எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” – சசி குடும்ப சபதம்

மூவண்ணக் கொடியைச் சிறகுகளில் செருகியபடி வந்தார் கழுகார். அச்சு அவசரம் கருதி, சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியைப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்து விட்டுப் பேசத் தொடங்கினார்.
‘‘மேலூரில் இருந்து தொடங்குகிறேன்… ‘கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்றுதான் டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர்

எதிர்பார்த்தது போலவே பிரமாண்டக் கூட்டத்தை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி கூட்டிவிட்டார். ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திகைப்பு… இன்னொரு பக்கம் ஷீர்டி, டெல்லி என்று சுற்றிவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி. தினகரன் திரட்டிய கூட்டத்தையும் அவர் பின்னால் இருக்கும் கட்சி வி.ஐ.பி-க்களையும் கணக்கெடுத்துக் கலங்கியிருக்கிறார்கள் இருவரும். ‘அணிகளின் இணைப்புக்கு பி.ஜே.பி வைத்திருந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கெடுவுக்குள் நல்ல செய்தியைச் சொல்லிவிட வேண்டும்… டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு முன்பாக அணிகள் இணைப்பு குறித்து ஏதாவது தகவலைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று இரு அணிகளுமே முனைப்பு காட்டிவந்தன. அதனால்தான், வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற விழாவுக்கு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், உடனே சென்னை திரும்பவில்லை.’’
‘‘டெல்லியில் நடந்தது என்ன?’’
‘‘துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெல்லி சென்றிருந்தனர். இருவரும் பிரதமரைச் சந்திக்க முயற்சி எடுத்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பினார். ஆனால், ஓ.பி.எஸ்ஸால் பிரதமரை உடனே சந்திக்க முடியவில்லை. ‘இரு அணியினரும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு இணைந்து வந்து என்னைச் சந்தியுங்கள்’ என்று பிரதமர் கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க முடியாமல் ஷீர்டி சாய்பாபா கோயில், சனி சிங்னாபூர் கோயில் என்று ஆலயப் பயணம் சென்று சாமி தரிசனம் செய்தார். ஷீர்டியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு 13-ம் தேதி அழைப்பு வந்தது. 14-ம் தேதி காலை 11 மணிக்கு வந்து பிரதமரைச் சந்தியுங்கள் என்று கூறினார்கள்.’’
‘‘அப்போதுதான் பன்னீருக்கு நிம்மதி வந்திருக்கும்!”

‘‘ஆமாம்! ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் பயணத்தை ரத்து செய்துவிட்டுப் புனே வழியாக டெல்லி சென்றார். பிரதமர் மோடியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். பிரதமரைச் சந்தித்தபோது சனி சிங்னாபூர் கோயில் பிரசாதத்தையும் பிரதமருக்கு வழங்கினார் ஓ.பி.எஸ். அவருடன் மைத்ரேயன் எம்.பி. மற்றும் நிர்வாகிகளும் சென்றிருந்தனர். இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க உள்கட்சி பிரச்னைகள் பற்றியே பிரதமரிடம் முறையிட்டுள்ளதாக பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.’’
‘‘என்னதான் பேசினார்கள்?’’
‘‘பிரதமர் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அணிகள் இணைப்பு குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிரதமர் இந்த முறை பன்னீரிடம் கொஞ்சம் கடுமையாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர். அவர் எப்போது வந்தாலும் அப்பாயின்ட்மென்ட் வாங்கி என்னைச் சந்திக்க முடியும். ஆனால், உங்களுக்கு ஒவ்வொரு முறையும் நேரம் ஒதுக்கித் தருவதில் எனக்குச் சங்கடங்கள் உள்ளன. அடுத்தமுறை இப்படி இரண்டு அணியினரும் தனித்தனியே வராதீர்கள்’ என்று கண்டிப்புடன் மோடி சொன்னாராம். மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். அரசின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். தமிழக மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க உள்ளேன்’ என்று சொன்னார்.’’
‘‘ஓஹோ…’’
‘‘நிருபர்கள் விடாமல், ‘அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா?’ என்று கேட்டனர். பன்னீர்செல்வத்தை முந்திக்கொண்டு இதற்குப் பதில் சொன்னார், எம்.பி மைத்ரேயன். ‘தமிழகத்தில் நிலவும் பொதுவான அரசியல் சூழல் குறித்தே பேசினோம். மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பிரதமர் தலையிடுகிறார் என்ற கருத்து குறித்துப் பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம்’ என்று கோபமாகச் சொன்னார் அவர்…’’
‘‘எடப்பாடி பழனிசாமி அணி என்ன நினைக்கிறது?’’
‘‘டெல்லியில் ‘அணிகள் இணைப்பு’ குறித்து பன்னீர் சொன்ன தகவலை எடப்பாடி பழனிசாமி அணியினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். அதனால்தான், உடனே அமைச்சர் ஜெயக்குமாரைப் பேட்டி கொடுக்க சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை சாந்தோம் வீட்டுக்கு உடனே பத்திரிகையாளர்களை அழைத்தார் ஜெயக்குமார். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டி.டிவி.தினகரனுக்கும் சேர்த்தே அந்தப் பேட்டியில் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயக்குமார். ‘டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் கூறியது அணிகளை இணைக்க உதவும் வகையில் உள்ளது. அவருக்கு நன்றி. எங்களுக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் மதுரையில் கூட்டம் நடத்தும் டி.டி.வி.தினகரன் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றுசேர காலம் கனிந்து இருக்கிறது. அதை அவர் மறந்துவிடக் கூடாது’ என்றார்.”
‘‘எதனால் இறங்கி வந்தாராம் பன்னீர்?”

‘‘இணைப்புக்கு வலியுறுத்திவரும் டெல்லி தலைகள் அச்சுறுத்தல் அஸ்திரத்தை எடுத்துவிட்டுள்ளன. ‘இனியும் காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் இருவரும் பிரிந்து நிற்க நிற்க, தினகரன் செல்வாக்கு கூடிக் கொண்டே போகும்’ என்றார்களாம். அதனால்தான் பன்னீர் இறங்கி வந்ததாகச் சொல்கிறார்கள். அதோடு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பும் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘அதையே அறிவிப்பாக வெளியிட்டால் போதும்’ என்று இரண்டு அணியிலும் நினைக்கிறார்கள். ‘சசிகலா தேர்வு செல்லாது’ என்ற ஒற்றை அறிவிப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தினகரன் நியமனம் செல்லாது என்ற தீர்மானத்தையும் கூடுதலாகத் தாக்கல் செய்து, ‘தன்னுடைய அணிதான் உண்மையான அ.தி.மு.க’ என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனி ஆளாக மனு செய்துள்ள முன்னாள்         எம்.பி கோவை கே.சி.பழனிசாமியும் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று வாதாடி வருகிறார். எனவே, இந்த மனுக்களை எல்லாம் விரைவாக விசாரித்து தேர்தல் ஆணையம் முடிவு சொல்லும் என்ற நம்பிக்கையோடு எடப்பாடியும் ஓ.பன்னீர் செல்வமும் இருக்கிறார்கள். அப்படி ஓர் உத்தரவு வந்தால் சசிகலாவை நீக்க வேண்டிய அவசியம், இவர்கள் இருவருக்கும் இருக்காது.’’
‘‘சசிகலா குடும்பம் என்ன திட்டம் வைத்துள்ளது?’’
‘‘அ.தி.மு.க-வில் தங்களது சகாப்தம் முடிவடைந்துவிட்டது என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவே அவர்கள் உணர்கிறார்களாம். ஆனாலும், குடும்ப உறவுகள், ‘ஒரு மாதத்தில் கட்சியை நாங்கள் எப்படியும் கைப்பற்றிவிடுவோம்’ என்று சொல்லிவருகிறார்கள். ‘எவ்வளவுப் பணம் செலவானாலும் பரவாயில்லை. கட்சியைக் கைப்பற்ற வேண்டும். வெறுங்கையோடு திரும்பக் கூடாது’ என்று சசிகலா உறவுகள் ஆக்ரோஷப் பட்டுள்ளார்கள். ‘எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தங்களைவிட்டு நீண்ட தூரம் போய்விட்டார்கள்’ என்று டி.டி.வி.தினகரன் நினைக்கிறார். ‘ஆட்சிதான் முக்கியம்; கட்சியைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இருக்கிற வரை வாரிச் சுருட்டிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள். எனவே, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியில் இருப்போர் பக்கம்தான் இருப்பார்கள். எனவே, இனியும் தாமதம் செய்யாமல் கட்சியைக் காப்பாற்றும் வேலைகளில் இறங்கிட வேண்டும்’ என்று தினகரனும் சொல்லி வருகிறார்.”
‘‘மேலூர் கூட்டத்தில் இருந்து தொடங்கியும் விட்டாரே?”
‘‘பிரிந்து செயல்பட்ட சசிகலா உறவுகள் ஒன்று சேர்கிறது. அனைவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், இளவரசியின் மகன் விவேக் எனச் சொந்தங்கள் எல்லாம் மதுரையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புக் செய்யப்பட்டனவாம். அனைத்துமே திவாகரன் ஏற்பாடுதானாம்.”
‘‘மதுரையில் கடுமையாகப் பேட்டி கொடுத்துள்ளாரே திவாகரன்?’’
‘‘ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடுதான் அது. ‘கட்சி நலன்தான் அனைவருக்கும் முக்கியம். கட்சி இருந்தால்தான் நமக்கு மரியாதை… இல்லையென்றால் நாம் பூஜ்யம்தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு அது புரியவில்லை. ‘சசிகலா குடும்பத்தினர்’ என்று விமர்சித்து வரும்  கே.பி.முனுசாமி மீது வழக்குத் தொடரப்படும். தற்போது தினகரன் செயல்பாடுகள் முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போது அவர் அறிவித்துள்ள பொதுக்கூட்டங்கள் முடிந்த பின்தான், தொண்டர்கள் யார் பக்கம் என்பது தெரியவரும். அமைச்சர்களை நம்பி அ.தி.மு.க இல்லை. அமைச்சர் பதவி என்பது காற்றுள்ள பலூன் போன்றது’ என்றார். திவாகரனும் தினகரனுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்திருப்பதுதான் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.”
‘‘ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இணைந்தால் தினகரன் என்ன முடிவு எடுப்பார்?’’
‘‘இருவரும் இணைந்துவிடுவார்கள். இவர்கள் இணைய மறுத்தாலும் டெல்லி தலைமை இவர்களை இணைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார் தினகரன். அப்படி இணைந்தாலும், அவர்களால் நீண்ட நாள்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியாது என்று நினைக்கிறாராம் தினகரன். ‘யார் தலைவர்’ என்ற போட்டி இருவருக்கும் வந்துவிடும் என்று நம்புகிறார். அ.தி.மு.க என்ற இயக்கத்தை இவர்கள் இருவரால் வலிமையாக வழிநடத்த முடியாது என்று உறுதியாக நம்புகிறார். இவர்கள் இணைந்தாலும், ‘சசிகலா தலைமையில் இயங்கும் கட்சிதான் உண்மையான அ.தி.மு.க’ என்று  வலியுறுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் இறங்குவாராம். ‘இரட்டை இலை எங்களுக்குத்தான் சொந்தம்’ என்று தினகரன் கிளம்புவார் என்கிறார்கள். ‘இரட்டை இலை திருப்பித் தரப்பட்டாலும் தினகரனால் மீண்டும் முடக்கப்படும்’ என்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஏராளமான களேபரங்கள் நிகழக்கூடும். எல்லாவற்றையும் பார்க்கத் தயாராகுங்கள்’’ என்று நிறுத்திய கழுகாரிடம், மற்ற விஷயங்களைக் கேட்டோம்.
‘‘அமித் ஷாவின் வருகையால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும் என்று தமிழிசை சொல்கிறாரே?’’
‘‘பி.ஜே.பி பெரிய திட்டத்தோடுதான் இருக்கிறது. ‘அமித் ஷாவின் வருகை, அ.தி.மு.க-வுக்குப் பெரிய ஷாக்காக இருக்கப் போகிறது’ என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஒதுங்கிக்கிடக்கும் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைக்கும் முயற்சியில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். பெரிய பட்டியலே தயாராகி உள்ளதாம். தென் மாவட்டங்களில் இருந்துதான் அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் அதிகமாக பி.ஜே.பி பக்கம் படையெடுக்க உள்ளார்கள். அ.தி.முக-வை ஒரு பக்கம் கட்டுப்படுத்திக்கொண்டே, அந்தக் கட்சியில் இருந்தே ஆட்களை இழுக்கும் பி.ஜே.பி-யின் தந்திரம் பலேதான்.”
‘‘கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற முரசொலி பவள விழா நிகழ்ச்சி மழை காரணமாக நிறுத்தப்பட்டதே?”
‘‘ஆகஸ்ட் 10-ம் தேதி பத்திரிகையாளர்களை அழைத்து முரசொலி பவள விழாவை ஸ்டாலின் நடத்தினார். கமல், ரஜினி, வைரமுத்து ஆகியோரும் வந்து விழாவைக் கோலாகலமாக்கினர். இரண்டாம் நாள் கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அன்று மாலை பெய்த திடீர் மழை காரணமாகக் கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது. முரசொலி பவள விழா செப்டம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். 12-ம் தேதி ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டார். 8 நாள்கள் அங்கு இருப்பாராம். அவர் திரும்பிய பிறகு இன்னும் பல திருப்பங்கள் இருக்கும் என்கிறார்கள்.’’

‘‘என்ன திருப்பம்?’’
‘‘சட்டமன்றத்துக்கு எப்போதும் தேர்தல் வரலாம் என்று தி.மு.க-வினர் மீண்டும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘தினகரன் தரப்பின் வேகம் கண்டிப்பாக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்’ என்று உறுதியாக நம்புகிறாராம் ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட ‘தேவைப்பட்டால் நாம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரலாம்’ என்று ஸ்டாலின் வாய் திறந்திருப்பதே தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாகத்தான் வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான பரஸ்பர உறவு அதிகரித்துள்ளது. பவள விழாவுக்கு வாழ்த்து சொன்ன வைகோ, வைர விழா நாயகனைக் காண கோபாலபுரமே வர இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வருகிறாராம் வைகோ. ‘அண்ணன் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்தே, அவரைப் பார்க்க வேண்டும் என்ற நினைத்து வருகிறேன். அதற்கான காலச் சூழ்நிலை இப்போது கனிந்திருப்பதாக உணர்கிறேன்’ என்று உருக்கமாகச் சொல்லியுள்ளார் வைகோ. இந்தத் தகவல் ஸ்டாலினுக்குச் சென்றதும், ‘தாராளமாக வந்து பார்க்கட்டுமே, தலைவருக்குப் பிரியமானவராக இருந்தவர் வைகோ’ என்று ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். அடுத்த வாரத்தில் இந்தக் காட்சிகளும் அரங்கேறலாம்!”
‘‘ஓஹோ!”
‘‘அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி உறுதியாகிவிடும் என்பதால், தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளைச் சேர்க்கும் காரியங்களை ஸ்டாலின் தொடங்கி விட்டார். ஏற்கெனவே கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் நெருங்கி வந்துவிட்டார்கள். பா.ம.க-வை எதிர்கொள்வதற்காக வேல்முருகன் அழைக்கப்பட்டுவிட்டார். பன்னீர் அணியுடன் நெருக்கமாக இருக்கும் ஜி.கே.வாசனுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யுடன் பன்னீர் காட்டும் நெருக்கம், அங்கு ஜி.கே.வாசனை இருக்க விடாது. அவரும் தி.மு.க பக்கமாக வரலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படியாக அணிச் சேர்க்கைகளும் இந்த மாதத்தில் அதிகம் இருக்கலாம்” என்று சொன்ன கழுகார் பறக்கத் தயாரானார்.

%d bloggers like this: