மகரம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். 

குரு பகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் குறையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எனினும், மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபம் கூடாது. மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.
வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.   உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைக் கொடுக்கவும்.
இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
புனர்பூசம் நட்சத்திர  நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

%d bloggers like this: