ஸ்பைருலினா – உணவுகளின் சூப்பர் ஸ்டார்

ஸ்பைருலினா… இது நீலப்பச்சைப் பாசி இனத்தைச் சேர்ந்த ஒருவகை உப்பு; நன்னீரில் வளரும் பாசி வகையைச் சேர்ந்தது.
நம் உடலுக்கும் மூளைக்கும் நன்மை செய்யும் ஊட்டச்சத்துகள்  நிறைந்தது.  இதன் காரணமாகவே ஸ்பைருலினாவை, `உலக அளவில் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்கும் திறன்கொண்டது’ என்று கூறுகிறார்கள். பெரும்பாலான தாவரங்களைப்போல் இல்லாமல், எல்லா தட்பவெப்பநிலைகளிலும்  செழித்து வளரக்கூடியது. அதிலும் நாசா (NASA) அமைப்பு விண்வெளி வீரர்களுக்கு உணவாகப் பயன்படுத்திய பிறகு `ஸ்பைருலினா’ மிகவும் பிரபலமாகிவிட்டது.

`ஸ்பைருலினாவைப் புரதம்  மற்றும்  வைட்டமின்களின் ஆதாரம்  என்றே சொல்லலாம். 70 சதவிகிதம் வரை  உயர்ந்த வகை  புரோட்டீனையும் பி 12 வைட்டமின், வைட்டமின் ஏ, பினோலிக் (Phenolic) மற்றும் லினோலெனிக் அமிலங்களும்  (Linolenic Acid) நிறைந்தது.  செல்லுலோஸால் ஆன  செல்சுவர்கள்  ஸ்பைருலினாவில்  இல்லாததால்   எளிதில் செரிமானமாகக்கூடியது.
நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய்  போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவும். எனவே ஸ்பைருலினா ஒரு `சூப்பர் உணவு’ என்று அழைக்கப்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடண்ட்கள் (Antioxidants) நிறைந்தது ஸ்பைருலினா. இவை, நம் செல்கள் சேதமாகாமல் தடுக்கும். ரத்தச் சர்க்கரை,  கொலஸ்ட்ரால்  அளவுகளைக்  குறைக்கும்.  தினமும் இரண்டு கிராம் அளவு ஸ்பைருலினா சாப்பிட்டு வந்தால்,  ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் வரும். மேலும், `இதை உட்கொள்வதால், எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்; ஹெச்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவு உயரும்’ என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

தூசி,  மகரந்தத்தூள்,  விலங்கின் முடிகள்  போன்ற சுற்றுச்சூழல் ஒவ்வாமைகளால்  ‘அலெர்ஜிக்  ரைனிட்டிஸ்’ (Allergic Rhinitis)  எனப்படுகிற ஒவ்வாமை நோயின் அறிகுறிகளுக்கு  ஸ்பைருலினா ஓர் அருமையான மாற்று மருந்து.
நிலத்தடி நீரிலும், குடிநீரிலும் இயல்பாகவோ,  மனித நடவடிக்கைகளின்  விளைவாகவோ ஏற்படும் ஆர்சனிக்கின்  நச்சுத்தன்மை  மனிதனுக்கு மரபணு நோய்களை ஏற்படுத்தக்கூடியது.  ஆர்சனிக் நிறைந்த  நீர்  இருக்கும் இடங்களில்  ஸ்பைருலினாவை வளர்க்கும்போது தண்ணீரில் உள்ள ஆர்சனிக்கை ஸ்பைருலினா உறிஞ்சி எடுத்துக்கொண்டு நன்னீரை மட்டும் கொடுக்கிறது.
ஸ்பைருலினா, வருங்காலத்தின் சூப்பர் உணவுகளில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

%d bloggers like this: