கை கொடுக்கும் முருங்கை

கீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும், முருங்கை கீரை, பல ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது. குளிர்ச்சி தன்மையானது. முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.

முருங்கைக்கீரையை தினமும் உட்கொண்டுவந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்னை, சுவாசப்பாதை, ஜீரண மண்டல பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும். வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளில் இருந்து காக்கும்.
எலும்புகளுக்கு வலிமை: இருதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய்
வராமல் தடுக்கின்றன. கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை கூட்டுகிறது, தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.
முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்திப்பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும். முருங்கை பிசினை காய வைத்து தூள் செய்து, அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை வேளைகளில், காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து குடித்து வர உடல் நலம் பெறும். மாலைக் கண் தீர, ரத்தம் விருத்தியாக, முருங்கை கீரையை துவட்டியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் முக்கியமாக, மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம்.
வாயுவை அகற்றும்: முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை, சம அளவாக சேர்த்து, நீரில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, இரவில் குடிக்க, வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். முருங்கை பிஞ்சு, உடல் தாதுக்களின் எரிச்சலை போக்கும்; நாக்குச் சுவையின்மையைக் குணமாக்கும்.
முருங்கை காய் கோழையை அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும். முருங்கை பட்டை, கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்; வியர்வையை பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். முருங்கை இலையை உருவி, காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை, ரத்த விருத்திக்கு நல்ல உணவு. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பை தருகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கைக் காயை சாம்பார் வைத்து சாப்பிடும் போது, மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. எனவே, வாரம் ஒருமுறை முருங்கைக்கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்துச் சாப்பிட்டால் ஏராளமான மருத்துவ நன்மைகளைப் பெறலாம்.

%d bloggers like this: