நான்கே வாரங்களில் நலம் நம் வசம்!

சிலர் புத்தாண்டு நாளில் தீர்மானங்கள் எடுப்பார்கள். அதன்படி ஜிம்மில் சேர்வது, உணவு முறையை மாற்றுவது எனச் சபதங்களைத் தொடங்குவார்கள். உண்மையில் எந்த மாற்றமாக இருந்தாலும், படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் எளிதாக அந்த மாற்றத்துக்குப்

பழக்கப்படுத்திக்கொள்ளும். நல்ல பழக்கவழக்கங்களின் மூலம் நான்கே வாரங்களில் நலம் வாழ்வதற்கான வழிமுறைகள் இவை..

முதல் வாரம்: சமையல் அறையில் கவனம்!

மனிதர்கள் உயிர்வாழ அவசியமானது உணவு. அது ஆரோக்கியமற்றதாக இருந்தால், எவ்வளவு சாப்பிட்டும் பயனில்லை. எனவே, அதிக சோடியம், கொழுப்புள்ள உணவுகள், வெள்ளைச் சர்க்கரை, வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி ரீஃபைண்டு செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய்கள் ஆகியவற்றுக்குச் சமையலறையிலிருந்து விடைகொடுங்கள். இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், சீரகம் போன்றவை அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறட்டும். காய்கறிகளை  நீண்டநாள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தாமல், தினமும் ஃப்ரெஷ்ஷாக வாங்கிப் பயன்படுத்தவும்.

இரண்டாம் வாரம்: நடைப்பயிற்சி நல்லது!

அதிகாலை எழுந்து வாக்கிங் போவதை நடைமுறை படுத்துங்கள். முதல் நாளே முச்சிரைக்க நடக்காமல், 10 நிமிடங்கள் நடந்தால் போதும். அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொரு நிமிடமாக அதிகரித்துக்கொள்ளுங்கள். அது உங்களை ஊக்கப்படுத்தும்; உடலும் எளிதாகப் பழகிக்கொள்ளும்.

மூன்றாம் வாரம்: மூச்சுப்பயிற்சி முக்கியம்!

எங்கே இருந்தால் உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அங்கே அமர்ந்து உடலுக்கும் மனதுக்கும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு கொடுத்து, மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினமும் இந்த நேரத்தைப் படிப்படியாக உயர்த்துங்கள்.

நான்காம் வாரம்: தூக்கம்… ஆரோக்கியக் கேடயம்!

தூங்கச் செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்னர் தொலைக்காட்சி, கணினி, மொபைல்போன்  போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே படுக்கையறைக்குச் சென்று மூன்றாவது வாரம் செய்து பழகிய மூச்சுப்பயிற்சியைச் செய்யுங்கள்.

ஒரு மறுமொழி

  1. Very Nice

%d bloggers like this: