தனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.  

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  வழக்குகளில் வெற்றி உண்டு.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
வியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.

%d bloggers like this: