Advertisements

படகு சவாரி நடந்த கூவத்தை பாழாக்கி வெச்சது யாரு? – கூவத்தின் சோகக் கதை

கூவம் பற்றியக் கட்டுரை என்றவுடன் இன்றைய அரசியல் சூழல்களைப்பற்றி கற்பனை செய்துகொள்ளாதீர்கள் இது நிஜமான கூவத்தைப்பற்றிய அக்கறையான கட்டுரை! 

கூவம் என நாம் மூக்கைப்பிடித்தபடி இன்று கடக்கும் கூவத்தின் பழையப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா…அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அசந்துதான் போவீர்கள். ‘மதராசப்பட்டினம்’ காலத்தில் தெளிந்த நன்னீராகக் கரையைத் தொட்டு ஓடிய கூவம்தான் இன்று சாக்கடையாக நிறம் மாறி நாற்றமடித்துக் கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல; சென்னைக்கு ஏதோ ஒரு காரண காரியத்துக்காக வந்தவர்கள்தான்.

சென்னைக்கு வந்தபோது எல்லோரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு முகச்சுழிப்போடுதான் இந்தக் கூவம் நதியைக் கடந்து போயிருப்போம். ஆனால், இன்று அந்த வாடையே சென்னை முழுமைக்கும் பழகிப் போக… எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.
‘இந்தக் கூவம்தான் ஒரு காலத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்கான பிரதான ஆதாரம்’ என்று சொன்னால், நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை! ‘சென்னையின் தேம்ஸ்’ என்று ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த நதி மொத்தம் 64 கிலோமீட்டர்கள் பயணித்து நேப்பியர் பாலத்தின் கீழ் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் கேசாவரம் என்னும் சிற்றூரில், கல்லூர் என்னும் ஆற்றின் கிளையாக தோன்றும் இந்தக் கூவம், 32 கிலோமீட்டர் தூரத்தை நகர்ப்பகுதியிலும், மீதமுள்ளவற்றைக் கிராமப்புறங்களிலும் கடந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.
கூவம் எங்குதான் மாசடைகிறது தெரியுமா?
கேசவரத்திலிருந்து வரும் கூவம் திருவேற்காடு அருகில்தான் தன் இயல்பை இழக்கத் தொடங்குகிறது. அதுவரை இந்தக் கூவம் பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், நீர்ப்பாசனத்துக்கு ஊற்றாகவும் இன்றளவும் இருக்கிறது தெரியுமா? கேசாவரத்துக்கும் திருவேற்காட்டுக்கும் இடையில் இருக்கும் புட்லூர் தடுப்பணையில், இன்றும்கூட நல்ல தண்ணீர் இருப்பதைக் காண முடிகிறது. நாம் நினைக்கும் கூவமாக இல்லாமல் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும் நீரை தடுப்பணை மூலம் தடுத்துள்ளனர். சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 300 அடியைத் தாண்டி கீழே சென்று கொண்டிருக்க இந்த தடுப்பணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் 60 முதல் 70 அடிக்குள் நல்ல தண்ணீர் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த வருட வறட்சிக்கு காவிரியே ஆட்டம் கண்டுப் போயிருக்க… இந்தக் கூவம் இன்றளவும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் விவசாயத்தை தலைநிமிரச் செய்து வருகிறது. ‘சென்னைக்கு அருகில் இப்படியும் ஊர்களா?’ என்று வியக்கவைக்கிறது.

கூவம் நதி

தடுப்பணையில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும், அதைப் பிடிக்க ஆவலோடு காத்திருக்கும் கொக்கு கூட்டத்தையும் பார்க்கும்போது கூவத்தின் ரம்யம் மனதைக் கவர்கிறது.
கூவம் முதன்முறையாக எப்பொழுது இப்படி நிறம் மாறியது?
பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது இங்கிலாந்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக ‘மார்டின் குக்’ என்பவர் நெசவாளர்களை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து கூவத்துக்கு அருகில் குடியமர்த்த முதல் முறையாக கூவம் சாயமாகிப் போனது. இந்நிலைத் தொடர்ந்ததால் பல குடியிருப்புகள் சிரமம் இல்லாமல், கூவத்தை கழிவுநீர் வடிகாலாக மாற்றிக் கொள்ளத் தொடங்கின. நாளடைவில், பல தொழிற்சாலைகளும் கூவத்தைக் கழிவு நீர் விடும் இடமாக்கிக்கொள்ள, தன்னை மீட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு கூவம் உருமாறிப்போனது. தற்போதைய நிலவரப்படி சென்னையில், 127 இடங்களில் கழிவுநீர் பெருமளவில் கூவத்தோடு கலக்கிறது என்பதுதான் கூவம் எனும் கதையின் உச்சக்கட்ட சோகம். இதையெல்லாம் நாம் படிக்கும்போதே, ‘இந்தக் கொடுமைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?’ எனும் கேள்வி எழுவது இயல்பே.
அரசாங்கம் ஏதும் செய்யாமல் இல்லை. ஆனால், தீட்டப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும் கூவத்தைச் சுத்தப்படுத்தாமல், எங்கு சென்றது என்றுதான் புரியவில்லை.
முதன் முதலில் 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது ‘கூவத்தை அழகுப்படுத்தும்’ திட்டத்துக்காக 2.2 கோடி நிதியை ஒதுக்கினார். அப்பொழுது கருணாநிதிதான் பொதுப் பணித்துறை அமைச்சர். இந்தத் திட்டத்தின் மூலம் கூவத்தில் பல படகுகள் விடப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பெயரில் ஏழு இடங்களில் மணிமண்டபங்களும் கட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தி.மு.க ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் கூவம் நதி மேம்பாடு திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், மாற்றம்தான் பெரிதாக இல்லை. கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என தி.மு.க மேற்கொண்ட நடவடிக்கைகளால் கூவம் அளவு அது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டதுதான் மிச்சம். கூவம் அழகாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகவே இல்லை. 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் இன்றளவும் பெரும்பாலான கழிவு கூவத்தில்தான் கொட்டப்படுகின்றன என்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியப் போக்குக்கான உதாரணம்.

கூவம் நதி

இதன் பின்பு 2015-ம் ஆண்டு ஜெயலலிதா கூவம் நதியை சுத்தப்படுத்துவதற்காக 2,000 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்க, அதன் மூலம் 3 கட்டங்களாக கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்றளவும் கூவம் அப்படியே சாக்கடையாகத் தான் இருக்கிறது. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது கூவத்தின் அழகிய முகத்தை 2 நாள் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மீண்டும் சாக்கடையாக மாற்றியப் பெருமை நம்மையேச் சாரும்.
அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் முன் நம்மையே சில கேள்விகள் கேட்போம். ஒரு காலத்தில் மீன்பிடித் தொழிலும், படகு போட்டியும் களைகட்டிய இந்தக் கூவம் இன்று தன் அடையாளத்தை தொலைத்து நிற்க முழு காரணம் நாம்தான் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நம் வீட்டின் கழிவு நீர் எங்கே போகிறது என்று தெரியுமா? மிக சுலபமாக பாலித்தின் பைகளை மூட்டைக் கட்டி நீர்நிலைகளில் தூக்கிப் போடுவதின் விளைவு தெரியுமா? நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தண்ணீர் என்பதையே லட்சியமாக்கப் போகிறோமா? இந்தக் கேள்விகளுக்கானப் பதில்கள்தான் நாம் நீர்நிலைகளை எப்படியெல்லாம் மாசுபடுத்திவிட்டோம் என்பதற்கான விடையைச் சொல்லும்.
‘நீ விரும்பும் மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்கு’ என்பார் மகாத்மா. மாற்றத்துக்கான விதையை நாம் விதைப்போமா? இனியாவது நீர்நிலைகளின் முக்கியத்துவம் உணர்வோமா? கழிவுநீர் வடிகால் அமைப்பது, கழிவுநீரை கூவத்தில் கலக்கவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது என அரசாங்கமும் பொறுப்பாக செயல்பட்டு கூவத்துக்கு மறு உருவம் தருமா?
ஏனெனில், தாகத்துக்கு தண்ணீரைத்தான் குடிக்க முடியும் அல்லவா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: