Advertisements

கிளம்பும் புது வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’ – ‘எந்தப் பொருளினால் எல்லாம் இன்பம் உண்டோ, அதே பொருளால் துன்பமும் உண்டு’ என்பதே இந்தத் திருக்குறளின் அடிநாதம்.
டிஜிட்டல் மயமாகும் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, நாமும் டிஜிட்டல் மயமாகிவருகிறோம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் என நம் அன்றாட வாழ்க்கையை பல்வேறு விதங்களில் எளிதாக்க நன்மை செய்யும் இந்த டிஜிட்டல் மாற்றம், பக்கவிளைவாக நாம் கேட்காமலேயே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் தரும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றி இதற்கு முன்பு நாம் பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறோம். கிணறு வெட்ட பூதம்

கிளம்பின கதையாக, நமக்கு உதவி செய்யும் என்று நினைத்து நாம் பயன்படுத்தத் தொடங்கிய டிஜிட்டல் பூதம் இப்போது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதன் அசுரப்பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு இன்று அவசரம்… அவசியம்.
மனநல மருத்துவர் வசந்தா ஜெயராமனிடம் இதுபற்றிப் பேசினோம்…‘‘நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களிடம் எதிர்பார்ப்பதைவிட தொழில்நுட்பத்திடம் அதிகம் எதிர்பார்க்கப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க கருவிகளையே சார்ந்திருக்கும் மனோநிலைதான், நம்முடைய டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கான அடிப்படை காரணம். மற்றவர்களின் பேச்சை உள்வாங்கும் மனநிலை, அனுசரித்துப்போகும் தன்மை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாத போக்கு போன்ற நல்ல குணங்கள் இதனால் குறைந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் வாக்குவாதம், கட்டுக்கடங்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மனோபாவம் வளர்ந்துவிட்டது. இதனால் உறவுகளில் விரிசல்கள் அதிகரித்துவிட்டது. ‘எல்லாமே எனக்குத் தெரியும்’ என்ற ஆணவமும் தலைதூக்கிவிட்டது. மனிதர்களிடையே கவனச்சிதறல்கள், கருத்துமோதல்கள் அதிகரித்துவிட்டது. உலகமே நம் உள்ளங்கையில் என்கிற ரீதியில் எல்லா தகவல்களையும் தரக்கூடிய இன்டர்நெட் இருப்பதால் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவை மனிதர்களுடன் அதிகமாக ஒட்டிக்கொண்ட தொழில்நுட்பமாக உருவாகிவிட்டது.
இதன் தாக்கம் பலவிதங்களில் வெளிப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தங்களின் உண்மையான முகத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை. இதையறியாது அவர்களின் பொய்யான முகங்களை நம்பி, கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு வசப்பட்டு முகநூலில் தவறான நட்புகள் ஏற்பட்டுவிடுகிறது. தவிர, தன்னைப்பற்றிய புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு கவரப்படுபவர்கள் தவறான உறவுகளுக்கும் தள்ளப்படுகிறார்கள். உணர்ச்சி மேலீட்டால் கமெண்ட்டுகளுக்காகவும், லைக்ஸ்-களுக்காகவும் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ், ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை போட்டுவிட்டு உடனடி பதிலுக்காக காத்திருந்து, அதில் உடனடி சந்தோஷம் கிடைக்கப்பெறாதவர்கள் பெரும் ஏமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தத்தினால் இவர்கள் கட்டுக்கடங்காத உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். தன்னுடைய கருத்துக்கு எதிரானவர்களை, நேரில் பேசத்தயங்கும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை சாட் செய்பவர்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் கணவன் மனைவி உறவுக்குள் பிளவு ஏற்படவும் காரணமாகிறது.
அதிகமான நேரத்தை செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் செலவிடும் குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதனால் பள்ளியில் ஒரே இடத்தில் அமர்ந்து அவர்களால் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பாடத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை. படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் சிரமப்படுகிறார்கள். படிப்பிலும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. இதேபோல, சமீபமாக ஒரே செய்தியை திரும்பத் திரும்ப பல இடங்களிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும், இணையதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் மாறி, மாறி பார்த்த பெற்றோர்கள் தன் குழந்தைக்கும் அதேபோன்றதொரு நிலை வந்துவிடுமோ என்று பயந்தார்கள். என்னிடம் கவுன்சிலிங்குக்காக வந்த பலரிடம் நானே இந்த அபாயத்தை உணர்ந்தேன்.
பலாத்காரம் செய்துவிடுவார்களோ என்று குழந்தைகளை வெளியே விளையாட விடுவதற்கே பயப்படும் அளவுக்கு நிலை அந்த செய்தி சென்றிருக்கிறது. நம் விருப்பம் இல்லாமல் நம் மேல் வந்துவிழும் செய்திகளும் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸில் ஒருவகைதான். கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்மறை செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதால் மனப் பதற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால், நல்ல விஷயங்களையே நாம் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும். ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு, எப்போதும் ஒரு படபடப்பான மனநிலையும் வந்துவிடுகிறது. இவர்கள் சமூகத்தின் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். இதன் காரணமாகவும் மன அழுத்தம் வந்துவிடுகிறது. போராட்டங்கள், சச்சரவுகள், விவாதங்களில் பயன்படுத்தும் வார்த்தைகளும் மனதை பாதிப்பதாகவே இருக்கிறது’’ என்கிறார்.
பொது நல மருத்துவர் அர்ச்சனா குமாரிடம் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கான தீர்வு பற்றி கேட்டோம்…
‘‘டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துவருகிற அதேநேரத்தில், அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கும் நம் தவறான அணுகுமுறைதான் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கு முக்கிய காரணம். அன்றாட வேலைகளில் நடைப்பயிற்சியை கணக்கில் வைத்துக் கொள்வது, ஜிம்மில் கலோரி எரிப்பை பதிவு செய்வது, நிகழ்வுகள் நினைவூட்டல் இதுபோன்று சின்னச்சின்ன செயல்களுக்கும் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பவர்கள் அதனால் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் அலுவல் ரீதியாகவும் அடிக்கடி இமெயில், மெசேஜ், வாட்ஸ் அப் ஆகியவற்றை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் இரவில் தூக்கத்துக்கு நடுவில் எழும்போதும் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
சமூகவலைத்தளங்களைப் பொறுத்தவரை தன்னுடைய நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நபர்களின் ப்ரொஃபைலை பார்ப்பது, ப்ரொஃபைல் பிக்சரை அடிக்கடி மாற்றுவது, தன்னுடைய செல்ஃபி படங்களை அடிக்கடி பதிவது போன்ற நடவடிக்கைகளும் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிறது. தனக்கு போதுமான லைக்ஸ் கிடைக்காதது, இன்னொருவருக்கு அதிக லைக்ஸ் கிடைப்பது போன்ற சின்னச்சின்ன காரணங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. சிலர் வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வரக்கூடிய அனைத்து வீடியோக்களையும், குறுந்தகவல்களையும் மற்றவர்களுக்கு பகிர்வார்கள். வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பவர்களின் அரட்டை மணிக்கணக்கில் போய்க்கொண்டே இருக்கும். டீன் ஏஜில் இருப்பவர்கள் சிலநேரங்களில் தவறான க்ரூப்பில் இணைந்து தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாவதும் உண்டு. போதைப் பொருட்கள் விற்பவர்கள் இதுபோன்ற க்ரூப்களை உருவாக்கி இளைஞர்களை இழுத்து வருகிறார்கள்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிக்கக்கூடாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் செல்போனுக்கு அடிமையாக இருப்பவர்கள் அபாயத்தை சந்திக்கத் தயாராகவே இருப்பார்கள்’’ என்பவர், இதுபோன்ற அடிமைப் பழக்கத்திலிருந்து எப்படி வெளிவருவது என்பதை குறிப்பிடுகிறார். ‘‘முதலில் நாம் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். போதைப்பழக்கத்திலிருந்து விடுபட எப்படி தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் இருக்கிறதோ அதுபோலவே இதற்கும் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. முதலில் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். சிலர் உடனடியாக, ஒட்டுமொத்தமாக எல்லா தளங்களிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். அவ்வாறு திடுக் முடிவு எடுக்க வேண்டியதில்லை. அது எதிர்மறையான வழியிலும் கொண்டு விடலாம். முடிந்தவரை படிப்படியாக வெளியேறுவது சிறந்த வழி. ஃபேஸ்புக், இமெயில், வாட்ஸ்-அப் அறிவிப்புகளை செட்டிங்கில் சென்று நிறுத்திவிடலாம்.
அவசரத் தகவல் தேவைப்படும்போது மட்டும் குறிப்பிட்ட அப்ளிகேஷனைத் திறந்து பார்த்துக் கொள்ளலாம். அவசரத் தகவல் என்றால் நண்பர்கள், உறவினர்கள் ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்-அப்பிலோ தகவல் தரமாட்டார்கள். நேரடியாக போன் செய்து உங்களை தொடர்பு கொள்வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஐகான்களை கண்பார்வையில் படாதவண்ணம் மெயின் ஸ்க்ரீனில் இல்லாமல் உள்ளே வைத்துக் கொள்ளலாம். முக்கியமான அலுவலகம், கல்லூரி, பள்ளி சம்பந்தப்பட்ட அறிக்கைகள் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே வரும் என்பதால் இருவேளைகளிலும் குறிப்பிட்டு ஒரு மணி நேரம் ஒதுக்கி பார்த்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் அரசியல், கிரிக்கெட், சினிமா பற்றிய செய்திகளும் வாட்ஸ் – அப், ஃபேஸ்புக்கில் சாட்டிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அந்த அரட்டைகளைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக ஃபேஸ்புக்கில் தாங்கள் எங்கே செல்கிறோம், எங்கே சாப்பிடுகிறோம் போன்ற தங்களின் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இது சமூக விரோதிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வீட்டில் இன்னார் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதையோ, வெளிநாடு பயணங்களையோ பகிர்வதால், வசதியில்லாதவர் பார்க்கும்போது, தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால் எல்லாவிதமான தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்து முழுக்க முழுக்க இருப்பதைவிட்டு, சக மனிதர்களோடு உறவாடும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். மொபைலில் இன்டர்நெட்டை எப்போதும் ஆன் செய்தே வைத்திருக்கக் கூடாது.
தேவையான நேரங்களில் மட்டும் இன்டர்நெட்டை உபயோகித்துவிட்டு வெளியே வந்து மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட வேண்டும். 1000 + 500 கூட்டினால் எவ்வளவு என்பதற்கு உடனே கால்குலேட்டரைத் தேடாமல் மனதுக்குள்ளேயே கூட்டிப் பார்க்கலாம். இதன்மூலம் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் பழக்கத்திலிருந்தும் விடுபடுகிறோம். மனதுக்கும் பயிற்சி கிடைத்ததுபோல இருக்கும். அதேபோல, அந்த நேரத்தில் நாமும் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நம்மையும் முன்னேற்றிக் கொள்ள உதவும். எந்த ஒரு விஷயத்தையும் அளவிற்கதிகமாக செய்வது அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும். விடுமுறைநாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் நண்பர்கள், உறவினர்களோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான பழக்கம். முக்கியமாக, காலையில் எழுந்தவுடன் மெயில் செக் செய்ய வேண்டாம். தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கவோ, கேட்கவோ வேண்டாம். 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து ஒரு கப் காபியோ, டீயோ அருந்தலாம். அமைதியான இந்த தொடக்கம் அன்றைய நாளை இனிதாக்கும்!’’

Advertisements
%d bloggers like this: