பித்தப்பைக் கற்கள்

வநாகரிக வாழ்க்கைமுறையில்  பலரும் தங்கள் உடல்நலனில் அக்கறையின்றி, ஃபாஸ்ட் புட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவை வயிற்றுக்குச் சேராமல்,  பலவித வயிற்றுக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன. வந்திருப்பது என்ன பிரச்னை என்றே யோசிக்காமல்,

மெடிக்கல் ஷாப்புக்குப் போய், ஏதோ மாத்திரைகளை  விழுங்கியோ, சோடா குளிர்பானங்களைக் குடித்தோ அப்போதைக்குப் பிரச்னையை முடித்துக்கொள்கின்றனர். வயிற்றில் ஏற்படும் வலியைப் பொருட்படுத்துவதே இல்லை. `வயிற்றில் ஏற்படும் வலி பித்தப்பை, சிறுநீரகக் கல் போன்ற பல நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பித்தப்பையில் கல் உருவாகி, அவ்வப்போது சிறுசிறு அறிகுறிகள் இருந்திருக்கும். ஆனால், தொடக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உருவான கற்கள், பித்தப்பைக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும். இதனால், ஆரம்பகட்டத்தில் வேறு காரணத்துக்காகப் பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். இதற்குப் பித்தப்பை குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே காரணம். எனவே, பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன, அவை எப்படி உண்டாகின்றன, அவற்றால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பித்தப்பையின் பணி என்ன?

பித்தப்பை (Gall bladder)  கல்லீரலுக்குக் கீழே இருக்கிற சிறிய பை போன்ற ஓர் உறுப்பு. இங்குதான் கல்லீரல் உற்பத்தி செய்கிற பித்தநீர் சேமிக்கப்படுகிறது.

நாம் உணவு உண்டதும், பித்தப்பையானது தன்னைத்தானே சுருக்கி பம்ப் செய்து, பித்தநீரைப் பித்தக் குழாய்கள் வழியாகச் சிறுகுடலுக்குள் செலுத்துகிறது. இந்தப் பித்த நீர், உணவில் இருக்கும் கொழுப்புகள் செரிமானமாக உதவுகிறது.

பித்தப்பைக் கற்கள் யாருக்கு வரும்?

எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால், வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பித்தப்பைக் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

எப்படி உருவாகின்றன?

பித்த நீரில் அதிகப்படியான கொழுப்பு இருந்தால், அவற்றைக் கரைக்க முடியாமல், பித்தப்பை சுருங்கி விரிவது நின்று போகும். இதனால், தேங்கி நிற்கும் பித்த நீர், பித்த உப்புகள் (Bile Salts) சேர்ந்து படிமங்களாக (Crystals) மாறிவிடும். இவை கற்களாக மாறுகின்றன.

எத்தனை வகையான கற்கள் உள்ளன?

பொதுவாக பித்தப்பையில், இரண்டு வகையான கற்கள் உருவாகின்றன. ஒன்று, `கொலஸ்ட்ரால் கற்கள்’ (Cholesterol gallstones).  இந்த வகைக் கற்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மற்றொன்று  அடர் நிறக் கற்கள் (Pigment Gallstones). இவை கருநிறம் அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் (Calcium Bilirubinate) போன்றவற்றால் உருவானவை.

என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

பித்தப்பையிலிருக்கும் கற்கள் நகர்ந்து, பித்தநீர் குழாயில் சேர்ந்து, பித்தநீர் வருவதை அடைத்து விடும். இதனால், குடலுக்குச் செரிமானத்துக்கு உதவி செய்யும் பித்த நீர் போய்ச் சேர்வது தடைப்பட்டுவிடும்.  இதனால்  வலி, செரிமானப் பிரச்னைகள் தோன்றும். சில நேரங்களில்  பித்தநீர் நாளங்களில் கற்கள் இருந்தால், நோய்த்தொற்று உண்டாகும். வெகு அரிதாக, புற்றுநோய் (Gallbladder Cancer) ஏற்படலாம்.

பரிசோதனை

வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் அல்லது  சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பித்தக் கற்களின் எண்ணிக்கை, அளவு, பித்தப்பையில் வீக்கம் உள்ளதா, அடைப்பு ஏற்பட்டுள்ளதா, கல்லீரலைப் பாதித்துள்ளதா என்பனவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அப்படிக் கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே எக்ஸ்-ரே அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்படும். தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்படும்.

 

காரணம் என்ன?

பொதுவாக, உடல்பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பது, முறையான உடற்பயிற்சி இல்லாதது, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென்  ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது, கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவது போன்றவையும் காரணமாகின்றன.

பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும் அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதும் பித்தப்பைக் கற்கள் உருவாக வழிவகுக்கின்றன.
 

என்ன செய்யலாம்?

சைவ உணவுக்காரர்களுக்குப் பித்தப்பை பிரச்னைகள் குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பித்தப்பைக் கல் இருப்பது உறுதியானாலோ, சிகிச்சைக்குப் பிறகோ அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், பித்தப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

வறுத்த மற்றும் அதிகக் கொழுப்பான உணவு வகைகளை அதிகம் உண்ணக் கூடாது. ஃப்ரைடு ரைஸ், பரோட்டா, நூடுல்ஸ் மற்றும் மைதா உணவுகளையும், பீட்சா, பர்கர் போன்ற  ஜங்க் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் கூடாது. 

சிகிச்சை என்ன?

ஆரம்ப நிலையிலேயோ சிறிய அளவிலோ உள்ள பித்தப்பைக் கற்களாக இருந்தால், ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களையும் லித்தோட் ரிப்ஸி (Lithotripsy) சிகிச்சை மூலம்  உடைத்து வெளியேற்றலாம்.

நிரந்தரத் தீர்வு உண்டா?

‘பித்தப்பை நீக்கம்’ (Cholecystectomy or Gallbladder Removal Surgery) எனப்படும் அறுவைசிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுக்கச் சிறந்த வழிமுறை. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் ‘லேப்ராஸ்கோப்பிக்’ (Laparoscopic)  அறுவைசிகிச்சை முக்கியமானது. ஓரிரு நாள்களில் பணிக்குத் திரும்பிவிடலாம். பித்தப்பை அழுகிய நிலையில் இருந்தால், பித்தப்பைக் கற்களையும் பித்தப்பையையும் நீக்குவதற்கு வயிற்றைத் திறந்து அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

 

பித்தப்பையை நீக்கினால் என்ன பிரச்னை?

பித்தப்பையை நீக்கியவர்களுக்குக் கல்லீரலில் சுரக்கும் பித்தநீர் நேரடியாக முன்சிறுகுடலை வந்தடையும். அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்லாது. அவ்வளவுதான். இதனால் உணவு செரிமானமாவதில் எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது. எனவே, பித்தப்பையை நீக்க அச்சப்படத் தேவையில்லை.


அறிகுறிகள் என்னென்ன?

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில மணி நேரம்கூட நீடிக்கும். இது நடப்பது, வயிற்றை அழுத்திப் பிடிப்பது, படுக்கையில் படுப்பது என எந்தச் செயல்களாலும் குறையாது. சிலருக்கு வலியுடன் வாந்தியும் சேர்ந்து வருவதுண்டு.

பித்தப்பையில் கற்கள் உண்டாகி, கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தால், கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம் உண்டாகும். 

இது தவிர, பசியின்மை, விட்டுவிட்டு வயிற்று வலி, மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது), வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல்,  அடர் மஞ்சள்  நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல், வலது தோள்பட்டையில் வலி போன்றவையும் ஏற்படலாம்.

%d bloggers like this: