எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்கு தினகரன் அணியின் குடைச்சல்கள் ஆரம்பம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் அணியினர் செயல்படத் தொடங்கிவிட்டனர். முதல்கட்டமாக, 19 எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அதோடு, முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில், கடந்த சில மாதங்களாகப் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கைக்குலுக்கி அணியை இணைத்துக்கொண்டார். அடுத்து, ஆட்சியிலும் கட்சியிலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்க, இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இது, சசிகலா குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, தினகரன் தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட முடிவு எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் கூறுகையில், அ.தி.மு.க-வின் பேருந்தை இயக்கும் வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கப்பட்டது. அவர் சரியாக இயக்கவில்லை. அதனால், அடுத்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. அவரும் அ.தி.மு.க பேருந்தை சரிவர இயக்கவில்லை. இதனால், பேருந்தின் டிரைவரை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து அ.தி.மு.க-வில் அவர்களால் அரசியல் செய்யமுடியாது. ஏனெனில், சசிகலா குடும்பத்தினரின் தயவால்தான் அவர்கள் இந்தப் பதவிகளில் உள்ளனர். பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்தபோதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்குப் பிறகு யோசித்து முடிவு எடுக்கலாம் என்று அமைதியாக இருந்தோம். 

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் சசிகலாவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூடிதான் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் பொதுக்குழுவில் சசிகலாவுக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இதனால், அவருக்கு அளித்த  ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். அதுதொடர்பாக தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். ஆளுநர், உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

ஆளுநர் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சட்டரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்வோம். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது முக்கியக் கோரிக்கை. இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை இல்லை. அந்த எண்ணம் இருந்திருந்தால், எப்போதே இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது மனசாட்சிப்படி நடக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று தெரிவித்தார். அவருடன் இணைந்ததோடு… துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் எல்லாம் கொடுத்திருப்பதை அ.தி.மு.க தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றனர்.

அ.திமு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மொத்தம் 114 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதான் இருக்கிறது.  தி.மு.க. தரப்பில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தினகரனின் ஆதரவு இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதை எப்படி சமாளிக்கலாம் என்ற ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருக்கும் மூன்று அமைச்சர்கள் உள்பட 10 எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியைக் காப்பாற்ற நினைத்து ஆட்சியை கோட்டை விட்டதாகவே தெரிகிறது” என்றார். 

%d bloggers like this: