டிடிவி தினகரனை நீக்க எடப்பாடி அதிரடியாக முடிவு எடுத்தது எப்படி? பரபர பின்னணி

சென்னை: அ.தி.மு.க அம்மா அணியில் இருந்து தினகரனுக்கு எதிராக வெளியான தீர்மானத்தை எதிர்பார்த்தே காத்திருந்தனர் மன்னார்குடி உறவுகள். தினகரனுக்கு வேண்டிய நிர்வாகிகளும் அவருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டதை அதிர்ச்சியோடு கவனித்தார் தினகரன்.

‘ ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முடிவதற்குள் இணைப்பு வைபவத்தை நடத்தி முடியுங்கள்’ என டெல்லி கொடுத்த அழுத்தம்தான், இன்றைக்கு தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளைக் கூட வைத்தது என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு அணிகள் இணைப்பு அவசியம் என்பதால், இரண்டு அணியின் நிர்வாகிகளும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்து ஆட்கள் மீது எந்த விமர்சனத்தையும் முதல்வர் பழனிசாமி முன்வைக்காததால், ‘ இணைப்பு என்ற பெயரில் கபட நாடகம் ஆடுகின்றனர்’ எனக் கடுமையாக விமர்சித்தார் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி.

இழுபறி

எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி, பேச்சுவார்த்தைக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ‘ நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி ஆகியவற்றில் இருந்து சசிகலா உறவுகள் வெளியேற வேண்டும்; குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவிக்க வேண்டும்’ எனப் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைளுக்கு பழனிசாமி அணியில் இருந்து சில அமைச்சர்கள் ஒத்துக் கொள்ளாததால், மறைமுக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

முன்னிறுத்துங்கள் 

எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாடுகள் குறித்து, பிரதமரிடமே நேரிடையாக குற்றம் சுமத்தினார். இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசியும் இரண்டு அணிகளும் உடன்படவில்லை. தமிழக பா.ஜ.க பிரமுகர் ஒருவரும் சமாதானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஒருகட்டத்தில், முதல்வர் பழனிசாமியிடம் பேசிய அவர், ‘ உங்களை தனித்தன்மை உள்ளவராக முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் இருக்கிறது. எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்’ எனத் தெளிவாகக் கூறிவிட்டனர். இதுகுறித்து பா.ஜ.க தலைமையின் கவனத்துக்கும் அந்த பிரமுகர் எடுத்துச் சென்றார்.

இணையச் சொன்னாரா மோடி? 

கடந்த மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு வந்தார் பிரதமர் மோடி. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ‘ சுதந்திர தினத்துக்குள் இரண்டு அணிகளும் இணைந்துவிடுங்கள். இதற்கு மேலும் அவகாசம் எடுத்துக் கொண்டால், நிலைமை வேறு மாதிரி சென்றுவிடும்’ என உறுதியாகக் கூறிவிட்டார் என கூறப்படுகிறது.

தினகரன் அலர்ட்

இதன்பின்னர், பன்னீர்செல்வம் அணிக்கும் தனியாக நேரத்தை ஒதுக்கிப் பேசினார் பிரதமர். அப்போதும் இதே கருத்துக்களைக் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு பன்னீர்செல்வத்தின் முகம் பிரகாசமாகிவிட்டது. இரண்டு அணிகளும் இணைப்பை நோக்கி முன்னேறுவதை அறிந்த தினகரன், தொடர் சுற்றுப்பயணத்துக்கு நாள் குறித்தார் தினகரன். இன்னும் ஓரிரு நாட்களில் மேலூரில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் தினகரன். ‘ இந்தப் பயணத்துக்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டால், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடுவார்கள்’ என கொங்கு டீம் பயந்தது.

எடப்பாடி எச்சரிக்கை

இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்த ஆலோசனை ஒருபுறம் நடந்தாலும், ‘ ஒரே அடியாக அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டால் போதும்’ என முடிவெடுத்தனர். நேற்று முன்தினமே இந்த முடிவை எடுத்துவிட்டதால், நேற்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், ‘ இந்த ஆட்சியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது’ எனக் கொந்தளித்தார் எடப்பாடி பழனிசாமி.

மடியில் கனம்

‘மத்திய அரசின் அழுத்தம் இல்லாமல் இப்படிப் பேச முடியாது’ என்பதை அறிந்த தினகரன், ‘ அமைச்சர்கள் ஒருவித பயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மடியில் கனம் இருக்கிறது’ என இன்று பேட்டியளித்தார். ‘ சசிகலா நியமித்த பதவிகள் அனைத்தும் செல்லும்; தேர்தல் ஆணையத்துக்குப் போனால் முதலமைச்சர் பதவியிலேயே எடப்பாடி நீடிக்க முடியாது’ எனக் கூடுதலாகக் கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரன். மாமியார் சந்தானலட்சுமி மரணமடைந்த அன்று திவாகரனுடன் கை குலுக்கிய தினகரன், தற்போது துக்க காரிய நாளில் அடுத்த அதிரடியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

%d bloggers like this: