Advertisements

தினகரன் Vs எடப்பாடி! யார் 420

ச்சீ 420(போஃர் ட்வென்ட்டி)’ எனத் தமிழ் திரைப்படங்களில் காதலி, காதலனை செல்லமாகத் திட்டும் காட்சிகள் பிரபலம்; ‘420 பீடா’ ரகம் பரவலாக அறியப்பட்ட லகிரி வஸ்து; ராஜ்கபூர் ‘ஸ்ரீ420’ என்ற பெயரில் ஹிந்திப் படம் ஒன்றை தயாரித்தார். என்றளவிலும், அடிக்கடி 420 பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகளின் மூலம் 420 என்ற வார்த்தை அகில இந்தியப் பிரபலமாகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு நாட்களாக 420 என்பது வைரலாக வலம் வந்தது. 420-ல் அப்படி என்னதான் இருக்கிறது? 

நீயும் 420… நானும் 420…

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நியமனம் செல்லாது என தமிழக முதல்வர் எடப்பாடி, தன் அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும், அதன் சின்னமான இரட்டை இலையும் தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழலில், முடக்கி வைக்கப்பட்ட கட்சியின் ‘லெட்டர்பேட்’ல், என்னை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது ஏமாற்று வேலை. இதுபற்றித் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதில் கையெழுத்துப் போட்டவர்கள் அனைவரும் பதவி இழக்க நேரிடும். இது 420 வேலை” என்றார். தினகரன் இப்படிச் சொன்னதற்கு டெல்லியில் வைத்துப் பதில் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 420 என்பது தினகரனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்” என்றார். அவர்கள் சொன்ன அந்த 420 என்ன? 

இந்தியாவில் 420!

420 என்ற பெயரில் போதை பீடா பழக்கத்தில் உள்ளது. அதுதவிர 1955-ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் நடிப்பில் ‘ஸ்ரீ 420’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தை இயக்கியதும், தயாரித்ததும் ராஜ்கபூர் தான். அதன்பிறகுதான் 420 என்ற வார்த்தையும் எண்ணும் இந்தியாவில் பிரபலமானது.  என்றாலும், தினகரனும் எடப்பாடியும் சொன்ன 420-க்கு அது அர்த்தம் இல்லை. மாறாக, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 420-வது பிரிவைக் குறித்தது அது. இந்திய தண்டனைச் சட்டம்(இ.த.ச 420 அல்லது இ.பி.கோ 420 அல்லது IPC 420) 420-வது பிரிவு ஏமாற்றுதல் என்பதைக் குற்றமாகக் காட்டுகிறது. இந்திய தண்டனைச் சட்டம்  420-ன் படி, ஒருவரை உள்நோக்கத்துடன் அணுகி, அவரை ஏமாற்றி அவருக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், ஏமாற்றும் நபர் ஆதாயமும் அடைந்தால் அது குற்றமாகும். அந்தக் குற்றத்தை 420-வது பிரிவு குறிக்கிறது. அதற்குத் தண்டனையாக அதிகபட்சம் 7 வருடங்கள் சிறையும், அபராதமும் (அபராதத் தொகைக்கு வரம்பு இல்லை) உண்டு.

பொதுவாக பொருளாதாரக் குற்றங்கள், அரசியல்வாதிகள் மீது அதிகமாக இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஏனென்றால், பொருளாதாரக் குற்றங்கள் என்றாலே, அதன் மூலம் ஒருவர் அல்லது பலர் ஏமாற்றப்படுவதும், ஒரு நபர் அல்லது பலர் ஆதாயம் அடைவதும் இயல்பு. அதனால், அதுபோன்ற வழக்குகளில் 420 பிரிவு அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. மேலும், அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் இதுதான் நிலை. அவர்கள் அரசாங்கத்தை, துறையை ஏமாற்றி ஆதாயம் சொத்து சேர்த்து ஆதாயம் அடைவதால் இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச் சதி மற்றும் 420 என்ற பிரிவுகளில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுபோல, 2ஜி ஊழல் வழக்கு, ஏர்செல்-மேக்ஸிஸ் ஊழல் வழக்குகளிலும் இந்தப் பிரிவுதான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் மணல் மாபியாவாக அறியப்படும் சேகர் ரெட்டி மீது தொடரப்பட்டுள்ள வழக்கிலும் 420 பிரிவு பயன்படுத்தப்பட்டு உள்ளது. எடப்பாடியும், தினகரனும் சொன்ன 420-க்குப் பின்னால் உள்ள கதை இதுதான். 

420 பிறந்த கதை!

பொதுவாக உலக அளவில் 420 என்பது, கஞ்சா புகைப்பவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் அமெரிக்காவில் 5 பள்ளிக்கூடச் சிறுவர்கள்தான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த பள்ளிக்கூடத்தின் பெயர் சான் ரஃபேல். அந்தப் பள்ளியில் ஸ்டீவ் கேப்பர், டேவ் ரெடிக்ஸ், ஜெப்ரி நோயல், லாரி ஸ்வார்ட்ஸ், மார்க் கிரேவிச் என்ற 5 மாணவர்கள் படித்தனர். நண்பர்களான அவர்கள் 5 பேரும் தங்கள் கேங்குக்கு வைத்துக் கொண்ட பெயர் ‘வால்டோஸ்’. பள்ளிக்கூடத்தின் வெளியில் இருந்த காம்பவுண்ட் சுவரில் அமந்து, தினமும் கஞ்சா புகைப்பதால், இவர்கள் தங்கள் கேங்குக்கு ‘வால்டோஸ்’ என்று பெயர் வைத்துக் கொண்டனர். ‘வால்டோஸ்’ குழுவில் இருந்த, ஸ்டீவுக்கு, ஒரு ரகசிய மேப் கிடைக்கிறது.

கப்பல் படை வீரர் ஒருவருக்குச் சொந்தமான அந்த மேப்பில், ஒரு பானையில் கஞ்சாவை அடைத்து புதைத்து வைத்துள்ள இடம் பற்றிய குறிப்பு இருக்கிறது. இந்த ரகசியத்தை ஸ்டீவ் தன் வால்டோஸ் குழு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, கஞ்சா பானையைத் தேடிக் கண்டுபிடிக்க முடிவெடுக்கின்றனர். அதற்காக தினமும், மாலை 4.20 மணிக்கு, லூயிஸ் பாஸ்டர் சிலை முன்பு வால்டோஸ் குழு ஆஜராகிவிட முடிவு செய்யப்படுகிறது. அதுபோல், தினமும் 4.20 மணிக்கு ஆஜரான அந்தக் குழு, கஞ்சா அடைக்கப்பட்ட பானையைத் தேடுகிறது. ஆனால், அவர்களால் கடைசிவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் தேடுதல் வேட்டையின் போது, வால்டோஸ் குழுவோடு, ‘420 லூயிஸ்’ என்ற பதம் ஒட்டிக் கொள்கிறது. இந்தத் தகவலை, பின்னாட்களில் சினிமாத்துறைக்கு வந்த, டேவ் ரெடிக்ஸ் என்ற வால் டேவ் தனது நண்பர்களிடமும் பேட்டிகளிலும் தெரிவித்தார். 

பள்ளிப்படிப்பை முடித்த வால்டோஸ் குழு(அதில் முன்பிருந்த சிலர் வெளியேறி, வேறு பலர் புதிதாக இணைந்து கொண்டனர்), 1965-ம் ஆண்டு உருவான ‘கிரேட்புல் டெட்’ எனும் ராக் இசைக்குழுவுடன் இணைந்தது. ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்திய அந்தக் குழு, கஞ்சா புகைக்கும் பழக்கத்தை பிரபலப்படுத்தியது. 420 என்ற வார்த்தை பரவலானதன் ஆதிக்கதை இதுதான். 

இந்திய தண்டனைச் சட்டப்படி ஏமாற்றுவதைக் குறிப்பதுதான் 420 என்றால், தினகரனும், எடப்பாடியும் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு சூழலில் 420யே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: