Advertisements

ஓ.பன்னீர்செல்வம்… துணைமுதல்வரான முன்னாள் முதல்வர்!

அ.தி.மு.க-வில் ஒருவழியாக ஓ.பி.எஸ். அணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணியும் இணைந்து விட்டன. 2006-2011-ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, 2009-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. அதன் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தற்போது துணை முதல்வராகியுள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து. அ.தி.மு.க-வில் அரங்கேறிய பல்வேறு காட்சிகளைத் தொடர்ந்து, இரண்டு அணிகளாகி, தற்போது மூன்று அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், புதிய திருப்பமாக ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ். அணிகள் இணைந்துள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி. தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தினகரன் வெற்றிபெற்றார் முதல்வர் பதவி ஏற்பார் என்ற நிலை உருவானதுமே உஷாராகியது எடப்பாடி தரப்பு. இதனிடையே ஓ.பி.எஸ். அணிக்கு அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி என்றும், தினகரன், எடப்பாடியை உள்ளடக்கிய அணிக்கு அ.தி.மு.க. அம்மா அணி என்றும் தேர்தல் ஆணையம் கட்சிப் பெயர்களை அறிவித்தது. அ.தி.மு.க சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிட்ட இ.மதுசூதனன் இரட்டை மின்விளக்கு சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி, தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு  முன் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி, தினகரன் டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, மூன்று வார காலம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து திரும்பிய தினகரன் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு, கட்சியை வளர்க்கப்போவதாகக் கூறி, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள் கூடி, தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்தனர். தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்; அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று எடப்பாடி அறிவித்ததும், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகள் இணைப்புக்கான சூழல் கனிந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில், இரு அணிகளும் இணைய இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ். செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்தது. ஆனால், அன்றைய தினம் ஏனோ, அந்த முடிவு எட்டப்படவில்லை.

தலைமைக்கழகத்தல் ஓ.பி.எஸ்.இதையடுத்து, இன்று, தலைமைக்கழகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், எடப்பாடி அணியினரும் ஒன்றுகூடி கட்சிகள் இணைந்ததாக அறிவித்தனர். ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார், இருஅணிகளையும் சேர்ந்த 11 பேர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்று எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி, வீட்டுவசதித்துறை இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாச்சாரத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசியலில், 2009-ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது தி.மு.க-வைச் சேர்ந்த மு.க. ஸ்டாலினுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

2001, 2014-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போதும், கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்த பின்னரும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சசிகலா அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களால், சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், எனினும், சசிகலா குடும்பத்தினரால், தான் ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி, பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார், இதையடுத்து அவரது தலைமையில் அ.தி.மு.க. தனி அணியாகச் செயல்பட்டு வந்தது. தற்போது, எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்து, மீண்டும் ஓ.பி.எஸ் மற்றும் பாண்டியராஜன் அமைச்சர்களாகி உள்ளனர். எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராகியுள்ளார் ஓ.பி.எஸ். 

2009-ம் ஆண்டு மே மாதத்தில் முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அப்போதைய முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்தார். அப்போது ஸ்டாலின் வகித்த உள்ளாட்சித் துறையுடன் மேலும் சில துறைகளும் அவர் வசம் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், அ.தி.மு.க அணிகள் இணைப்புக்குப் பின் தற்போது துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க-வையும், தமிழக அரசையும் மத்தியில் உள்ள பி.ஜே.பி-தான் இயக்கிவருகிறது என்று ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனால் முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்ட எடப்பாடியை அப்பதவியில் இனி அவர்கள் தொடர விடுவார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எனினும், தமிழகத்தில் இனி நடைபெறப்போகும் அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்தே, இந்த அரசுக்கு மக்கள் நற்சான்று அளிப்பார்களா இல்லையா என்பதை பார்க்கலாம்!

Advertisements
%d bloggers like this: