கும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

கண்டு அஞ்சாதவர்களே!
உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக  இருப்பார்கள்.  அதிகாரிகளின் நட்பு  கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.
மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும்  அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

%d bloggers like this: