எம்.எல்.ஏ தலைக்கு 25 கோடி! – மீண்டும் ஏலம் ஆரம்பம்!

கெட்டிக்காரன் பெட்டிக்குள்ள வெள்ளிப் பணம்தான்… நினைத்தால் வந்து சேரும்… அடைந்தால் ராஜயோகம்’’ கழுகார் பாடிக்கொண்டு வந்தது பழைய சினிமா பாடல் என்பதை யூகிக்க முடிந்தது.

‘‘கெட்டிக்காரன்… வெள்ளிப்பணம்… ஒன்றும் புரியவில்லையே?’’
‘‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு இது பொற்காலம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில்கூட அவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. கூவத்தூர் பேரத்தை எல்லாம் இப்போது நடக்கும் பேரத்தோடு ஒப்பிடவே முடியாது. ஒவ்வொரு தலைக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ள விலை அப்படி.’’
‘‘எவ்வளவாம்?’’
‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரன் தரப்பில் நிர்ணயித்துள்ள தொகை, தலை ஒன்றுக்கு 25 கோடி ரூபாயாம். பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு நிர்ணயித்துள்ள தொகை 5 கோடி ரூபாய் என்கிறார்கள். அதனால், அ.தி.மு.க அணிகள் அனைத்திலும் ஏக உற்சாகம் பரவியிருக்கிறது. விரைவில் அணி மாறுதல்கள் வேகமாக நடக்கும்.’’
‘‘எடப்பாடி தரப்பு என்ன செய்கிறது?’’
‘‘எடப்பாடி தரப்பும் இந்த அணி மாற்றத்தைத் தடுக்க பல ஆயத்தங்களைச் செய்துள்ளது. அவர்கள் வைத்துள்ள விலை, அரசு கான்ட்ராக்ட்கள் மற்றும் சலுகைகள். தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி தரப்புக்கு இழுக்கும் வேலையில் மும்முரமாகச் செயல்படுவது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள்தான். தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு அவர்கள் தூது அனுப்பி, ஆசை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.’’

‘‘எம்.எல்.ஏ-க்களுக்குத் திடீரென கிராக்கி உயர்ந்துகொண்டே போகும் அளவுக்குச் சூழல் இறுக்கமாகி இருப்பது ஏன்?’’
‘‘தினகரன்-எடப்பாடி மோதல் உச்சத்தில் இருப்பதுதான். எடப்பாடி பழனிசாமி மற்றவர்களைப் பேசவிட்டு இதுநாள்வரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய நடவடிக்கைகளில் அதிரடி மாற்றங்கள் தென்படுகின்றன. தினகரன் கட்சி அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வருவதாகத் திட்டமிட்டதால், எடப்பாடி பழனிசாமி அதற்கு நான்கு நாள்களுக்கு முன்பே தலைமைக் கழகத்துக்கு அமைச்சர்களை அழைத்துக்கொண்டு வந்து ஆஜரானார். தினகரன் சுற்றுப்பயணம் அறிவித்திருக்கும் இந்த நேரத்தில், இவர்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஊர் ஊராகப் போய் கூட்டம் போடுகிறார். இதுநாள்வரை இந்த விழா மேடைகளில் அர்த்தம் பொதிந்த அரசியல் வார்த்தைகளைப் பேசாதவர், பெரம்பலூரில் கொஞ்சம் வார்த்தைகளை விட்டுவிட்டார்.’’
‘‘என்ன பேசினார் முதல்வர்?’’
‘‘பெரம்பலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், ‘இந்த ஆட்சியைக் கலைக்க சிலர் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்றார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருக்கும் எடப்பாடி… பன்னீர்செல்வம் அணியைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லாத எடப்பாடி… தங்களைக் குறிப்பிட்டுத்தான் இப்படிச் சொல்கிறார் என தினகரன் தரப்பு கருதுகிறது. தான் பதவி கொடுத்தவர்களை எடப்பாடி தரப்பினர் மிரட்டி தங்கள் வழிக்குக் கொண்டு வரச் செய்வார்கள் என்பது தினகரனே எதிர்பார்க்காதது. அதன்பிறகுதான் தினகரன் தன் போக்கைத் தீவிரமாக மாற்றிக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பன்னீர்செல்வத்தைப் போல ‘டீல்’ செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர், ‘எந்த நேரத்திலும் இந்த ஆட்சியைக் கலைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று ஆயத்தமாகத் தொடங்கிவிட்டார். அதனால்தான், தன் பக்கம் வரும் எம்.எல்.ஏ-க்களின் தலைக்கு விலை வைத்துள்ளார். கூவத்தூரைப் போல, எம்.எல்.ஏ-க்கள் ஒரே கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்ட நிலை மட்டும் இப்போது இல்லை. ஆனால், பேரங்கள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் அப்போது நடந்ததைப் போலத்தான் இப்போதும் நடக்கின்றன.’’
‘‘சரி… டெல்லி என்ன நினைக்கிறதாம்?’’
‘‘சசிகலாவுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் கட்சிக்குள் இவ்வளவு ஆதிக்கம் இருக்கும் என பி.ஜே.பி ஆரம்பத்தில் கணிக்கவில்லை. தமிழகத்தில் இருந்து டெல்லி பி.ஜே.பி-க்கு சசிகலா குடும்பம் பற்றித் தகவல்களைக் கொடுத்தவர், சரியாகக் கொடுக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் சில சாதகங்களைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு ஆதரவான தகவல்களை டெல்லியில் கொடுத்துள்ளார். அதை உணர்ந்த டெல்லி, தற்போது தமிழகத்தில் இருந்த அந்த நபரைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துள்ளது.’’
‘‘யார் அவர்?’’
‘‘தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளைத் தாண்டி, டெல்லியோடு லாபி செய்யும் அதிகாரம் யாருக்குத் தமிழகத்தில் இருக்கிறதோ… அவர்தான் அந்த நபர்.’’
‘‘மூன்று அமைச்சர்கள் மீதுதான் கடும் கோபத்தில் இருக்கிறாராமே தினகரன்?’’
‘‘ஆமாம்! எடப்பாடி தனக்கு எதிராகத் திரும்பக் காரணமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்த மூன்று அமைச்சர்கள்தான் என்று தினகரன் நினைக்கிறார். இப்போது முதல்வர் அலுவலகத்தையே ஆட்டி வைக்கும் சக்தியாக அவர்கள் இருப்பதை தினகரன் ரசிக்கவில்லையாம். இந்த மூன்று பேரையும் வீழ்த்துவதற்காகவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தினகரன் தரப்பு திட்டமிட்டு வருகிறது.’’
‘‘ம்!’’
‘‘தினகரனுக்கு நெருக்கமானவராக இருக்கும் தளவாய் சுந்தரம்தான் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வரை அவர் அறையில் சந்தித்துக்கூட பேசிவந்தார். ஆனால், அவர் மீது இப்போது இரண்டு தரப்பினருமே கோபத்தில் இருக்கிறார்கள். எடப்பாடிக்கு நெருக்கமான சேலத்து பிரமுகர் ஒருவரிடம், தளவாய் சுந்தரம் காட்டிவரும் நெருக்கம் பற்றி தினகரனுக்குத் தகவல் சென்றுள்ளதாம். ‘தினகரன் சார்பில் தூது பேசுவதாகச் சொல்லிக்கொண்டே, தனக்கு வேண்டிய பல காரியங்களையும் முடித்துக் கொண்டுவிட்டார் தளவாய்’ என்று போட்டுக்கொடுத்துவிட்டார்கள் சிலர். அதே போல், எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் தளவாய் சுந்தரம், ‘நான் சொல்லி எதையும் இப்போது தினகரன் கேட்பதில்லை. செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் சொல்வதைத்தான் கேட்கிறார்’ என்று சொல்லியுள்ளார். ஆனால், தினகரன் வீ்ட்டுக்கு விஜயதாரணியை அழைத்துச் சென்றதே தளவாய் சுந்தரம்தான் என்ற தகவல் எடப்பாடி அணிக்கு வந்ததும், அவர்கள் தளவாய் சுந்தரத்தை கொஞ்சம் தள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.’’
‘‘ஓஹோ!’’
‘‘தினகரன் வீட்டில் பணியாற்றும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் மூலம், தினகரனின் ஒவ்வொரு மூவ்மென்ட்டும் எடப்பாடி தரப்புக்குத் தெரிந்துவிடுகிறதாம். அந்த முன்னாள் ஊழியர், இதற்குமுன்பு அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்தவர். இப்போது தினகரன் வீட்டில் ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். ‘தினகரன் வீட்டில் நடக்கும் விஷயங்களை இவர்தான் தனது சகாக்கள் மூலம் எடப்பாடி அணிக்குச் சொல்லிவிடுகிறாரோ’ என்ற சந்தேகம் தினகரன் தரப்புக்கு எழுந்துள்ளதாம். சமீபத்தில் சென்னையின் மையப் பகுதியில் அந்த முன்னாள் அரசு ஊழியருக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் இரண்டு வீடுகளை ஒதுக்கியுள்ளதாகவும் ஒரு தகவல் கிடைக்க, தினகரன் திகைத்துப் போயிருக்கிறார்.’’ 
‘‘தினகரன் தரப்பில் அடுத்து என்ன செய்யப் போகிறார்களாம்?’’
‘‘புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டது போல, ‘செயல்படாதவர்கள் என்று சொல்லி சில நிர்வாகிகளை தினகரன் நீக்கப் போகிறார். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரின் கட்சிப்பதவிகள் பறிக்கப்படும்’ என்று தினகரன் ஆதரவாளர்கள் திகில் கிளப்புகிறார்கள். ஆனால், ‘சுற்றுப்பயணத்தில் கூட்டத்தைக் காட்டினாலே எல்லோரும் நம் பக்கம் வந்துவிடுவார்கள்’ என்று கணக்குப் போடுகிறார் தினகரன். ஆனால், தினகரன் மீது கட்சியினர் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். மன்னார்குடி குடும்ப உறவுகளுடன் இவர் தொடர்பில்லாமல் இருந்தபோது, கட்சியினர் மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. ஆனால், சமீபத்தில் தினகரனின் மாமியார் மறைந்தபோது, குடும்ப உறவுகளுடன் இவர் காட்டிய நெருக்கத்தைப் பார்த்து ‘மீண்டும் இவர்கள் பவருக்கு வந்தால், பல அதிகார மையங்கள் உருவாகிவிடுமே’ என்று ஓபனாகவே பேசியுள்ளார்கள் நிர்வாகிகள் சிலர். ஆனால், ‘சின்னம்மாவைத் தவிர வேறு யாரும் எங்கள் குடும்பத்தில் ஆளுமை செய்ய மாட்டார்கள்’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார்.’’
‘‘அமைச்சரவையை மாற்றினால் தினகரன் அமைதியாகிவிடுவார் என்கிறார்களே?’’
‘‘ஆறு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருந்தால் தினகரன் தனியாக அணி அமைத்திருக்கமாட்டார். இப்போதும் அந்த கோரிக்கையைத்தான் வைக்கிறார்களாம். ‘நான் சொல்பவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கட்டும். கட்சி விவகாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருந்தால், பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்’ என்று தினகரன் சார்பில் எடப்பாடியிடம் சொல்லியுள்ளார்கள். ஆனால், எடப்பாடி தரப்போ ‘ஒரு அமைச்சரை மாற்றினால்கூட பலரும் பதவிகேட்டு தொல்லை செய்துவிடுவார்கள்’ என்று அச்சம்கொள்கிறது.’’
‘‘சரி… வேறு என்ன செய்ய முடியும்?’’
‘‘சசிகலாவே பொதுச்செயலாளர், தினகரனே துணைப் பொதுச் செயலாலர் எனக் குறிப்பிட்டு, இரட்டை இலைச் சின்ன விவகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்கில் கொடுத்த பிரமாணப் பத்திரங்களை மறுபரிசீலனை செய்யலாமா என ஆலோசனை நடக்கிறது. பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாது. அதனால் வேறு வழி இருக்கிறதா என யோசனை செய்து வருகிறார்கள்.பன்னீர் தரப்புடன் சமாதானமாகப் போய்விடலாம் என்கிற யோசனையும் நடக்கிறது.  ஆனால், தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக பன்னீர் அணி அறிவித்ததும், இந்த யோசனை அப்படியே முட்டுச்சந்தில் நிற்கிறது.’’
‘‘அப்படியா?’’
‘‘இந்த மோதல்கள் எல்லாமே அதிகாரிகளுக்குச் சாதகமாகப் போய்விட்டது. தலைமைச் செயலகத்தில் முன்பு அமைச்சர்களைப் பார்த்து காரியம் முடித்துக்கொண்டவர்கள் எல்லாம் இப்போது அதிகாரிகளைப் பார்த்து காரியம் சாதித்துக்கொள்கிறார்கள். அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அமைச்சர்கள் சொன்னால்கூட பல அதிகாரிகள் செய்வது கிடையாதாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்தில் தனியாக ஒரு லாபி உருவாகியுள்ளது. அவர்கள் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டதால் ஆளுங்கட்சியினர் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார்கள்” என்ற கழுகார், கிளம்புவதற்கு முன்பாக ஒரு கொசுறு தகவல் தந்தார்.
‘‘முதல்வருக்கு நெருக்கமான சேலம் பிரமுகர் அவர். அவரிடமிருந்து சிபாரிசு கடிதம் வந்தால், ‘சி.எம் ஆபீஸில் இருந்து லெட்டர் வந்திருக்கு’ என்று அதிகாரிகள் மட்டத்தில் பேசுகிறார்களாம். டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட பல டீலிங்குகளைச் சத்தமில்லாமல் முடிக்கும் இவர், சமீபத்தில் திருச்சி அருகே ஒரு என்ஜீனியரிங் கல்லூரியை விலைபேசி வாங்கி முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்!’’  எனச் சொல்லி பறந்தார். 

%d bloggers like this: