நியூபார்ன் ஸ்க்ரீனிங்! – மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்!

ந்தக் கிராமப்புற மருத்துவமனையில் 28 வயதுப் பெண்மணி ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் முடிந்து,  குழந்தை  நல்ல எடையுடன் இருப்பதாகவும் ஆரோக்கியத்துககுக் குறைவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது மருத்துவர் ஒருவர், நியூபார்ன் ஸ்க்ரீனிங் என்ற பரிசோதனை குறித்து விளக்கத் தொடங்குகிறார். “குழந்தைக்கு

எதிர்க்காலத்துல தைராய்டு வருமா இல்லையானு சொல்ற டெஸ்ட் தானே டாக்டர்? கண்டிப்பா பண்ணிருங்க!” என்று அந்தத் தாயார் சொல்ல, மருத்துவருக்கு ஆச்சர்யம்.  நியூபார்ன் ஸ்க்ரீனிங் குறித்த விழிப்பு உணர்வு இந்தியாவில் ஏற்கெனவே  இருக்கிறது. ஆனால் அது, குழந்தைகளுக்கான வெறும் தைராய்டு பரிசோதனையாகக் கருதப்படுவதுதான் சிக்கல்.

எதிர்காலம் அறிவோமா?
“வருமுன் காப்பதே சாலச் சிறந்தது!” என்னும் பழமொழியை நாம் பலமுறை கேட்டிருப்போம். ஆனால், கேட்பதோடு நிறுத்திவிடுகிறோம். அதைப் பின்பற்றினால், டேர்ம் ஃபீஸ் போல மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் சாதாரண நோய்களைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும். அலட்சியமாக இருப்பது நமக்கு வேண்டுமானால் பழகிப்போன ஒன்றாக இருக்கலாம்; ஆனால் குழந்தைகள் விஷயத்தில் இதில் முழுக் கவனம் தேவை.
குழந்தை பிறந்தவுடன் உடல் எடை தொடங்கி பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் அக்குழந்தையின் ஆரோக்கியம் அப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய மட்டுமே. எதிர்காலத்தில் அந்தக் குழந்தைக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்? அவற்றை இப்போதே பெற்றோரான நீங்கள் தெரிந்து கொண்டால் முன்னரே சுதாரித்து அதைத் தடுக்க முயற்சி செய்யலாம், அல்லது அந்தப் பாதிப்பின் வீரியத்தையாவது குறைக்க குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கலாம். அப்படித் தெரிந்துகொள்ள ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் மருத்துவ அறிவியலின் விந்தைதான் இந்த ‘நியூபார்ன் ஸ்க்ரீனிங்’!
ஒரு குழந்தை பிறந்த 72 மணி நேரத்தில் நடத்தப்படும் இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம் பிறவியிலேயே பாதிக்கும் மரபணுக் கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் (Inborn Errors/ Congenital Metabolic Disorders) பற்றிக் கண்டறிவதே. பொதுவாக இவ்வாறான பிரச்னைகள் இருப்பதற்கான அறிகுறிகள், வயது வந்த பின்னரே எட்டிப்பார்க்கும். ஆனால், இதைக் குழந்தை பிறந்தவுடனே கண்டறியும் பட்சத்தில் வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்க முடியும். முறையான சிகிச்சை அளித்து, அந்தக் குழந்தைக்கு ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்கிவிட முடியும். குழந்தை பிறந்தவுடன் சில மாதங்களிலேயே இறந்து விடுவது, பெரிய உடல் பாதிப்பை சிறுவயதிலியே பெற்று விடுவது போன்றவற்றை அறவே ஒழிக்க முடியும்!

என்னென்ன பரிசோதனைகள்?
நியூபார்ன் ஸ்க்ரீனிங்கை பொறுத்தவரை மூன்று முக்கியமான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். ஹீல் ப்ரிக் டெஸ்ட் (Heel Prick Test) எனப்படும் ரத்தப் பரிசோதனை, ஹியரிங் டெஸ்ட் எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் பொது உடல் பரிசோதனை. ஹீல் ப்ரிக் டெஸ்டின் மூலம் 50 வகை பாதிப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். குதிகாலில் இருந்து ரத்தம் எடுக்கப்படுவதால், குழந்தைகளுக்குச் சிறிது வலி ஏற்படலாம். எனவே, தாயார் ஆதரவாக அருகிலிருந்து அரவணைத்துக் கொள்ளலாம்.
புள்ளிவிவரங்கள் படி, 1000 குழந்தைகளில், ஒன்றிலிருந்து இரண்டு குழந்தைகள் வரை பிறக்கும் போதே காது கேளாமல் பிறக்கின்றன. ஹியரிங் டெஸ்ட் மூலம், அப்படிப்பட்ட பாதிப்பு ஏதும் இருக்கிறதா, செவியின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இதில் செய்யப்படும் இரண்டு பரிசோதனைகள் காது கேளாமை, காது நரம்புகளின் ஆரோக்கியம் மற்றும் மூளை ஒலிக்கு எவ்வாறு பதில் அளிக்கிறது (Auditory Brainstem Response) போன்றவற்றைக் கண்டறிகிறது. பொது உடல் பரிசோதனையில் குழந்தையின் கண்கள், இதயம், இடுப்பு, பிறப்பு உறுப்புகள் போன்றவற்றைச் சோதிப்பார்கள். கண்களில் வெளிச்சத்தைப் படரவிட்டு, கண்கள் அதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்கின்றன, இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா, உடல் எலும்புகள் சரியான முறையில் இருக்கிறதா என்பது போன்ற சோதனைகள் நிகழ்த்தப்படும்.
இந்தப் பரிசோதனைகள் நம்பகமானவையா?
இது சாதாரண ரத்தம் மற்றும் உடல் பரிசோதனையே. பரிசோதனையின் முடிவுகளில் ஆபத்துகள் இருப்பதாகத் தெரிந்தால், அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப, மேலும் பல பரிசோதனைகள் செய்யவேண்டிய கட்டாயம் வரும். நியூபார்ன் ஸ்க்ரீனிங்கின் முடிவுகள் பாசிட்டிவாக வந்துவிட்டால், பயப்படத் தேவையில்லை. முறையான முன்னெச்சரிக்கை சிகிச்சைகள் மட்டுமே அவசியம். சில குழந்தைகளுக்கு  நியூபார்ன் ஸ்க்ரீனிங்கின் முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்தாலும், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்தப் பரிசோதனை எதிர்காலம் குறித்து ஒரு மேற்கோள் காட்ட மட்டுமே பயன்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கு ஏன் அவசியம்?
இந்தப் பரிசோதனை மூலம் இந்தியாவில் அதிகமாகக் கண்டறியப்படும் பாதிப்புகளில் ஒன்று பிறப்பிலேயே இருக்கும் தைராய்டு பாதிப்பு (Congenital Hypothyroidism). புள்ளிவிவரங்களின் படி 1000 குழந்தைகளில் 2 குழந்தைகள் தைராய்டு பாதிப்புடன் பிறக்கின்றனர். இரண்டாவது இடத்தில் இருப்பது, ரத்தச் சிவப்பணுக்கள் தன்னிச்சையாக அழிந்து போகும் G6PD குறைபாடு. இது இந்தியாவின் பழங்குடி மக்களிடம் பரவலாகக் காணப்படும் பாதிப்பு என்று தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இங்கே 2,497 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மரபணுக் கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3,60,800 குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பாதிப்புடன் பிறக்கிறார்கள். அதுவும், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் பாதிப்பு இல்லாததுபோலத் தெரிந்தாலும், பின்னாளில் பெரும் ஆபத்தை இது விளைவிக்கக் கூடும். சருமப் பிரச்னை, வயிற்றுப்போக்கு என ஆரம்பிக்கும் விஷயங்கள் பிறகு உயிர்க் கொல்லியாக மாறிவிடுகிறது. பாதிப்புகள் இருப்பதாகக் கண்டறியப்படும் குழந்தைகளில் பலர், சரிசெய்து விடக்கூடிய தன்மையில் உள்ள பாதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்றனர். இந்தப் பாதிப்புகளுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைகளின் மன அழுத்தம், தைராய்டு பிரச்னைகள், மற்றும் திடீர் மரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.


ந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் குழந்தைகளுக்கான நியூபார்ன் ஸ்க்ரீனிங் மாதிரியான ஆரம்பக்கால பரிசோதனைகளுக்கு ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK) போன்ற திட்டங்களின் மூலம் ஆதரவு அளித்து வருகிறது. இதன் மூலம் குழந்தை இறப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.


ல நாடுகளில் கட்டாயப் பரிசோதனையாகச் செய்யப்படும் இந்த நியூபார்ன் ஸ்க்ரீனிங் இந்தியாவில் குறைந்த செலவில் செய்யப்படுகிறது. அடிப்படைப் பரிசோதனைக்கு 750 அல்லது 800 ரூபாய் எனவும் முழுமையான பரிசோதனைக்கு (50 முதல் 100 நோய்கள் வரை கண்டறியலாம்) 10,000 ரூபாய் வரையும் தோராயமாகச் செலவாகிறது.

%d bloggers like this: