பெங்களூருக்குப் பறந்த ரகசிய ஃபைல்! – தினகரனைக் கண்காணித்த உளவுத்துறை

சசிகலாவின் பிறந்தநாளையொட்டி நாளை அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வலம் வருகிறது. நாளை சசிகலாவை சந்திக்க இருக்கிறார் தினகரன். இதற்கான முக்கிய ஃபைல் ஒன்றுடன் பெங்களூரு விரைகிறார் தினகரன் என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நாளை 60-வது பிறந்தநாள். இந்த ஆண்டு சிறையில் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நாளை நடக்கும் சிறை சந்திப்புக்குப் பிறகு, அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் தினகரன் என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “சசிகலாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்த முடிவு செய்திருக்கிறோம். சசிகலாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் சிலர் செல்வதாக இருந்தது. இறுதியில் தினகரன் மட்டுமே செல்வது என முடிவு செய்யப்பட்டது. கட்சி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, நாளை பெங்களூரு சிறையில் ஆலோசனை நடத்த இருக்கிறார் தினகரன்.

தினகரன்

மேலூரை அடுத்து சேலம், தேனியில் நடத்தப்பட இருக்கும் கூட்டம் குறித்தும் பேச இருக்கிறார். இன்று அவர் கிளம்பும்போது, கையில் முக்கிய ஃபைல் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் ஃபைலில், கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவரங்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். மாவட்டச் செயலாளர்களில் 11 பேரை மாற்றுவது தொடர்பாகவும், சிலரது பொறுப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாகவும் நாளை நடக்க இருக்கும் சந்திப்பில் விவாதிக்க இருக்கிறார். சில அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சசிகலா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அந்தப் ஃபைல் கிடப்பில் போடப்படும். கட்சி அதிகாரத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலைகளில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளனர் ” என்கின்றனர் விரிவாக. 

சசிகலா பிறந்தநாளையொட்டி சிறையிலிருக்கும் கைதிகளுக்குப் பிரியாணி வழங்கலாம் என்று தினகரன் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதற்கான சிறை நடைமுறை மற்றும் தற்போதுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்த பிறகு பிரியாணி வழங்குவோம் எனவும் நினைக்கின்றனர். கைதிகளுக்குப் பிரியாணி வழங்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றால், சிறை வாயிலில் கேக் வெட்டிக் கொண்டாடுவோம். தினகரனின் ஒவ்வொரு அசைவையும் எடப்பாடி பழனிசாமியின் உளவுத்துறை கண்கொத்திப் பாம்பாக கவனிக்கிறது” என்கிறார் சசிகலா குடும்பத்து உறவினர் ஒருவர்.

%d bloggers like this: