“எப்போதும் கவிழ்ப்பேன்!” – ‘மூக்குப்பொடி’ தினகரன் – ‘தேசியக்கொடி’ எடப்பாடி

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகளைப் பார்வையிட்டுவிட்டு வந்த கழுகார், ‘‘கோட்டை வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று  சொன்னபடி அமர்ந்தார்.
‘‘கோட்டை உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதே?’’ என்றோம்.

‘‘ஆமாம்! ‘எந்த நேரமும் ஆட்சியைக் கவிழ்ப்பேன்’ என்று சொல்லி வருகிறார் தினகரன். சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்குமுன், டெல்லி கொடுத்த வேலைகளை வேகமாக முடிக்கவேண்டிய நிர்பந்தம் எடப்பாடிக்கு. இப்போது அந்த வேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.”
‘‘அதுதான் தினகரன் அறிவித்த நியமனங்களும் செல்லாது, தினகரனைத் துணைப்பொதுச் செயலாளராக சசிகலா நியமித்ததும் செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டாரே?”
‘‘தனக்குக் கொடுத்த வேலைகளை எடப்பாடி கச்சிதமாகச் செய்துவருகிறார். இரண்டு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் வேகமாக இறங்கியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்வுக்கு எடப்பாடியும்,
ஓ.பி.எஸ்ஸும் டெல்லி சென்றிருந்தபோதே, அங்கு வைத்து இருவரையும் பிரதமர் மோடி சந்தித்தார். இரண்டு அணிகளையும் இணைப்பதற்கான கெடு அப்போதே டெல்லி தரப்பில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. வெள்ளிக்கிழமை துணை ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து டெல்லியில் தகவல் தர வேண்டிய நிர்பந்தம் இருந்தது. எடப்பாடிக்கு இடம் தருவது போல தினகரனும் புதிய நிர்வாகிகள் நியமனம், பழைய நிர்வாகிகள் சிலர் நீக்கம் என்று சீற்றம் காட்டினார். இதை வைத்து தன் வேலைகளைக் கச்சிதமாக முடித்துவிட்டார் எடப்பாடி.’’
‘‘பன்னீர் என்ன செய்தார்?’’

‘‘குடிநீர்ப் பிரச்னை மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவது போன்ற விஷயங்களில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி, பன்னீர் அணி ஆகஸ்ட் 10-ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரவில்லை. கோர்ட்டுக்குப் போகலாம் என அவர்கள் நினைத்த சூழலில், தினகரனுக்கு எதிராக தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி எடப்பாடி தரப்பிலிருந்து பன்னீருக்குச் சொல்லப்பட்டது. அதனால் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டுக் காத்திருந்தனர்.’’  
‘‘விரைவில் இணைப்பு இருக்கும் என்கிறார்களே?”
‘‘பிடிவாதமாக, ‘அணிகள் இணைய வேண்டுமானால், எனக்கு முதல்வர் பதவி வேண்டும்’ என்று சொல்லிவந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் இறங்கி வருவதாகச் சொல்கிறார்கள். பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பதவியை இப்போது யாருக்கும் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதால், அதையும் பன்னீருக்குக் கொடுக்க முடியாது. இநக்ச் சூழலில் ‘வழிகாட்டுதல் குழுத் தலைவர்’ என்று ஒரு புதிய பதவி உருவாக்கப்பட உள்ளது. அந்தப் பதவி ஓ.பி.எஸ்.ஸுக்குக் கொடுக்கப்படும் என்கிறார்கள். ‘இப்படி ஒரு பதவியை உருவாக்க முடியுமா? இதற்குச் சட்டச் சிக்கல் வருமா?’ என்றெல்லாம் பன்னீர் தரப்பில் சில வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதுபோல, ‘துணை முதல்வர் பதவியைக் கொடுக்கிறோம்’ என எடப்பாடி தரப்பு சொன்னதை ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்ளவில்லை. துணை முதல்வர் என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த ஒரு பதவி கிடையாது. ஒரு கேபினட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆட்சியில் பங்கேற்றால், தனது பிடி தளர்ந்துவிடும் என்று நினைக்கிறார். எனவே, ‘தற்போதைக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ என்று அவர் இறங்கி வந்துள்ளார் என்கிறார்கள். ஆனால், ‘துணை முதலமைச்சர் என்ற பெயரோடு, உள்துறை மற்றும் பொதுத்துறை ஆகிய துறைகளைக் கவனிக்கும் அமைச்சர் பதவியை பன்னீர் கேட்கிறார்’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிற இந்தத் துறைகள் முதலமைச்சர் வசமே இருப்பது அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சியில் மரபாக இருக்கிறது.’’

‘‘ஓ.பி.எஸ் அணியில் உள்ளவர்கள் இந்த டீலுக்கு ஒப்புக்கொள்கிறார்களா?’’
‘‘மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் ஆகியோர் இதைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள்   ஓ.பி.எஸ்ஸிடம்,  ‘எடப்பாடி அணி நிறைவேற்றிய தீர்மானத்தில், சசிகலா நீக்கம் பற்றி ஒன்றும் இல்லை. அதுபோல, தினகரனை நியமித்தது செல்லாது என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். மாறாக, தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் என்று ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை. அதனால், இணைப்புக்கு ஒப்புக்கொள்ளாதீர்கள்’ எனச் சொல்லி இருக்கிறார்கள். ஓ.பி.எஸ்ஸும் ‘இது ஒரு நாடகம்தானோ’ என்று சந்தேகப்படுகிறார். ஆனால், ‘டெல்லி சொல்கிறதே… வேறு என்ன செய்ய முடியும்?’ எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்.”
‘‘டெல்லியில் வேறு என்ன வேலைகள் நடக்கின்றன?”
‘‘எடப்பாடி அணி, ‘தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது’ என அறிவித்ததுபோல், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைக் காவு வாங்கும் வேலைகள் டெல்லியில் வேகம் பிடித்து உள்ளன. தேர்தல் ஆணையமே ‘சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது’ என அறிவிக்கும் செய்தி விரைவில் வெளிவரும்.”
‘‘சட்டரீதியாக இவை எல்லாம் சரிப்பட்டு வருமா?”
‘‘நியாயமாக தற்போது அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்வு நடந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. சசிகலா நியமனப் பொதுச் செயலாளர்தான். அதனால், விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அதற்குத் தடையாக இருப்பவை, ஓ.பி.எஸ் அணியினரும்,  எடப்பாடி அணியினரும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பிரமாணப் பத்திரங்கள்தான். அவற்றை வைத்து என்ன செய்யலாம் என்ற சட்ட ஆலோசனைகள் இப்போது வேகம் பிடித்துள்ளன. அதோடு, ‘எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது செல்லாது’ என பன்னீர் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் போட்ட வழக்கும் இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. ‘இணைப்பின் மூலம் இந்த எல்லா சட்டப் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதே இப்போது எடப்பாடியின் இலக்காக இருக்கிறது.’’
‘‘ஓஹோ!”
‘‘கட்சிகள் இணைப்பு நடந்து, அதன்பின் பொதுக்குழு கூடி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறலாம். ‘இரண்டு அணிகளும் இணைந்து அந்தப் பதவிக்கு பன்னீரை நிறுத்தும். ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரே அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வார். அதோடு சசிகலா சகாப்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்’ என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன!”
‘‘சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடிகள் அதிகம் ஆகுமே?”
‘‘சசிகலா சிறைக்குச் சென்றதுமே பாதிப்புகள் தொடங்கிவிட்டன. கான்ட்ராக்ட்கள், போஸ்டிங், டிரான்ஸ்ஃபர் என அனைத்திலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டது. இப்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டார்களாம். சசிகலா குடும்பத்தில் உள்ள அனைவருமே, ‘தாங்கள் ஏமாற்றப்பட்டோம்… பழிவாங்கப்பட்டோம்’ என நினைக்கிறார்களாம். எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா, தன் குடும்பத்தை விட்டு கட்சி போய்விடக்கூடாது என்பதற்காக டி.டி.வி.தினகரனைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டு ஜெயிலுக்குப் போனார். ‘ஆட்சி எப்போதோ நம் குடும்பத்தைவிட்டுப் போய்விட்டது. இப்போது கட்சியும் போகப் போகிறது’ என்று சசிகலா குடும்பத்தினர் துடிக்கிறார்கள். திவாகரனால் உருவாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒருகட்டத்தில் திவாகரனுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். அதுமுதலே மதில்மேல் பூனையாக இருந்தவர், இப்போது எடப்பாடியோடு கைகோத்திருக்கிறார். சசி குடும்பத்தின் விவரங்களை முழுமையாக அறிந்தவர் வைத்திலிங்கம். அவரை வைத்து சசிகலா குடும்பத்தைச் சமாளிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.”
‘‘தினகரன் கதி..?”
‘‘அவர் தெளிவாக இருக்கிறார். ‘ஆட்சி இருப்பதால்தானே ஆடுகிறார்கள். ஆடட்டும்’ என்பதுதான் அவரது கிண்டல் கணிப்பு. தினகரனுக்கு ஆதரவாக மட்டும் 36 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதுபோக திவாகரனிடம் குறைந்தது 15 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பில் இருக்கிறார்களாம். இதில் ஒருசில அமைச்சர்களும் அடக்கம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலில் தினகரனின் பின்னால் நின்றார். இன்று எடப்பாடியின் பின்னால் இருக்கிறார். இவரைப் போல் பதவிக்காகப் பல்டி அடிப்பவர்களும் இந்த அமைச்சரவையில் இருக்கிறார்கள். இவர்களை வைத்து முதலில் ஒரு மூவ் தொடங்கப் போகிறது!”
‘‘அது என்ன?”
‘‘முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதுதான் சசிகலா குடும்பத்தின் முதல் கோரிக்கையாம். தங்கள் குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் யாராவது ஒரு அமைச்சரைக் கையைக் காட்டி ‘இவரை முதல்வர் ஆக்குங்கள்’ என்பார்களாம். இப்படி யாருக்காவது ‘முதல்வர் பதவி’ சபலத்தைக் காட்டினால், எடப்பாடி கூடாரம் ஆட்டம் காணும் என்பது அவர்களின் நினைப்பு. அதோடு, ‘அமைச்சர் பதவியில் இருந்து வேலுமணி, தங்கமணி ஆகிய இருவரையும் தூக்க வேண்டும்’ என்பார்களாம். இவை நடக்கவில்லை என்றால், ‘எந்த நிமிடமும் ஆட்சியைக் கவிழ்ப்பேன்’ என்பதுதான் தினகரனின் சபதம்!”
‘‘அது நடக்குமா?’’
‘‘தஞ்சாவூரில் திவாகரன் பேசியதன் அர்த்தத்தைக் கவனியும். ‘பதவிக்கு வந்தபிறகு பலரின் குணம் மாறிவிடுகிறது’ என்று எடப்பாடியைக் காய்ச்சி எடுத்த திவாகரன், ‘கட்சி நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடும். ஆட்சியைக் காப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றார். மேலும் ‘துணைப் பொதுச் செயலாளர்’ என்று அவர் தினகரனைக் குறிப்பிட்டார். தினகரனும் திவாகரனும் தங்கள் வசம் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு எடப்பாடியை வீழ்த்தமுடியும் என நம்புகிறார்கள். ஆனால், இவர்களில் எத்தனை பேர் இவர்களிடம் விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதுதான் கணிக்க முடியாத விஷயம்.’’
‘‘இவ்வளவு களேபரங்களுக்கு இடையில், கூலாக திருவண்ணாமலையில் ஒரு சாமியாரிடம் ஆசி வாங்கி இருக்கிறாரே தினகரன்?’’

‘‘மூக்குப்பொடி சித்தர் என்று அவரை திருவண்ணாமலையில் அழைக்கிறார்கள். ரஜினிகாந்த் முதல் பல வி.வி.ஐ.பி-க்கள் இவரிடம் ஆசி வாங்கியுள்ளனர். இவரின் சொந்த ஊர் எது, எப்போது திருவண்ணாமலைக்கு வந்தார் என்ற விபரங்கள் எதுவும் யாருக்கும் தெரியாது. ‘மின்சாரக்கம்பியில் சர்வ சாதாரணமாக அவர் நடந்து சென்றார். அதுமுதல் உள்ளூரில் பிரபலமாகிவிட்டார்’ என்றும் சொல்கிறார்கள். யாராவது பணம் கொடுத்தால் அதைக் கிழித்துப் போட்டுவிடுவார். பச்சை நிறப் போர்வை மட்டுமே உடுத்தியிருப்பார். அவர் யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டார். யாரையும் எளிதாகப் பார்க்கவும் மாட்டார். அவர் பார்வை யார் மேல் படுகிறதோ, அவர்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறும் என்கிறார்கள்.”
‘‘இவரை எப்படி தினகரன் பார்த்தார்?’’
‘‘எடப்பாடி அணியினர் தனக்கு எதிராக முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்து, தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். திருவண்ணாமலை ஆகாஷ் ஓட்டல் முத்துகிருஷ்ணன்தான் அப்போது இந்தச் சாமியார் பற்றி சொல்லியிருக்கிறார். அவரின் ஆலோசனைப்படி, இரவு முழுவதும் தியானத்தில் இருந்துவிட்டு, மூக்குப்பொடி சித்தரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார். மூக்குப்பொடி சித்தருக்குப் பச்சை கலர் சால்வை கொடுத்து, அவர் பார்வை தன்மீது விழும் வரை அங்கேயே பவ்யமாக அமர்ந்திருந்தார்’’ என்று சொன்னபடி எழுந்த கழுகார், ‘‘மூக்குப் பொடிக்கும் தேசியக் கொடிக்கும் என்ன சம்பந்தமோ?’’ என்றபடி பறந்தார்.

%d bloggers like this: