வெந்தயம் – மருத்துவ குணங்கள்

உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் விளங்குகிறது. வெந்தய விதைகளும் இதைப் போலவே உணவாகவும் மருந்தாகவும் பல வழிகளில் நமக்குப் பயன் தருகிறது. அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் அதிகம் பயிரிடப்படும் பயிராக வெந்தயம் விளங்குகிறது. சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயத்தினுடைய தாவரப் பெயர் Trigonella foenum-graecum என்பதாகும். இதனுடைய ஆங்கிலப் பெயர் Fenugreek என்பதாகும். சமஸ்கிருத மொழியில் இதை மேதி என்று குறிப்பிடுவர். வடமொழியில் பகுபத்திரிக்கா என்று சொல்வதுண்டு.

வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்குந்தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்குந்தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத்தையும், உஷ்ணத்தையும் போக்கக்கூடியது, வறட்சித் தன்மையை அகற்றக்கூடியது, காம உணர்வைப் பெருக்கக்கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, டானிக் போல உடலுக்கு உரமாவது!வெந்தயத்தின் விதைகள் பசியின்மையையும், வயிற்று உப்புசத்தையும் போக்கவல்லது, பித்தத்தைச் சமன்படுத்தக்கூடியது, வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப்போக்கையும் போக்கக்கூடியது, சீதபேதியை நிறுத்தவல்லது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் கண்டவிடத்து அந்த வீக்கத்தைத் தணிக்கவல்லது, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வது, குழந்தை பெற்ற இளந்தாய்மார்களுக்கு ஊட்டம் தரும் வகையில் டானிக்காகவும் அமைகிறது.‘வெந்தயம் ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது, சீழ் பிடிப்பதைத் தடுக்கக்கூடியது’ என்பதை ஜெர்மானிய வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆங்கில மூலிகை மருத்துவ அகராதி வெந்தயம் உள்ளழலை ஆற்றவல்லது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைக் குறைக்கவல்லது என்றும் பரிந்துரை செய்கிறது. சர்க்கரை நோய்க்கு ஒரு துணை மருந்தாகிறது, உணவு ஏற்றுக்கொள்ளாமை, கொழுப்புச்சத்து மிகுதல் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பொருமல் மந்தம் வாயுகபம் போராடுகிற
இருமல் அருசியிவை ஏகுந்-தரையில்
தீது லுயர்நமனைச் சீறும் விழியணங்கே!
கோதில்வெந்த யக்கீரை கொள்.’
– அகத்தியர் குணபாடம்.

வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், வயிற்றினை நிரப்பிய வாயு, நெஞ்சுச்சளி, நம்மைப் போராடச் செய்கிற குத்திருமல், வறட்டிருமல், சுவையின்மை, பசியின்மை இவை அனைத்தும் குணமாகும். உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்வதால் உயிருக்கு இறுதி செய்யும் எமனையும் தூர நிறுத்தும். துன்பமில்லா வெந்தயக்கீரையை உட்கொள்வதால் மேற்கூறிய நன்மைகள் அனைத்தும் உண்டாகும் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.வெந்தயக்கீரை பற்றிய அகத்தியர் பாடல் நமக்குத் தெளிவான ஆரோக்கியத்துக்கான பலனை தெரிவிக்கிறது. கீரையில் மட்டுமின்றி வெந்தயத்தின் விதைகளிலும் என்னென்ன மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன என்பதையும் அகத்தியர் பாடல் தெரியப்படுத்துகிறது.

‘பித்தவுதி ரம்போகும் பேராக் கணங்களும்போம்
அத்திசுரந் தாகம் அகலுங்காண் – தத்துமதி
வேக இருமலொடு வீறுகயம் தணியும்
போகமுறும் வெந்தயத்தைப் போற்று.’
– அகத்தியர் குணபாடம்.

ரத்தத்தில் உள்ள பித்தத்தைப் போக்கும், அகலாது நின்று துன்பந் தருகிற உடற்சூட்டினையும் தணிக்கும். எலும்பைப் பற்றிய காய்ச்சல் போகும், நாவறட்சி அகன்று போகும். புத்தியைத் தடுமாறச் செய்யும் குத்திருமல், வறட்டிருமல்,கக்குவான் இருமல் ஆகியவற்றைத் தணிப்பதோடு கபத்தையும் வெளியேற்றும். இவை மட்டுமின்றி போக உணர்வையும், அதற்கான வலிவையும் அதிகரிக்கும் என்பது மேற்சொன்ன பாடலின் பொருள் ஆகும்.

100 கிராம் வெந்தயத்தில் உள்ள சத்துப் பொருட்கள்எரிசக்தி – 323 Kcal, மாவுச்சத்து(கார்போஹைட்ரேட்) – 58.35 கிராம், புரதச்சத்து – 23 கிராம், மொத்தக் கொழுப்பு – 6.41 கிராம், உணவாகும் நார்ச்சத்து – 24.6 கிராம் மற்றும் வைட்டமின்களான ஃபோலேட்ஸ் – 57 மைக்ரோ கிராம், நியாசின் – 1.64 மி.கி., பைரிடாக்சின் – 0.6 மி.கி., ரிபோஃப்ளேவின் – 0.36 மி.கி., தயாமின் – 0.32 மி.கி., வைட்டமின் ‘ஏ’ – 60 ஐ.யு. வைட்டமின் சி – 3 மி.கி., இதனோடு நீர்ச்சத்துக்களான சோடியம் – 67 மி.கி., பொட்டாசியம் – 770 மி.கி.

மேலும் தாது உப்புக்களானசுண்ணாம்புச்சத்து – 176 மி.கி., செம்புச்சத்து – 1.1 மி.கி., இரும்புச்சத்து – 33.53 மி.கி., மெக்னீசியம் – 191 மி.கி., மேங்கனீசு – 1.22 மி.கி., பாஸ்பரஸ் – 296 மி.கி., செலினியம் – 6.3 மைக்ரோகிராம், துத்தநாகம் – 2.50 மி.கி. ஆகியன 100 கிராம் வெந்தயத்தில் அடங்கியுள்ளன.

வெந்தயம் கசப்புத்தன்மை உடையதாக இருப்பினும் வாணலியில் இட்டு சற்று பொன் வறுவலாக அதை வறுத்து எடுத்துக் கொண்டால் அதன் கசப்புத்தன்மை குறைந்து போகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

*வெந்தயத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பில்வெந்தயம் கெடாது காக்கும் (Preservative) பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறது.

*வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத்தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

*வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.

*வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதால் ‘எக்ஸிமா’ எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் ஆகியன குணமாகின்றன.

*வெந்தயம் உள்ளுக்கு சாப்பிடுவதால் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பலப்படுகிறது. மேலும், பிரசவத்தின்போது குழந்தைப் பிறப்பதைத் துரிதப்படுத்துகிறது.

*வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களின் ஹார்மோன் சுரப்பிகள் சரியான நிலையில் செயல்படுவதோடு மார்பகங்களும் வனப்புற விளங்கும்.

வெந்தயத்தை யார் யார் தவிர்ப்பது நல்லது?

*கருவுற்ற பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது ஊறு ஏற்படுத்தலாம்.

*வயிற்றில் புண்கள், ரத்த ஒழுக்கு போன்றவை இருப்பின் அந்த ரத்தக்கசிவை அது அதிகப்படுத்தக்கூடும் என்பதால் இவ்வித நோயாளிகளும் வெந்தயத்தை அளவோடு பயன்படுத்துதல் நலம்.

*யாரேனும் சிலருக்கு தோலில்எரிச்சல், நமைச்சல், நெஞ்சுவலி, முகவீக்கம், மூச்சு முட்டல், விழுங்குவதற்குச் சிரமம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.

*சிலருக்கு பேதி, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, சிறுநீரில் நாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

வெந்தயத்தின் மருத்துவப் பயன்கள்

*வெந்தயத்தை இரவு முழுதும் நீர் விட்டு ஊறவைத்து, காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலைமுடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்க பொடுகுகள் போகும்.

*வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்துக்குத் தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.

*வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி விட முகப்பருக்கள் குணமாகும்.

*வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகின்றது.

*வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்கக்கூடியது அல்லது கற்கள் வராமல் தடுக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்கிக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

*10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி,
சீதபேதி ஆகியன குணமாகும்.

*வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டு முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையையும் பொன் வண்ணத்தையும் தரும்.

*5 கிராம் வெந்தயத்தை வேகவைத்துக் கடைந்து எடுத்து அத்தோடு போதிய தேன் சேர்த்துக் கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

*முடி கொட்டுகிற பிரச்னைக்குவெந்தயம் மிகச்சிறந்த நிவாரணி ஆகும். முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

*வெந்தயம் இளநரையையும் போக்கக்கூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300 மி.லி தேங்காய்எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்.

*இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

*வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புச்சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

*தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

*வெந்தயப் பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

அடுக்களையிலுள்ள வெந்தயத்தில்இவ்வளவு மருத்துவ குணங்கள் பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும் !

%d bloggers like this: