தள்ளிப்போடாதே!

நிர்மலா மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவருக்குத் திருமணமாகி, ஒரு வருடம் ஆகிறது. கோயில்கள், புண்ணியத் தலங்கள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்றுவருவார். இந்த விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஒரே சிக்கல் – மாதவிடாய். அவர் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தார். ஒரு கட்டத்தில், அந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய

அவசியமே இல்லாமல் போனது. காரணம், அவருக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் மாதவிடாய் வரவே இல்லை. ஒருவேளை தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் மருத்துவரைச் சந்தித்தார் நிர்மலா.

“நீங்கள் தொடர்ந்து மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட விளைவு இது” என்று மருத்துவர் கூறிய பதில், நிர்மலாவுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தது. நம்மில் பலர் நிர்மலாவைப் போலவே, குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் வரும் நாள்களில் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைப் பின்விளைவுகள் அறியாமல் உட்கொள்கிறோம். சரியான மருந்துவ ஆலோசனைகள் இல்லாமல், உட்கொள்ளும் மாத்திரைகளால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கிக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ப்ரியா செல்வராஜ்.

* ‘நோரேதிஸ்ட்ரோன் அசிட்டேட்’ (Norethisterone Acetate), ‘மெட்ராக்ஸிப்ரோஜெஸ்ட்ரோன் அசிட்டேட்’ (Medroxyprogesterone Acetate) மற்றும் ‘அலிலெஸ்ட்ரினால்’ (Allystrenol) இவையே மாதவிடாயைத் தள்ளிப்போடப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள். சீரான மாதவிடாய் ஏற்படுத்தவும் இதே மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை வரையறையில்லாமல் உட்கொண்டால், மாதவிடாய் ஏற்படுவது தற்காலிகமாக நின்றுவிடும் அல்லது மாதவிடாய்ச் சுழற்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

* `புரோஜெஸ்ட்ரோன்’ என்பது நம் உடலில் சுரக்கும் ஹார்மோன். ‘ஸ்டீராய்டு’ கட்டமைப்பை அடிப்படையாகக்கொண்டு, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளில், இந்த ‘புரோஜெஸ்ட்ரோன்’ அளவு மாறுபடும். இந்த மாத்திரைகளை உட்கொள்வதால், நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, மாதவிடாயைத் தள்ளிப்போட உதவுகிறது.

* சிலரின் உடல்நலத்துக்கு, ’நோரேதிஸ்ட்ரோன் அசிட்டேட்’ ஏற்றுக்கொள்ளாது. இதனை, மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொள்வதற்குமுன்பு, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்துகொள்வது நல்லது. கருப்பையில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா அல்லது கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை நோயாளிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னரே, இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

* குறைந்தபட்சம் ஒருவரின் உடல் எடை, உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index), ரத்த அழுத்தம் ஆகியவற்றையாவது சரிபார்க்க வேண்டும்.

* 20 வயதுக்குள் இருக்கும் இளம்பெண்கள், மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது. 20 வயது தாண்டிய பெண்கள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* தோல் அரிப்பு, அலெர்ஜி, நுரையீரல் நோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

* இந்த மருந்துகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளும் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதும் மருந்து அட்டையிலேயே பரிந்துரைக்கப் பட்டிருக்கும். மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு, ஒருமுறை இந்தத் தகவல்களையும் பார்த்துக்கொள்ளவும்.

* மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுக்கும்போது ஆரம்பகால கட்டத்தில், வாந்தி வருவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல், தலைவலி போன்றவை ஏற்படும். சிலருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு, உறைகட்டி, மார்பக வீக்கம் போன்ற தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

*வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

பின்விளைவுகளைத் தவிர்க்கும் வழிகள்!

* மாதவிடாய் வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, இந்த மருந்துகளைத் தொடர்ந்து ஐந்து நாள்களுக்குப் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஐந்து முதல் பத்து நாள்களுக்குள் மாதவிடாய் வருவதுதான் இயல்பு. அதற்குப் பிறகும் மாதவிடாய் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

* மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள், சீரான மாதவிடாய் இல்லாதவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், நாள் தள்ளி வரும் மாதவிடாயின்போது, மைக்ரேன் தலைவலி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. சீரான மாதவிடாய் இல்லாதவர்களுக்கு, மாதவிடாய் வரும் காலத்தில் அதிகமான உதிரப்போக்கும் ஏற்படலாம்.

* இதனை இயற்கை முறையில் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இருந்தாலும், அவை எந்தளவுக்கு வேலை செய்யும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. இயற்கை வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என எந்த மருந்துவ முறையைப் பின்பற்றினாலும், அதற்குரிய மருத்துவரின் ஆலோசனை பெற்றே, மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

%d bloggers like this: