ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது!

சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், நம் சுற்றுப்புறத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்ளும் அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, ‘வெளியில் விளையாடக் கூடாது’, ‘மண்ணில் கால்படக் கூடாது’ எனக் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்களே, அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ் (Hygiene

Hypothesis)’ என்ற பிரச்னை உண்டாகக் காரணமாகிறார்கள்’’ என்கிறார் பவானியைச் சேர்ந்த குழந்தைகள் நல அரசு மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன்.

 

சுய நோய்எதிர்ப்புத் திறன்!

பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளைக் கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும். ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையைத் தொடாதே; மழையில் நனையாதே; தரையில் விழுந்த உணவைச் சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்துகொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம். மூன்று வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளைத் தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ எனக் கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.

அதீதச் சுகாதார உணர்வின் ஓர் அங்கமாகச் சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் (Probiotics) எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்து உயிரிழக்க ஆரம்பிக்கும். மேலும், ப்ரோபயாடிக்ஸ் பாக்டீரியாக்கள் சீராகவும் ஆரோக்கியமாகவும் இயங்க உதவும் ப்ரீபயாடிக்ஸ்(Prebiotics) எனப்படும் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், மினரல்களையும் இழக்க ஆரம்பிப்பார்கள். தேவைக்கும் அதிகமான சுகாதாரப் பேணலால் குழந்தைகளின் உடலுக்கு நன்மை செய்யும் விஷயங்கள் அழிந்துபோகப் பெற்றோர்களே காரணமாகிறார்கள். இதன் விளைவாக, கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலில் உயிர்வாழ வழிவகை ஏற்படுத்தப்படும். அவர்களின் சுய நோய்எதிர்ப்புத் திறன் குறையும். இதுதான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’. இதன் விளைவாக எளிதில் வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அடிப்படைச் சுகாதாரம் அவசியம்

குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய்எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது. இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவது, இருவேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு  சேராமல் பார்த்துக்கொள்வது, 20 – 30 நாள்களுக்கு ஒருமுறை முடிவெட்டிவிடுவது, வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாள்களாவது தலைக்குக் குளிக்க வைப்பது, வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படைச் சுகாதாரப் பழக்கங்களைக் (Basic Hygiene) குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

தவிர, தரையில் விழுந்த பொருள்களை வாயில் வைப்பது, குப்பைகளில் கைவைப்பது, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களை வாயில் வைத்துக் கடிப்பது, அடிக்கடி தலையைச் சொறிந்துகொண்டே இருப்பது, விளையாட்டுப் பொருள்களைக் குப்பை இருக்கும் இடத்தில் போட்டு எடுத்து விளையாடுவது போன்ற, ஏற்றுக்கொள்ளக்கூடாத சுகாதாரமற்ற செயல்களைக் (Not acceptable hygiene) குழந்தைகள் செய்யாதிருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதிக வெயில் உடல் மீது படும்படியும், அடிக்கடி மண்ணில் கை வைத்தவாறு புழுதியில் விளையாடுவதையும் தவிர்க்கச் சொல்லிக் கொடுக்கலாம். மேலும், விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே எந்தப் பொருளையும்  எந்த நபரையும் தொடாமல் குளிக்கச் செல்லக் கண்டிப்போடு பழக்கப்படுத்தலாம்.

இதேபோல அடிக்கடி தும்மல், அலெர்ஜி பாதிப்பு இருக்கும் குழந்தைகள் புழுதியில் விளையாடுவதை, கைவைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அலெர்ஜியால் உண்டாகும் ஆஸ்துமாவால் இன்று பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்; அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தப் பாதிப்புள்ள குழந்தைகள் விளையாடச் செல்லும்போது கையுறை, மாஸ்க் அணிந்துகொள்வதைக் கட்டாயப்படுத்தலாம்.

சுதந்திரம், கண்டிப்பு… இரண்டும் வேண்டும்!

5 – 12 வயதுகளில் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதுதான் அவர்களின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். அப்போதுதான் ஆரோக்கியமான போட்டிச் சூழலையும் கற்றுக்கொள்ள முடியும். மேலும், 20 வயதுக்கு மேல் பெரும்பாலானோர் விளையாடுவது குறைந்துவிடுகிறது. எனவே, குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதிப்பதே சிறந்தது. சுகாதாரத்தைச் சுட்டிக்காட்டி அவர்களை விளையாடவிட மறுப்பது என்பது அறியாமை கலந்த தவறு. இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு உட்கார்ந்த இடத்திலேயே வீடியோ கேம், செல்போன் கேம், கம்யூட்டர் கேம் விளையாடுவதில் கவனம் திரும்பிவிடும். இது கூச்ச சுபாவம், தனிமை, தாழ்வு மனப்பான்மை, குழுவாகச் செயல்பட இயலாமை உள்ளிட்ட உளவியல் பிரச்னை களையும் ஏற்படுத்தலாம்.

எனவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் வளரவும் அவர்களின் சமூகத் தொடர்புத் திறன் அதிகரிக்கவும் அவர்களை வீட்டுக்கு வெளியே விளையாடவிட்டுப் பழக்குங்கள்!”


 

சில தருணங்களில் கூடுதல் கவனம்!

வெளியிடங்களில் சாப்பிடுவதை முடிந்த வரையில் தவிர்க்கவே மருத்துவம் சொல்கிறது. அதேசமயம் தவிர்க முடியாத சில சூழல்களில் வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்க இயலாது. அப்படிச் சாப்பிடும் பட்சத்தில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம். சிலருக்கு புது ஊர்களில் அங்கு கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால், தீடீரென ஜலதோஷப் பிரச்னைகள் வரலாம். இப்பிரச்னையைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டுத் தேவையான உணவுகளையும் தண்ணீரையும் வீட்டிலிருந்து கொண்டு செல்லலாம்.

%d bloggers like this: