உடலினை உறுதி செய்!

மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது விளையாட்டுகள்.
மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செயல்.
மனிதனின் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, உடல் நலம், மன நலம் பேணுபவையாகவும் உள்ளன. வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களம்

என்றும் இதை கூறுவர். மனிதர்கள், இன்றைய நிலையை அடைவதற்கு முன், பல்வேறு நிலைகளை, பல்வேறு காலக்கட்டங்களில் கடந்து முன்னேறியுள்ளனர். வேட்டையாடி வாழ்ந்த காலத்திலும், நிலைத்த வாழ்வு வாழத்தொடங்கிய போதும் வேட்டை, போர் போன்றவற்றில் ஈடுபட்டனர். அதற்கென பல பயிற்சிகளில் ஈடுபட்டனர். சமுதாய மாற்றத்தின் காரணமாக, அப்பயிற்சிகள் விளையாட்டுகளாக உருவாயின.
நமது சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் விளக்க வல்லதில் முக்கியத்துவம் பெறுகிறது, கிராமப்புற விளையாட்டுகள். உளவியல் வழியாக பார்க்கும் போது, இவ்விளையாட்டுக்கள், மனதைப் பாதுகாக்கின்ற, ஒரு வடிகாலாக செயல்படுகின்றன. பகைவர்களிடமிருந்து பாதுகாக்கும் பயிற்சி முறையாகவும், மருத்துவ முறையாகவும் உள்ளன. சமயம் சார்ந்த சடங்காகவும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறாகவும் விளங்குகின்றன.
உடலினை உறுதி செய் என்று கூறிய பாரதியார், ஓடி விளையாடு பாப்பா என்றும் பாடியுள்ளார். சத்துணவு, உடற்பயிற்சி, மாலை நேர விளையாட்டுக்களால், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகின்றது. உளவியல் ரீதியாக, நமது மனம், அறிவானது, ஒரு மணி நேரத்தில், 25 நிமிடத்துக்கு மேல் எந்த செய்தியையும் உள்வாங்காமல் சோர்ந்து விடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
அப்படி இருக்க, 8 மணி நேரம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, எழுத்து, பரீட்சை, படிப்பு என்று இருந்தால் இவர்களின் உடலையும் மனதையும் மீள்திறன் ஆக்குவது உடற்பயிற்சி மட்டுமே. விளையாட்டுக்களால், குழு ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருவதுடன், உடலில் உள்ள கழிவு உப்புகள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை நீராவியாகும் போது, நம் உடல் குளிர்ந்து, உடல் வெப்பம் சீராகிறது. நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் டாப்மைன் என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கிறது.
பள்ளியிலோ, வீட்டிலோ குழந்தைகள், தினமும் குறைந்தபட்சம், ஒரு மணி நேரம் நேரம் விளையாடினால் தான் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என, சமீபகால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதிலும், குழந்தைகள் தங்கள் வயதை ஒத்த குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்பதில் தான் குழந்தைகளின் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது.
ஆனால், படிப்புக்கு ஒதுக்கப்படும் நேரத்தை போல், விளையாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பது தான் சோகம். இதனால், பல மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் இல்லாதது, மன உளைச்சல் போன்றவை தலைதூக்குகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பணிக்கு செல்வோருக்கும் கூட விளையாட்டுகள் தேவைப்படுகின்றன. ஒரே இடத்தில் இருந்து, எட்டு மணி நேரம் உழைத்து, களைப்பவர்களுக்கு, விளையாட்டு புத்துணர்வு தரும். அடுத்து செய்யக் கூடிய காரியங்களிலும், மனம் ஒத்துழைக்கும்.

%d bloggers like this: