பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் பழனிசாமி!

பழனிசாமி அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வைத்த இரண்டு கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி இன்று நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கையால் பன்னீர்செல்வம் அணியினர் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்று ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இதனிடையே, துணைப் பொதுச் செயலாளர் தினகரனை சசிகலா நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இதுவரை முதல்வர் பழனிசாமி தரப்பில் எந்தப் பதிலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர், அவசரமாகச் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார். அப்போது, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசு நினைவிடமாக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

பன்னீர்செல்வம் அணியினர் வைத்த முக்கிய இரண்டு கோரிக்கையை பழனிசாமி அணியினர் நிறைவேற்றியிருந்தாலும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணியினர் தாக்கல்செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் பொதுச் செயலாளர் சசிகலா என்று அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அணியில் இணைய வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை பழனிசாமி அணியினர் திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்போதுதான், இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் என்றும் தெரிகிறது.

%d bloggers like this: