மருத்துவரிடம் இதையெல்லாம் மறைக்காதீங்க…

க்கீலிடமும் டாக்டரிடமும் பொய் சொல்லக்கூடாது, உண்மையை மறைக்கக் கூடாது’ என்று பொதுவாகப் பலரும் சொல்லக்கேட்டிருப்போம். காரணம், வக்கீலிடம் பொய் சொன்னால், வழக்கில் சிக்கல் உண்டாகும். டாக்டரிடம் பொய் சொன்னால், உடலில் என்ன பிரச்னை எனச் சரியாகக் கண்டறிய முடியாமல் போய்விடும்.

உடலில் உள்ள பிரச்னைகளை மறைத்து மருத்துவரிடம் பொய் சொல்வதால், அந்த நோயாளிக்குப் பிரச்னை அதிகமாகி நோயின் தீவிரமும் அதிகமாகும். ஏன், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைக்குக்கூட கொண்டுசெல்லலாம்.

டாக்டரிடம் ஏன் பொய் சொல்லக்கூடாது?

`நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’

என்று வள்ளுவர் சொன்னதுபோல, தனக்குள் இருக்கும் பிரச்னைகள், கஷ்டங்கள் எதையுமே மறைக்காமல் மருத்துவரிடம் அப்படியே சொன்னால்தான் மருத்துவர்களால் நோயைச் சரியாகக் கண்டறிந்து மருந்துதர முடியும். நோயின் மூலக்காரணம் தெரிய, நோயாளி தன் உடலில் ஏற்படும் அத்தனை வலிகளையும் அறிகுறிகளையும் மறைக்காமல் சொல்வதே சரியான தீர்வுக்குப் பாதை வகுக்கும்.

சில நோயாளிகள் தமக்கு  ஏற்பட்டிருக்கும் நோயின் தீவிரத்தைப்பற்றிக் கவலைப்படாமல், வாய்க்கு வந்ததை மருத்துவர்களிடம் சொல்வார்கள். சாதாரண நோயாக இருந்தால், நோயாளி மாற்றிச்சொன்னாலும், ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால், கடுமையான நோயாக இருந்து, அதை மறைத்துச்சொன்னால் பரிசோதனைகளைச் செய்யவும் நோயைக் கண்டுபிடிக்கவுமே மருத்துவருக்கு அதிக நாள்கள் தேவைப்படுவதால், உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் நோயாளிக்குத்தான் பாதிப்பு.

உண்மையை மறைக்கும் நோயாளிகள்

காசநோய் இருக்கிறது என்பதில் கூச்சம்

என்னிடம் சிகிச்சைபெறவந்த நோயாளி ஒருவருக்குக் காசநோய்க்கான (Tuberculosis) அறிகுறிகள் இருந்தன. உங்கள் வீட்டில் யாருக்காவது காசநோய் இருக்கிறதா, உங்களுக்கு இதற்குமுன் காசநோய் வந்து அதற்கு மருந்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்று கேட்டேன். `எதுவுமே கிடையாது, வீட்டில் யாருக்குமே வந்ததில்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். மார்புப் பகுதியில் எக்ஸ்ரேயும் மற்ற பரிசோதனைகளையும் செய்து பார்த்தபோது, அவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே காசநோய் வந்து, அதற்கு அரைகுறையாக மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. எல்லாப் பரிசோதனைகளையும் கையில் வைத்துக்கொண்டு, அந்த நோயாளியைக் கொஞ்சம் கோபமாகக் கேட்டபோது, உண்மையை ஒப்புக்கொண்டார். `தனக்குக் காசநோய் இருக்கிறது என்ற தகவல், டாக்டர் மூலமாகத் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிந்துவிடுமோ? என்ற பயத்தால் பொய் சொன்னேன்’ என்றார் அந்த நோயாளி.

பல வருடங்களாக இருக்கும் உதிரப்போக்கு

38 வயது நிரம்பிய அந்தப் பெண்ணுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருந்திருக்கிறது. இதை யாரிடமும் சொல்லாமல், சமாளித்துக்கொண்டு பல ஆண்டுகளாகக் காலத்தைக் கடத்தியிருக்கிறார். ஒருநாள்  ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு திடீரென்று மயக்கம்போட்டுக் கீழே விழ, அவரை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருந்தனர். உடலில் ரத்தமே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்தப் பெண்ணின் உடல்நிலை இருந்தது. உடனடியாக ரத்தம் ஏற்றப்பட்டது. பல மணிநேரம் கழித்துக் கண்விழித்த அந்தப் பெண்ணிடம் `ஏம்மா உனக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்குமா, அடிக்கடி இப்படி ஏற்படுமா, இதை ஏன் வீட்டில் உள்ளவர்களிடம் மறைச்சீங்க’ எனக் கேட்டதற்கு, “இந்தப் பிரச்னையைச் சொன்னால், டாக்டர் உடனே கர்ப்பப்பையை எடுத்துடுவார்னு பக்கத்து வீட்டுப் பெண் பயமுறுத்தியதால், பல வருஷமாகப் பிரச்னையை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டேன்’ என்றார். அவரின் உடல்நிலை, நோயின் தீவிரம் எதுவும் தெரியாமல் உண்மையை மறைத்ததால் மோசமான உடல்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் அந்தப் பெண்.

இளம் வயதிலே போதைக்கு அடிமை

கல்லூரி மாணவரை என்னிடம் அழைத்துவந்திருந்தார் அவரின் தாய். `சரியா சாப்பிட மாட்டேங்கிறான். பசியில்லைங்கிறான். யாரிடமும் பேசமாட்டேங்கிறான். காலேஜ் முடிஞ்சு தினமும் லேட்டாத்தான் வர்றான். தினமும் காசு கேட்கிறான். கொடுக்கலைன்னா ரொம்பக் கோபப்படறான்’ என்று தன் மகனைப் பற்றி நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் முடிந்தவரை பிரச்னை என்ன என்று அவனிடம் கேட்டுப்பார்த்தேன். பதில் இல்லை. மது, புகையிலை போன்ற பழக்கங்கள் இருக்கிறதா என்றும் கேட்டேன். அதற்கும் பதில் இல்லை. சரி, சிறுநீர் பரிசோதனை (Urine test) செய்து பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து சிறுநீர் பரிசோதனையைச் செய்யச்சொன்னேன். ரிசல்ட் வந்தது. கஞ்சா போன்ற போதை மருந்துகளை அந்தப் பையன் பயன்படுத்துவது, சிறுநீர் பரிசோதனையின்மூலம் உறுதிசெய்யப் பட்டது. இவனைப்போல தூக்க மாத்திரைகள், போதை வஸ்துகள் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்கள், தன்னிடம் உள்ள கெட்டபழக்கத்தை மருத்துவரிடமும் குடும்பத்தினரிடமும் சொல்லவே மாட்டார்கள். இவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். நாமாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஸ்வீட் சாப்பிட்டதை மறைக்கும் சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் பலர் உண்மையைவிட பொய்யைத்தான் அதிகமாகச் சொல்வார்கள். ‘இந்த மாதம் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது; ஸ்வீட் சாப்பிட்டீங்களா, கல்யாணம், ரிசப்ஷன் நிறைய போனீங்களா?’ எனக் கேட்டால், `அய்யய்யோ டாக்டர்… ஒரு சின்னத்துண்டு ஸ்வீட்கூட சாப்பிடவேயில்லை’ எனப் பொய் சொல்வார்கள். இந்த விஷயத்தில் நோயாளி பொய் சொல்கிறார் என்பதை உளவியல் மூலமாகவே மருத்துவர்களால் அறிந்து கொள்ளமுடியும். என்றாலும், ஸ்வீட் விஷயத்துக்காக எல்லாம் உயிரோடு விளையாடக் கூடாது. டாக்டரிடம் உண்மையைச் சொல்வதே நல்லது.

பாலியல் பிரச்னைகளை மறைக்கும் தம்பதியர்

செக்ஸ் பிரச்னைகளில் ஆண், பெண் இருவருமே டாக்டரிடம் பொய் சொல்வதுண்டு. இதனால், நோய் அதிகமாகி, தீர்வு கிடைக்காமல் போய்விடும். பாலியல், குழந்தையின்மை தொடர்பான பிரச்னைகளுக்குக் கணவன், மனைவி இருவருமே பொய் சொல்லாமல் டாக்டரிடம் உண்மையைச் சொல்லிவிடுவதுதான் நோயிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழி.

%d bloggers like this: