நாங்களா 420.. தினகரனுக்குத்தான் அது பொருத்தம்… போட்டுத் தாக்கும் முதல்வர் எடப்பாடி!

டெல்லி: மோசடி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்தபடி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார் டிடிவி தினகரன்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஃபோர்ஜரி, அவர் ஒரு 420 என விளாசினார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் ஒன்றும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் ஃபோர்ஜரி போல் பேசுவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் 420 என குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர்.

420க்குப் பொருத்தமானவர் அவர்தான்

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி 420 என்பது டிடிவி தினகரனுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்றார். மேலும் கடந்த 3 மாதங்களாக டிடிவி தினகரன் பார்த்து வரும் வேலைகள் உங்களுக்கே தெரியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.

மாறி மாறி தாக்கு

டிடிவி தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி 420, போர்ஜரி, மோசடி என பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வட்டாரத்தை இது மேலும் சூடாக்கியுள்ளது.

என்னவோ நடக்கப் போகுதோ

இன்று தினகரன், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியார் தரப்பு மாறி மாறி பல்வேறு புகார்களைக் கூறி வருகின்றன, சாடி வருகின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது என்னவோ நடக்கப் போவதாக அதிமுகவினர் கவலையுடன் காத்துள்ளனர்.

%d bloggers like this: