காய்ச்சல் விரட்டும்; முடி வளர உதவும் பவளமல்லி!

பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே… வசந்தகாலம் தேடி வந்தது…’ – பட்டித்தொட்டியெங்கும் ஒலித்த இந்தத் திரைப்படப்பாடலை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்தளவுக்கு பிரசித்திபெற்ற இந்த மலருக்கென்று சில புராணக்கதைகளும் உள்ளன.
தேவலோக மரமான பாரிஜாத மலர்தான் பூலோகத்தில் பவளமல்லியாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும் இந்தப்பூக்கள் இரவு முழுவதும் நறுமணம் வீசக்கூடியவை.

பவளமல்லி காற்றில் கலந்துள்ள தூசி, மாசுக்களை அகற்றி, சுத்தமான காற்றை மட்டுமே சுவாசிக்கத் தரும் என்பதால் நம் வீடுகளின் முகப்பிலும் வீதிகளிலும் நடுவதன்மூலம் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

வெண்மையான இதழ்களையும் ஆரஞ்சு நிறக் காம்புகளையும் கொண்ட பவளமல்லி சிறு மர வகையைச் சேர்ந்ததாகும். தென்கிழக்கு ஆசிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பவளமல்லி, தற்போது இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சிவன் கோயில்களில் தல விருட்சமாக இருக்கும் பவளமல்லியில் ஆண் மரத்தின் தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் காய்க்கும்.
பவளமல்லியின் இலைகளை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி, தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் முதுகுவலி, காய்ச்சல் குணமாகும். இதன் இலைக்கொழுந்தை அரைத்து இஞ்சிச் சாற்றுடன் கலந்து குடித்து வந்தாலும் காய்ச்சல் சரியாகும்.  வயிற்றுப்புழுக்களை வெளியேற்ற பவளமல்லி இலைச்சாற்றுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இந்த இலையின் சாற்றைக் குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் பயன்படுத்தலாம். 
இதயம் வலுவற்ற குழந்தைகள் மற்றும் உடம்பில் ரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கு இது நல்ல மருந்து. 200 கிராம் இலைகளை மண்சட்டியில் போட்டு வறுத்து ஒரு லிட்டர் தண்ணீர்விட்டு அரை லிட்டராகக் காய்ச்சி சுமார் 50 மி.லி அளவு தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
இதன் வேரை மென்று தின்றுவந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கிச் சாப்பிட்டுவந்தால் சரும நோய்கள் தீரும். விதையைப் பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் குழைத்துத் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் இலைகள், பூக்கள் மற்றும் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

%d bloggers like this: