Advertisements

எடப்பாடி பழனிசாமிக்கும் திவாகரனுக்கும் கடுகடு மோதல்! – பரபர பின்னணி

தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் திவாகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திவாகரனும் தினகரனும் கருத்துவேறுபாடுகளை மறந்து கைகோத்துக்கொண்டனர். இருவரும் இணைந்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தினகரன் கொடுத்த காலக்கெடு ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளைக் கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை யோசிக்கவைத்துள்ளார் தினகரன். 

தினகரனும் திவாகரனும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கின்றன, உள்விவர வட்டாரங்கள். திவாகரனின் சொல்பேச்சுக் கேட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது டெல்லி பேச்சை மட்டுமே கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, திவாகரனிடம் போனில் பேசியுள்ளனர். அப்போது, தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலால் கட்சியில் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சாதகமான தகவல் தேர்தல் ஆணையத்திடம் கிடைக்க நாமே வழிவகுக்கும் நிலை ஏற்படும் என்று முதல்வர் தரப்பு கூறியுள்ளனர். அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்ட திவாகரன், ‘எல்லோரும் ஒன்றாகச் செயல்படுவோம்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகும் போன் உரையாடல் தொடர்ந்தபோது, திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் திவாகரனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். தற்போது, அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்கின்றனர் திவாகரனின் தரப்பினர். திவாகரன், மருத்துவமனைக்குச் சென்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம். தினகரன் மட்டும் போனில் நலம் விசாரித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகுறித்து பெங்களூருக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளதாம். உடனடியாக பெங்களூருவில் இருந்து சசிகலா கொடுத்த அறிவுரைப்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுக்க சசிகலா தரப்பு காத்திருக்கிறதாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திவாகரனின் ஆதரவாளர்கள், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டமாகப் பேசியதாலே திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. இதுதொடர்பாக, தினகரனும் திவாகரனும் விவாதித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, திவாகரனின் பேச்சை முதல்வர் கேட்டுவந்தார். ஆனால், இருவரும் ஒன்று சேர்ந்த பிறகு, பாஸின் (திவாகரன்) பேச்சை முதல்வர் கேட்பதில்லை. மேலும், கட்சி விவகாரம் தொடர்பான முடிவு எடுக்கக்கூட டெல்லியில் ஆலோசனை நடத்தப்படுவது வேதனையளிக்கிறது.பா.ஜ.க.விடம் அ.தி.மு.க.வை அடகு வைப்பதை அ.தி.மு.க-வினர் சம்மதிக்க மாட்டார்கள். 

தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல்குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியைக் கலைக்க தினகரன் சதிசெய்வதாகப் பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார். தினகரன், திவாகரனைப் பகைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் பதவியைக் காப்பாற்ற அவர் டெல்லியில் நட்புடன் இருக்கிறார்” என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், “சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட முடிவெடுத்த பிறகு, நாங்கள் அவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வரும் தகவல் வெளியானதும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. அதுபோலத்தான் அணிகள் இணைப்புகுறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியிலிருக்கும்போது, சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளரான தினகரன், தன்னிட்சையாகத் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கட்சியில் எப்படி பொறுப்புகளைக் கொடுக்க முடியும். மாநில அரசின் நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக டெல்லியில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் ஒருவரால் கட்சி முடிவுகளைத் தன்னிட்சையாக எடுக்க முடியாது. தேவையில்லாத பழிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தப்படுகிறது” என்றனர்.

Advertisements
%d bloggers like this: