டாட்டூ – அழகு முதல் அடிக்‌ஷன் வரை!

டாட்டூ… ஃபேஷன், தன்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள விரும்புதல் அழகுக்காக என்பனவையெல்லாம் தாண்டி ஓர் அடிக்‌ஷனாகவே மாறிவருகிறது! `நான் டாட்டூவுக்கு அடிமையாகிவிட்டேன்; இதை என்னால் நிறுத்தவே முடியாது; நான்

இதை மிக விரும்புகிறேன்’ என்கிறார்  அமெரிக்க நடிகை அட்ரியான் பாலிக்கி (Adrianne Palicki).  உலக அளவில் டாட்டூ கலாசாரம் கொடிகட்டிப் பறப்பது அமெரிக்காவில்தான். இது தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்மை மலைக்கவைப்பவையாக உள்ளன. மொத்த அமெரிக்கர்களில் ஒரே ஒரு டாட்டூவையாவது போட்டுக்கொண்டிருப்பவர்கள் நான்கு கோடியே 50 லட்சம் பேர் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பாவின் பல நாடுகளில் வேரூன்றியிருக்கும் டாட்டூ பழக்கம், மேற்கிலிருந்து வந்த காரணத்தாலேயே நம் மக்களுக்கும் பிடித்துப் போய்விட்டது. வேகமாக இங்கேயும் பரவிக்கொண்டிருக்கிறது..

நவீனத்தின் மீதான ஈர்ப்பு என்று இதை எடுத்துக்கொண்டாலும் நம் தாத்தா, பாட்டி காலத்திலேயே இங்கே இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது… ‘பச்சைகுத்துதல்’ என்ற பெயரில்! நாகரிகம் மாற மாற மறைந்துபோன பச்சை குத்தும் பழக்கம், இப்போது `டாட்டூ’ என்ற பெயரில் இளைய தலைமுறையினரை ஈர்க்க ஆரம்பித்திருக் கிறது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த டாட்டூ மோகம் இன்று கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என எல்லோரிடமும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. முதுகு, இடுப்பு, கைகால் என உடலின் எல்லா பாகங்களிலும் போட்டுக்கொள்கிறார்கள். டாட்டூ போட்டுக் கொள்வதற்குப் பின்னே இருக்கும் உளவியல் என்ன,  டாட்டூ போட்டுக்கொள்வதால் ஏற்படும் உடல், மனப் பாதிப்புகள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்.

 

டாட்டூவில் இருவகை

வண்ணங்களை ஊசிக்குள் ஏற்றி, அதைக்கொண்டு சருமத்தின் மேல் பகுதியில் வரையப்படுவது டாட்டூ. இப்படி வரையும்போது, ஊசி எந்த அளவுக்கு ஆழமாகச் சருமத்தினுள் செல்கிறது என்பதைப் பொறுத்து டாட்டூ நீடித்திருக்கும் காலம் அமையும். சருமத்தின் உள்பகுதி வரை ஊசி செலுத்தப்பட்டால், இறக்கும் வரைகூட சில டாட்டூக்கள் இருக்கும். தற்காலி கமானது, நிரந்தரமானது என டாட்டூக்களில் இரு வகைகள் உள்ளன.

தற்காலிக டாட்டூ: வலி ஏற்படுத்தாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும்.

நிரந்தர டாட்டூ: இதைப் போட்டுக்கொள்ளும் போதும் போட்டுக்கொண்ட பிறகு சில மணிநேரத்துக்கும் வலி இருக்கும்.

 

டாட்டூ போட்டுக்கொண்ட பின்னர் குறிப்பிட்ட காலத்துக்குச் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை…

* டாட்டூ இட்ட பகுதியைக் குறிப்பிட்ட காலத்துக்கு வெளிச்சம் படாமல் பாதுகாக்க வேண்டும்.

* டாட்டூ சென்டரில் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டி-பாக்டீரியல் க்ரீமை (AntiI-Bacterial cream) குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை உபயோகிக்க வேண்டும்.

* டாட்டூ போட்டுக்கொண்ட அடுத்த 15 நாள்கள் வரை, அதன் மீது எந்த ரசாயனமும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பகுதியில் சோப் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* டாட்டூ இடும் பகுதியின் சருமத்தில் இருக்கும் செல்கள் செயலிழந்து, அந்தப் பகுதி சுருங்கிக் காணப்படும். எனவே, டாட்டூவைச் சொறிவது, அந்தப் பகுதிக்கு அழுத்தம் தருவது, ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

கவனத்தில் கொள்ளவும்!

பத்தில் இருவருக்கு டாட்டூ போட்டுக்கொண்ட பின்னர் சருமத்தில் அரிப்பு, ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறது ஓர் ஆய்வு. எனவே, டாட்டூ போட்டுக்கொள்பவர்கள் கீழ்காணும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

* டாட்டூ சென்டரில் ஊசியை எப்படி உபயோகிக்கிறார்கள் என அறிந்துகொள்ளுங்கள். அது ஏற்கெனவே ஒருவருக்கு உபயோகப்படுத்தப் பட்ட ஊசியாக இருந்தால், அதன் மூலம் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ் (Tattoo Tuberculosis), எய்ட்ஸ், டெட்டனஸ் (Tettanus), ஹெப்படைட்டஸ் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

* ஊசியால் சருமத்தின் மேல் போடப்படுவதால், உள்ளிருக்கும் ரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். தொடர்ந்து ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் டாட்டூ போடுவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

* இதற்காகப் பயன்படுத்தப்படும் மையின் தரத்தை உறுதி செய்துகொள்வது நல்லது. தரமில்லாத மையைப் பயன்படுத்தினால் அது இன்ஃபெக்‌ ஷனை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான வண்ணங்களால் டாட்டூ போட்டால், அது சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தவிர்த்துவிடவும்.

* மையின் அடர்த்தி அதிகமாக இருந்தால், டாட்டூவைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் சேதம் அடையும். இது கிரானுலோமா (Granuloma) என்னும் பிரச்னையை ஏற்படுத்தித் திசுக்களைச் சேர்த்துக் கட்டியாக்கிவிடும். காலப்போக்கில் அந்தக் கட்டி, புற்றுநோயாகவும் மாறலாம். இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து சிறுநீரகங்களையும் பாதிக்கலாம். எனவே அடர் நிறங்களான சிவப்பு, மஞ்சள் நிற மைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

* ரேடியாலஜி சிகிச்சைகளின்போது வெளிப்படும் கதிரியக்கங்களால் டாட்டூ இட்ட பகுதி பாதிப்படையும். எனவே எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கச் செல்பவர்கள், அங்கிருக்கும் மருத்துவர் களிடம் டாட்டூ குறித்து முன்னரே சொல்லி விடுவது நல்லது.

டாட்டூவை நீக்க முடியுமா?

சிலருக்குச் சில நாள்களுக்குப் பிறகு, நெருங்கியவர்களுடனான உறவு முறிந்து போனதன் காரணமாகவோ, தினமும் திரும்பத் திரும்ப ஒரே டிசைனைப் பார்த்த காரணத்தால் ஏற்படும் அலுப்பு காரணமாகவோ, இன்னும் மாடர்னாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ டாட்டூ பிடிக்காமல் போகும். அவர்கள் டாட்டூ நீக்கும் சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகுவது உண்டு.

டாட்டூ போடப்பட்டபோது எந்த அளவுக்கு ஆழமாகப் போடப்பட்டது என்பதைப் பொறுத்து, லேசர் மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக டாட்டூ நீக்கப்படும். லேசர் மூலம் நீக்கும்போது, அதிகபட்சம் ஐந்திலிருந்து பத்து முறையாவது போய்ச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படியும் முழுவதுமாக டாட்டூ அழியவில்லை என்றால், சர்ஜரி செய்துதான் டாட்டூவை நீக்க வேண்டும். அறுவைசிகிச்சையில் டாட்டூவை நீக்கும்போது அதன் வடு இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி, க்ரையோ சர்ஜரி (Cryosurgery) போன்ற முறைகள் மூலம் இதைச் சரிசெய்யலாம். இருந்தாலும், டாட்டூவுக்கு முன்னர் இருந்த பழைய சருமம் மீண்டும் கிடைக்காது. எனவே, டாட்டூ போட்டுக் கொள்வதற்கு முன்னர் நன்கு யோசித்துவிட்டுச் செய்துகொள்வது நல்லது.

டாட்டூ போடும்போது தவிர்க்க வேண்டிய இடங்கள்!

பொதுவாக டாட்டூ போடுவது சருமத்தை மட்டுமல்ல உடலின் உள்ளுறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும். அதனால் உடலின் மென்மையான இடங்களில் டாட்டூ போடுவதைத் தவிர்க்கவும். உதாரணமாக, தொடை, கழுத்து, தோள்பட்டை, மார்புப்பகுதி, தசை இல்லாத எலும்புப் பகுதிகள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடக் கூடாது.


 

டாட்டூ போடுவதற்கு முன்னர் அலெர்ஜி டெஸ்ட் தேவையா?

டாட்டூ போடும் இங்க் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கலை அடிப்படையாகக் கொண்டு அலெர்ஜி டெஸ்ட்டுகள் செய்து கொள்ளலாம்.  பேட்ச் டெஸ்ட் (Patch Test) பரிசோதனையின்மூலம் டாட்டூ அலெர்ஜியை ஏற்படுத்துமா இல்லையா என்பது கண்டறியப்படும்.

எந்த அளவு டாட்டூ பாதுகாப்பானது?

டாட்டூவுக்குப் பயன்படுத்தப்படும் இங்கில் பல கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் ரசாயன அளவு மாறுபடும். மெர்க்குரி, நிக்கல் போன்றவை மிகவும் ஆபத்தானவை. சருமத்தின் இரண்டாவது படிமத்தில் (Second Layer) 0.06 mm அளவு வரை டாட்டூ குத்திக்கொள்ளலாம். அதையும் தாண்டி மூன்றாவது படிமத்தை அடையும்போது ரத்தம் வெளியே வரக்கூடும். டாட்டூ போடும்போது அதற்காகப் பயன்படுத்துகிற ஊசி புதிதாக உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதில் கவனம் வேண்டும்.

%d bloggers like this: