Advertisements

செப்டிக் ஷாக் தெரியுமா?

இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதத்திற்குக் காரணமாக இருக்கும் நோய்களில் முதன்மையாக இருப்பது செப்டிக் ஷாக். பெப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்று. இந்த நோய்த்தொற்று மிகவும் ஆபத்தான பிரச்சனைகளை உருவாக்குவதோடு நச்சுத்தன்மையை பரப்பக்கூடிய கிருமிகளை கொண்டது. இதில் பாக்டீரியாவுக்கே அதிக பங்கு உண்டு. பொதுவாக பெப்சிஸ் என்றால் சீழ்பிடித்தல் என்று பொருள். ஆனால் சிலசமயங்களில் சீழ் பிடிக்காமல் கூட இந்த நோயானது நமக்கு தெரியாமலே உடலில் பரவிவிடும். இந்த நோயானது

எங்கிருந்து வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதாவது வீட்டில், வெளியில், அலுவலகத்தில், பயணத்தில் என எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த நோய்த்தொற்று நம்மை ஆட்டி வைக்கலாம். சுத்தபத்தமாக இருப்பவர்கள் முதல் சாக்கடையோரம் வாழ்க்கை நடத்துபவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.  கிடைப்பதை உண்டு வாழ்பவர்களுக்கும் வரும். பார்த்து பார்த்து சத்தான ஆகாரங்களை தேர்வு செய்து சாப்பிடுபவர்களுக்கும் வரும். இயற்கையாகவே நம் உடலில் பாக்டீரியாக்கள் இருக்கும்.  அது நம்மை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்திருந்தால் நம்மை எளிதில் தாக்கிவிடும் என மேலும் செப்டிக் ஷாக் குறித்து சொல்கிறார் மருத்துவர் இந்திரா ஜெயக்குமார்.
செப்டிக் ஷாக் என்பது மருத்துவ நோய்க்குறிதான்.  இது கடுமையான நோய்த்தொற்றாக மாறி உடலில் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் இறுதியாக உள்ளுறுப்புகளை செயல் இழக்க வைத்தல் போன்றவற்றைச் செய்யும். சாதாரணமான காய்ச்சலில் ஆரம்பமாகி சில மணிநேரங்களில் தீவிரம் அடைந்து உடலுள் ரத்தத்தில் நச்சு அதிகரிக்கச் செய்து கடும் காய்ச்சல், நிமோனியா அல்லது சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று உண்டாவதோடு உடல் வெப்பநிலையில் தாறுமாறான மாற்றத்தையும், ல்யூக்கோசைட் எண்ணிக்கையில் அசாதாரணமான நிலையும் ஏற்படும். ஒரு வேளை இவை அனைத்தும் வெகு விரைவில் நடந்தேறினால் மரணம் ஏற்படவும் வழிவகுக்கும்.  நம் உடலில் எங்கிருந்து பெப்சிஸ் பரவுகிறது என்பது நம்மால் நிச்சயமாக கூறமுடியாது.  ஒரு சிறிய கொப்புளத்தில், குரல்வளையில், நுரையீரலில், பாதத்தில், வயிற்றில், பிறப்புறுப்புகளில், சிறுநீர் மற்றும் ஆசனவாய் பாதைகளில் என எங்கு வேண்டுமென்றாலும் கிருமி தொற்றி உடலில் பரவிவிடும்.  நோயாளிகளை பார்க்க, அவர்களுக்கு துணையாக இருக்க என மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கும் கூட நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பதால், தனிப்பட்ட சுகாதாரம் இன்றி இருப்பதாலும் பெப்சிஸ் நோய் உண்டாகிறது. 
* பெப்சிஸ் நோயின் மூன்று நிலைகள்
முதலாம் நிலை பெப்சிஸ் என்பது நோய்த்தொற்றானது ரத்த ஓட்டத்தில் கலந்து  உடல் முழுவதும் வீக்கத்தை உண்டாக்கும்.  அடுத்ததாக நோய்த் தொற்றானது வீரியமாகி இருதயம், மூளை மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பாதித்து செயல் இழக்கச் செய்யும். இது தான் கடுமையான பெப்சிஸ். பெப்சிஸின் இறுதி நிலை தான் செப்டிக் ஷாக்.  இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, இருதயம் அல்லது சுவாச மண்டலம் செயல் இழத்தல், வாதம், மற்றும் உறுப்புகளும் மெல்ல செயல் இழந்து போதல், இறுதியில் உயிர் இழப்பு என மருத்துவர்கள் இதன் வீரியத்தை பொறுத்து நோயின் தன்மையை வேறுபடுத்துகிறார்கள். 
ஒருவரின் வயதை பொருத்தும், அவர்களுக்கு முன்பு ஏற்பட்ட நோயின் வரலாற்றை பொருத்தும் செப்டிக் ஷாக்கின் தன்மை மாறுபடும்.  குறிப்பாக கைக்குழந்தைகள், மிகவும் வயதானோர், கர்ப்பிணி பெண்கள் என இவர்களுக்கு செப்டிக் ஷாக் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் எச்ஐவி மற்றும் பால்வினை நோய் உள்ளவர்கள், புற்றுநோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்தரிடிஸ் ஆகியவையால் பாதித்திருந்தால் செப்டிக் ஷாக் வரும் அபாயம் அதிகம்.  மேலும், மிகக் குறைந்த ஊட்டச்சத்து, நீரிழிவு வகை ஒன்று மற்றும் இரண்டிற்கு பயன்படுத்தும் மருந்து, ஊசி,  பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சுவாசக் குழாய், நரம்பு மற்றும் சிறுநீர் வடிகுழாய் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பின் அதன் மூலம் பாக்டீரியா தொற்று உடலுக்குச் சென்று செப்டிக் ஷாக்கை ஏற்படுத்தும். 
* அறிகுறிகள்
அதிகப்படியான காய்ச்சல், மூச்சுத் திணறல், அதிக அல்லது மிகக்குறைந்த சுவாசம், குறைந்த ரத்த அழுத்தம், அதிவேக இதயத் துடிப்பு, கை கால்கள் உறைபணியில் இருந்தது போல குளிர்ந்திருத்தல், நிறமாற்றம், மிகக் குறைந்த சிறுநீர் அளவு, கடுமையான குழப்பம், தலைசுற்றல், சோர்வு  போன்றவை அறிகுறியாக தோன்றும் போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அடுத்தடுத்த உறுப்புகள் செயல் இழந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.  
* கண்டறியும் முறைகள்
இவ்வாறான அறிகுறிகள் தோன்றிய பின் தாமதிக்காமல், சாதாரண காய்ச்சல் தானே என்று அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.  ரத்தப் பரிசோதனையின் மூலம் முதல் கட்ட பரிசோதனை நடைபெறும்.  இதன்மூலம் ரத்தத்தில் பாக்டீரியா, ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவினால் ரத்தம் உறைதலில் ஏற்படும் பிரச்சனை, ரத்தத்தில் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டில் குறைபாடு, ஆக்சிஜனின் அளவில் குறைவு, உடலிலுள்ள நீர்மத்தின் அளவு குறைதல் போன்றவற்றை தெளிவாக காட்டிவிடும். அறிகுறிகளையும் பரிசோதனை முடிவுகளையும் வைத்து மேலும் சில பரிசோதனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும். எந்த மாதிரியான பாக்டீரியாவால் எந்த உறுப்பில் பிரச்சனை ஆரம்பமாகிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த சோதனை முறைகள்.  சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, காயத்தில் சுரக்கும் நீர்மத்தின் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, அல்ட்ரா சவுண்ட் போன்றவையும் செய்யப்படும். பெப்சிஸ் ஷாக் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வோம், நிமிடத்திற்கு ஒருமுறை அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்காணித்து கொண்டே இருப்போம்.  உடனடியாக அந்த பாக்டீரியாவை கட்டுப்படுத்த ஆன்டிபயாடிக் கொடுக்கப்படும். தொடர்ச்சியாக அவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடலுக்கு தேவையான நீர்மங்கள் போன்றவை சரியான நிலையில் இருக்கிறதா என்று பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.  சரியான ஆன்டிபயாடிக்கை தேர்வு செய்து கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டாலும் நோய் தீவிரமடைந்து விடும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதுடன், அவர்களிடம் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை கூட உன்னிப்பாக கவனித்து எதுவும் தீவிரம் அடையும் முன்பே கவனித்துக்கொள்வது நல்லது.

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: