குறித்தும், கட்சி அலுவலகம் போவது குறித்தும் முடிவு அறிவிப்பதில் ஸ்ருதி குறைந்துவிட்டது’’
‘‘அப்படியானால் அவர் என்ன செய்வார்?’’
‘‘கட்சி அலுவலகத்துக்கு வருவதைவிட தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தில்தான் ஆர்வமாக இருக்கிறார் தினகரன். ‘ஆடி மாதம் முடிந்த பிறகே தலைமை அலுவலகத்துக்குள் வருவது நல்லது’ என தினகரன் நினைக்கிறார். தினகரன் தலைமை அலுவலகத்துக்கு இப்போது வரமாட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் நம்புகிறது. ஒருவேளை சிறைக்கு அஞ்சாமல் கட்சி அலுவலகத்துக்கு வந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றால் வேறு வழிகளில் தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிடுகிறது எடப்பாடித் தரப்பு.’’
‘‘எடப்பாடியும் அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறாரே…?’’
‘‘எதற்காகக் கூட்டத்தைக் கூட்டினார் என்று கூட்டம் முடிந்து வந்தவர்களுக்கே தெரியவில்லை. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தவேண்டும்’ என்ற கருத்தைத்தான் பிரதானமாகச் சொல்லியுள்ளார் எடப்பாடி. கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர்கள் சிலருடன் தனி அறையில் அரை மணி நேரம் ஆலோசனை வேறு நடத்தியுள்ளார். தினகரனுக்காக என்று அ.தி.மு.க  தலைமை அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட அறையை இப்போது எடப்பாடிதான் பயன்படுத்துகிறார். அந்த அறையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. கூட்டத்தில் தினகரன் பெயரையோ, பன்னீர்செல்வம் பெயரையோ இவர்கள் பயன்படுத்தவில்லை. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்குப் பிரதமர் வர நேரம் கேட்டிருந்தோம். அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளது’ என்று அமைச்சர்களிடம் சொல்லியுள்ளார் எடப்பாடி. பிரதமர் டிசம்பர் இறுதியில் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் பவள விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வருகிறாராம். அப்போது சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவையும்      எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையும்  வைத்துவிடலாம் என எடப்பாடி நினைக்கிறாராம்.’’
‘‘எடப்பாடி நடத்திய கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்களும் பங்கேற்றார்களாமே?’’
‘‘தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகளில் தினகரனால் நியமிக்கப்பட்டவர்கள் சிலர் இப்போதும் உள்ளார்கள். செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரே சசிகலாவினால் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள்தானே? அதே போல் தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ‘இவர்கள் இருந்ததால்தான் தினகரன் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்துவிட்டார் எடப்பாடி’ என்கிறார்கள். தினகரன் பற்றி கருத்துச் சொல்ல அமைச்சர் ஜெயக்குமாரைத்தான் பயன்படுத்துகிறார்கள். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசும்போதுகூட, ‘முதல்வர் பழனிசாமி வழிகாட்டலில் கட்சியும் ஆட்சியும் சென்று கொண்டிருக்கிறது’ என்று சொல்லி கட்சியும் ஆட்சியும் எடப்பாடி கையில்தான் உள்ளது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார். ஜெயக்குமாரின் பேச்சு தினகரன் தரப்பில் கடும் டென்ஷனை ஏற்படுத்திவிட்டது.’’
‘‘ம்!’’
‘‘தினகரன் தரப்பிலிருந்து ஜெயக்குமாருக்கு எதிராக வெற்றிவேல் களம் இறக்கப்பட்டுள்ளார். ‘ஜெயக்குமார் தொடர்ந்து இப்படி பேசிக்கொண்டிருந்தால் கட்சிப் பதவியும், அமைச்சர் பதவியையும் இழந்துவிடுவார்’ என்று வெற்றிவேல் சொல்லியுள்ளார். எடப்பாடி அணியில் முடிவு எடுப்பவர்கள் ஒதுங்கிக்கொண்டு, ஜெயக்குமாரை பலியாடு ஆக்குகிறார்கள் என்ற தகவலும் உலவுகிறது. ‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்போது ஆல் இன் ஆலாக இருக்கிறார்கள். அ.தி.மு.க-வையே கொங்கு கட்சியாக மாற்ற துடிக்கிறார்கள். இது தெரிந்தும் அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுப்பது முட்டாள்தனமானது’ என ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை சொல்லியிருக்கிறார்களாம். இன்றைய நிலையில் ஆட்சியின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக கொங்கு மண்டலத்தின் அமைச்சர்கள்தான் உள்ளார்கள். இதுவரை தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழாவை, அரசு சார்பில் இவ்வளவு பிரமாண்டமாக நடத்தியதில்லையாம். இந்த ஆண்டு முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டதை அ.தி.மு.க-வில் இருக்கும் பலரும் ரசிக்கவில்லையாம். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரை ‘கொஞ்சம் ஒதுங்கி இருங்கள். அடிக்கடி என்னோடு போட்டோவில் வர வேண்டாம்’ என்று எடப்பாடி சொல்லி இருக்கிறாராம். ஆனால், அவர்கள் இருவரும் முதல்வருடன் அடிக்கடி பேசிச் செயல்படுகிறார்களாம். ‘இந்த மூவர் எடுப்பதே முடிவாக இருப்பதால், மற்ற சீனியர் அமைச்சர்கள் எரிச்சலில் புழுங்கித் தவிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள்.’’
‘‘இரண்டு அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஜெயக்குமார் சொல்கிறாரே?’’
‘‘இணைப்புக்கு இப்போது சாத்தியமில்லை என்று ஓ.பி.எஸ் தரப்பில் உறுதியோடு சொல்கிறார்கள். ‘இணைப்புப் பேச்சுவார்த்தைக்குக் கதவுகள் திறந்திருக்கின்றன’ என்று ஜெயக்குமார் சொன்ன மறுதினமே, ‘தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை’ என்று பன்னீர் அணியின் மைத்ரேயன்அறிக்கை விட்டார். அதோடு  ‘எடப்பாடி ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது’ என பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இணைப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை. ‘பொதுச்செயலாளர் குறித்த தேர்தல் ஆணையத் தீர்ப்பு வரும் வரை இணைப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’ என்ற முடிவில் பன்னீர் உள்ளார்.’’
‘‘நடராசனும் இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியுள்ளாராமே?’’
‘‘ஆமாம்! இரண்டு அணிகளும் இணைவதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று நடராசனும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று இணைந்தால் ‘பொதுச்செயலாளர் பதவியோடு, முதல்வர் பதவியும் வேண்டும்’ என்கிறார் பன்னீர். எடப்பாடியோ இனி முதல்வர் பதவியை ஒரு நிமிடம்கூட விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. இந்த விடாக்கண்டன்… கொடாக்கண்டன்களை வைத்து என்ன செய்ய முடியும்?’ என்று கமென்ட் அடித்துள்ளார். ‘அதிகாரம் இருக்கிறவரைதான் இவங்க இரண்டு பேரும் ஆடுவாங்க… அதிகாரம் போனதுக்கு அப்புறம் கட்சி தன்னால நம் கைக்கு வந்துடும்’ என்றும் நடராசன் சொல்லியுள்ளார்.’’
‘‘பி.ஜே.பி கூட்டணிக்குப் போகும் திட்டத்தில் இரண்டு அணிகளும் உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறதே?’’

‘‘ஜெயக்குமார், ‘மத்திய அரசில் நாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை’ என்று சொன்னாலும், டெல்லியில் நடந்த கதை வேறு. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் எங்களை பி.ஜே.பி கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ளுங்கள் என்று வலியக் கேட்டுள்ளார்கள். ஆனால், தமிழக அரசியல் சூழ்நிலையில் இவர்களைக் கூட்டணிக்குள் சேர்த்தால், பி.ஜே.பி-க்குதான் சிக்கலாகிவிடும் என்று டெல்லி தலைவர்கள் கருதுகிறார்கள். ‘கூட்டணியைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். கூட்டணியோடு மத்திய அமைச்சரவையில் இடமும் கேட்டுள்ளார்கள் இரண்டு அணியின் தலைவர்களும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்தது போல தங்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று இவர்கள் கேட்டது குறித்து, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசுகிறார்கள்.’’
‘‘பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறாரே?’’
‘‘ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். தமிழக பி.ஜே.பி-யின் முழு செயல்பாடுகளையும் ஆராய உள்ளாராம். ஒன் டு ஒன்னாக சில நிர்வாகிகளையும் சந்தித்துக் குறைகளைக் கேட்கவும் உள்ளார். அமித் ஷாவின் வருகையால் தமிழிசை கொஞ்சம் அலெர்ட்டாக உள்ளாராம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

ஒரு மறுமொழி

  1. Thank you

%d bloggers like this: