உங்கள் விடுதலை உங்கள் கையில்!

ந்நேரமும் உங்களைக் கண்காணித்து, தொடர்ந்து கட்டளைகள் இட்டு, விடாமல் டார்ச்சர் செய்யும் உங்களின் பிக்பாஸ் யார்? சிந்தித்துப் பார்த்தால் “அப்படியெல்லாம் யாரும் இல்லையே” எனத் தோன்றலாம். ஆனால் உங்கள் கைகளுக்குள் இருந்துகொண்டே, உங்களைக் கைக்குள் வைத்திருக்கும் பிக்பாஸ்கள் அனைவருக்கும் உண்டு. காலையில் அலாரம் அடித்து எழுப்பிவிடுவது முதல், அடுத்த நாளுக்கான திட்டமிடல்கள் வரை

அனைத்தையுமே அவர் மூலம்தான் செய்கிறீர்கள். என்ன பாஸ் இன்னும் புரியலையா? உங்களின் கேட்ஜெட்கள்தான் அந்த பிக்பாஸ். கேட்பதற்கு மிகையாகத் தெரியலாம். ஆனால் தொடர்ந்து படியுங்கள்; நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

டலில் சேர்ந்த நச்சுகளை நீக்க இன்று டீடாக்சிஃபிகேஷன் என்கிற நச்சுநீக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது.

‘டீடாக்ஸ்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு ‘நச்சுநீக்கம்’ என அர்த்தம் சொல்கிறது அகராதி.

டிஜிட்டல் டீடாக்ஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  டிஜிட்டல் உலகின் மூலம் உங்களுக்குள் சேர்ந்த நச்சுகளை நீக்கி, நிஜ உலகினைக் காட்டுவதுதான் இந்த ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’.

ஒருநாளில் நீங்கள் செய்யும் செயல்களில் எதற்கு அதிக நேரம் செலவாகிறது? சில ஆண்டுகளுக்கு முன்புவரை நிச்சயம் தூக்கம் என்பதுதான் பதிலாக இருந்திருக்கும். ஆனால் தற்போது மேலே சொன்ன கேள்விக்கான பதிலே வேறு.  நாம் தூக்கத்தைவிடவும் அதிகமான நேரம் செலவிடுவது கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதற்குத்தான். தெரியாமலோ கட்டாயத்தின் காரணமாகவோ இன்று பலரும் கேட்ஜெட் அடிமைகளாக இருக்கிறோம்.

‘நான் அடிமை எல்லாம் இல்லை’ என நீங்கள் சொல்லலாம்; ஆனால், செல்போன், கணினி, டேப்லட், இணையம் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் உங்களால் ஒருநாளாவது இருக்க முடியுமா? எலெக்ட்ரானிக் கருவிகளுக்கு அடிமையானவர்களின் சிந்தனையிலும் செயல்களிலும் நிறைய மாறுதல்கள் தென்படும். பணியில் கவனச்சிதறல், மன உளைச்சல், கண் எரிச்சல், தலைவலி போன்ற உடல்ரீதியான மற்றும் மனரீதியான சிக்கல்கள், நிஜ உலகில் சகஜமாக இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே அதிகநேரம் செலவிடுவது, எப்போதும் பதற்றமான மனநிலை போன்றவை எல்லாம் சில உதாரணங்கள். இதுபோன்ற எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் மோகத்திலிருந்து விடுபட உதவுவதுதான் டிஜிட்டல் டீடாக்ஸ்.

டிஜிட்டல் டீடாக்ஸ் என்ன செய்யும்?

எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு இந்த டிஜிட்டல் டீடாக்ஸ் உதவும்.  உங்களுடைய தினசரிப் பணிகள், சொந்த வாழ்க்கை போன்றவற்றில் பெரிய அளவில் மாறுதலையும் ஏற்படுத்தும். கேட்ஜெட்களில் செலவழிக்கும் அதிக நேரத்தை உங்களுடைய பணிகள், குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியாகச் செலவழிக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

எத்தனை கால அளவிற்கு நீங்கள் கேட்ஜெட் உலகிலிருந்து ஒதுங்கியிருக்கீறீர்கள் என்பதுதான் விஷயம்.  குறைந்தது 24 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை நீங்கள் இதனைச் செய்யலாம். அதற்கு மேல் செல்வது என்பது உங்கள் விருப்பம். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்களுடைய மொபைல் போன், கணினி, டேப்லட், டிவி என எல்லா கேட்ஜெட்களையும் சுவிட்ச் ஆஃப் செய்வது மட்டும்தான். இதைப் படிக்கும் போது எளிதான விஷயம்போலத் தோன்றலாம். ஆனால் நிஜத்தில் கொஞ்சம் கடினமான விஷயம் இது. காரணம் உங்கள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்ததுமே, ‘நமக்கு யாராவது போன் செய்வார்களா? அலுவலகத்திலிருந்து முக்கியமான அழைப்பு வந்தால் என்ன செய்வது?’ என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றும். உங்கள் பாக்கெட்டில் மொபைலே இல்லை என்றாலும்கூட, மொபைல் ரிங் ஆவது போல, வைப்ரேட் ஆவதுபோலத் தோன்றும். இதற்கு ‘ஃபேன்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்’ எனப் பெயரே இருக்கிறது. திடீரென போரடித்தால் ஃபேஸ்புக் செல்ல வேண்டும்; டிவி பார்க்க வேண்டும் என்றெல்லாம் செல்லும் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி மனதை அலைபாயவிடாமல் தடுப்பதில்தான் உங்களுக்கான சவாலே இருக்கிறது.

அனைத்தையும் அனுபவியுங்கள்

கேட்ஜெட்கள் தவிர மற்ற எல்லா ஆப்ஷன்களுமே உங்களுக்கு உண்டு. எனவே இந்தக் காலங்களில் உங்கள் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் என நிஜ வாழக்கையில் பிணைப்புகளை அதிகப்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்; பயணியுங்கள்; படியுங்கள்; விளையாடுங்கள்; நன்றாகத் தூங்குங்கள்; நிச்சயம் உங்களுக்குள் ஒரு புதுமாற்றம் வரும். கேட்ஜெட்களிடமிருந்து நீங்கள் பெற்ற சுதந்திரத்தின் அருமை உங்களுக்குப் புரியும்.

டிஜிட்டல் டீடாக்ஸிற்குப் பிறகு என்ன நடக்கும்?

சில நாள்கள் நீங்கள் கேட்ஜெட் பக்கம் போகாமல் இருந்துவிட்டு மீண்டும் அதற்குத் திரும்பியதும், ஏகப்பட்ட மெயில்கள், அழைப்புகள், நோட்டிஃபிகேஷன்கள் வந்திருக்கலாம். அவற்றில் முக்கியமான விஷயங்களை மட்டுமே கையாளுங்கள். அதுமட்டுமின்றி டிஜிட்டல் பழக்கவழக்கங் களிலும் சில மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக பெட்ரூமில் கணினி பயன்படுத்தக்கூடாது, டைனிங் டேபிளில் மொபைல் பயன்படுத்தக்கூடாது போன்ற நிபந்தனைகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகநேரம் செலவழிக்கும் சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்வது, தேவையற்ற மின்னஞ்சல்களை நிறுத்துவது போன்ற ஆரோக்கியமான விஷயங்களைச் செய்யுங்கள். டிஜிட்டல் டீடாக்ஸ் என்பது உங்களுடைய சுதந்திரம்; எனவே நீங்கள் விரும்பும்போதெல்லாம் இதைக் கடைபிடிக்கலாம். உங்கள் விடுதலை உங்கள் கையில்!

5 ‘சி’-க்களில் கவனம்!

பொதுவாக Craving, Control, Coping, Compulsion, Conseqeunces என்னும் 5 ‘C’க்களை வைத்து ஒருவர் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களுக்கு அடிமையாக இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் தீராத ஆசை, நம்மை நாமே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கேட்ஜெட்களைப் பயன்படுத்துதல், அவற்றால் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளைச்  சந்தித்தல், கட்டாயமாக கேட்ஜெட்கள் பயன்படுத்தவேண்டிய நிலைமை, கேட்ஜெட்களை வைத்தே சமாளித்தல் போன்ற ஐந்து விஷயங்களில் நான்கு உங்களுக்குப் பொருந்தினால் நீங்கள் கேட்ஜெட்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம். 12 முதல் 19 வயதுக்குட்பட்ட வயதினர்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 14 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்குத்தான் இதிலிருந்து மீள உதவிகள் தேவைப்படுகின்றன. ஆன்லைன் அடிக் ஷன் வகைகளைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள், கேமிங், தகவல்களைத் தேடுதல், போர்னோகிராபி எனப் பிரிக்கலாம். இந்த விஷயங்களுக்குத்தான்  அதிகம் அடிமையாகின்றனர்.

சந்திக்கும் பிரச்னைகள்?

கல்வியில் கவனச்சிதறல், சமூக வலைத்தளங்களால் அடிக்கடி தொந்தரவுக்கு உள்ளாதல், நிம்மதியான உறக்கத்தில் சிக்கல்கள், உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் உருவாகும். இதிலிருந்து மீள்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதலில் நாம் இவற்றிற்கு அடிமையாகி இருக்கிறோம்  என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். பிரச்னையை உணர்ந்தபின் அதற்கான உதவிகளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். இதில் எவ்விதத் தயக்கமும் இருக்கக் கூடாது.  இதில்ிருந்து விடுபட டிஜிட்டல் டீடாக்ஸ் உதவும்.

டிஜிட்டல் டீடாக்ஸின் பங்கு?

கேட்ஜெட்களோடு இனிமையான உறவைப் பேணுவதற்கு டிஜிட்டல் டீடாக்ஸ் உதவும். தூங்குவதற்கு முன்பு கேட்ஜெட்களைப் பார்க்காமல் இருப்பது, 30 நிமிடங்களுக்குமேல் கேட்ஜெட்களைப் பார்க்கவேண்டியிருந்தால் சிறிது ஓய்வு கொடுத்துவிட்டுக் கண்களைச் சிமிட்டுவது, கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதற்காகத் தாமதமாகத் தூங்குவது, ஆன்லைன் தவிர்த்து, படிப்பது, விளையாடுவது போன்ற மற்ற ஆஃப்லைன் விஷயங்களில் அதிக நேரம் ஈடுபடுதல் போன்றவை எல்லாம் இந்தப் பிரச்னையில் நம்மைச் சிக்கவைக்காமல் காக்கும் நல்ல பழக்கங்கள்.


சில முன்தயாரிப்புகள்

* உங்களுடைய மனதை இதற்காகத் தயார்படுத்துவதன் மூலமாக டிஜிட்டல் டீடாக்ஸை எளிதாக்கலாம். முதலில் இந்தக் காலக்கட்டத்தில் நிச்சயமாக உங்கள் கேட்ஜெட்களைத் தொடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். சுயக்கட்டுப்பாடும் உங்களின் ஆர்வமும்தான் முதல் தேவை. நீங்கள் தினமும் பயன்படுத்தும் கேட்ஜெட்களின் விவரங்களை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள். எதையெல்லாம் நீங்கள் ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்க இது உதவும்.

அலுவலக ரீதியாகக் கண்டிப்பாக இவற்றைப் பயன்படுத்தவேண்டிய சூழல் வரலாம் என யூகித்தால், நீங்கள் இன்னும் மூன்று நாள்களுக்கு ஆன்லைனில் இருக்கமாட்டீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.

கேட்ஜெட்களிடமிருந்து விலகியிருக்கும் இந்த நாள்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் மகிழ்ச்சியின் அளவைத் தீர்மானிக்கும். எனவே நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, புத்தகங்கள் படிப்பது என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக கேட்ஜெட்களைப் பார்க்காத இந்த நாள்களில் அவை குறித்த நினைவுகள் அதிகமாகவே வரலாம். எனவே உங்களுடைய சரியான திட்டமிடல் மூலம் அவற்றைத் தடுக்கலாம்.

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். குழுவாகச் சில விஷயங்களைச் செய்ய இது உதவும். மற்ற நண்பர்கள் இதுகுறித்து வித்தியாசமாகப் பார்த்தாலும்கூட, இதுபற்றி அவர்களிடம் தெளிவாக விளக்குங்கள். அவர்களும் இதுபற்றிப் புரிந்துகொள்வார்கள்.

%d bloggers like this: