இணைப்பு முடிந்தது! கவிழ்ப்பு ஆரம்பம்!

ழுகார் முகத்தைப் பார்த்ததும், ‘‘ஒருவழியாக ஒன்று சேர்ந்து விட்டார்களே?” என்றோம்.
‘‘ஆம்… இணைப்பு முடிந்தது! அடுத்து கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பம்” என்றார் கழுகார்.
‘‘அதற்குள்ளாகவே கவிழ்ப்பா?”
‘‘ஒன்று சேர்ந்தது எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தானே? தினகரன் இன்னமும் உறுமிக்கொண்டுதானே இருக்கிறார்! ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் இறங்கிவிட்டார்களே…” என்று பீடிகை போட்டவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.

‘‘ஆறு மாதங்களுக்கும் மேலான தர்மயுத்தம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது எப்படி?’’
‘‘தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயம் கேட்டதைவிட, டெல்லியில் முறையிட்டதுதான் அதிகம். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலிலும் பி.ஜே.பி வேட்பாளரை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் விழுந்து விழுந்து ஆதரித்தனர். துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு பதவி ஏற்றபோது டெல்லி சென்ற பன்னீர்செல்வமும் எடப்பாடியும் பிரதமர் மோடியைப் பார்க்க நேரம் கேட்டனர். இம்முறை பிரதமர் அலுவலகத்தில் கொஞ்சம் கடுமையாகவே பேசினார்களாம். எடப்பாடிக்கு மட்டும் அப்போதே அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. மூன்று நாள்கள் கழித்தே மோடியை பன்னீரால் சந்திக்க முடிந்தது. ‘இரு அணிகளையும் இணைத்து விடுகிறோம் என்று டெல்லி வரும்போது சொல்கிறீர்கள். ஆனால், சென்னை சென்ற பிறகு நிறைய நிபந்தனைகளை விதித்து முட்டுக்கட்டை போடுகிறீர்கள். அடுத்தமுறை இருவரும் சேர்ந்து சந்திக்க வாருங்கள்’ என்று கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார் மோடி. அதனால்தான், இணைப்புக்கு இந்த அளவுக்கு வேகம் காட்டினார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதி மேலூரில் டி.டி.வி.தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்னரே இணைப்பை நடத்த பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால், இரு அணிகளிலும் வைக்கப்பட்ட நிபந்தனைகள் மிக நீளமாக இருந்ததால், சற்றே தள்ளிப்போனது.’’

‘‘என்ன நிபந்தனைகள்?’’
‘‘எடப்பாடி அணியினர் கூடி, ‘துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது’ என்று அறிவிப்பைச் செய்தார்கள் அல்லவா? அதிலேயே பன்னீர் கூல் ஆகிவிட்டாராம். ஆனால், அந்த அணியைச் சேர்ந்த முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர்தான், ‘நமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாமல் நாம் அங்கு போனால் சிக்கலாகிவிடும்’ என்று பன்னீருக்குத் தடை போட்டார்கள். பன்னீர் அணி சார்பில் எடப்பாடி அணியுடன் மாஃபா பாண்டியராஜன்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். இணையவேண்டிய நெருக்கடி எடப்பாடி அணிக்கும் இருந்தால், இறங்கி வர அவரும் தயாராகத்தான் இருந்தார். 16 -ம் தேதி இரவு, எடப்பாடி வீட்டில் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை செய்துள்ளார்கள். அந்த ஆலோசனைக்குப் பிறகு  தங்கமணியை அன்றிரவே சந்தித்தார் பாண்டியராஜன். ‘வெள்ளிக்கிழமைக்குள் இணைப்பை முடித்துவிட வேண்டும்’ என்று தங்கமணி சொல்ல, ‘எங்கள் கோரிக்கைகள் என்ன ஆகின?’ என்று பாண்டியராஜன் கேட்டார். ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் தங்கமணி. நம்பிக்கையுடன் பன்னீர் அணி காத்திருந்தது. 17-ம் தேதி மாலை திடீரென எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வந்துமே, பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ‘ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவது, மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைப்பது’ என இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். இந்த இரண்டு கோரிக்கைகளும் பன்னீர் அணியினர் தரப்பிலிருந்து வைக்கப்பட்டவை. அன்று இரவே பேச்சுவார்த்தைச் சுமுக திசையை நோக்கி நகர்ந்தது. அந்த நம்பிக்கையில்தான் ‘18-ம் தேதி  அன்று இணைப்புக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார்கள்.’’
‘‘பிறகு தள்ளிப்போனது எதனால்?’’
‘‘பன்னீருக்குத் துணை முதல்வர் என்பது ஆரம்பத்திலேயே முடிவாகிவிட்டது. நிதித்துறையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். பொதுப்பணித்துறையை பன்னீர் எதிர்பார்த்தார். அதை ஆரம்பத்திலேயே இல்லை என்று சொல்லி விட்டார்கள். செம்மலைக்கு அமைச்சர் பதவி தருவதில் எடப்பாடிக்கு விருப்பம் இல்லை. ‘பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தருவோம். ஆனால், பள்ளிக் கல்வித்துறை கிடையாது’ என்று சொல்லப்பட்டு விட்டது. ‘துறைகளை மாற்ற ஆரம்பித்தால் எல்லாமே குளறுபடி ஆகிவிடும்’ என்று சொல்லி விட்டாராம் முதல்வர். ‘கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்டுள்ளார்கள். பன்னீர் தரப்பின் இந்தப் பட்டியலைப் பார்த்து எடப்பாடி தரப்பு சைலன்ட் மோடுக்குப் போய்விட்டது. ‘தன்னோடு இருக்கும் அனைவருக்கும் பதவி வாங்கிக் கொடுக்க நினைத்தால் என்ன செய்வது?’ என்று புலம்பியுள்ளார்கள். ‘எல்லாருக்கும் பதவி கொடுப்பது என்றால், சும்மா ஏதாவது பொறுப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதுதான்’ என்று மூத்த அமைச்சர் ஒருவர் கிண்டல் அடித்து இருக்கிறார்.’’
‘‘ம்..!’’
‘‘எடப்பாடி அணியினர் மறைமுகமாகவே இதுவரை பன்னீரைச் சந்தித்து வந்தார்கள். ஆனால், 18-ம் தேதி  வெளிப்படையாக சந்திப்புகள் தொடங்கின. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பன்னீரின் தாயாரை நலம் விசாரிக்கச் செல்லும் சாக்கில் பதவிப் பங்கீடு பற்றி மருத்துவமனையில் வைத்தே, தங்கமணியும் வேலுமணியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அப்போது பன்னீர், ‘எனக்கு அமைச்சர் பதவியைவிட கட்சிப் பதவி முக்கியம். தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார். அதாவது, ‘பொதுச்செயலாளர் அந்தஸ்தில் சின்னத்தை ஒதுக்கும் ஃபார்ம் பி-யில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வேண்டும்’ என்பதை மறைமுகமாகச் சொல்லியுள்ளார். பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்களும், ‘சரி, நாங்கள் முதல்வரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்’ என்று கிளம்பிவிட்டார்கள்.’’

‘‘அப்புறம் என்ன நடந்தது?’’
‘‘முதல்வருடன் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாண்டியராஜன் மூலம் பன்னீர் தரப்பிடம் தொடர்புகொண்டு, ‘இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி, நெடுஞ்சாலைத் துறையும், வீட்டுவசதித் துறையும் தருகிறோம். உள்துறை தரமுடியாது. இணைப்புக்குப் பிறகு கட்சிப் பொறுப்பைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போது பன்னீர் வழிகாட்டுக்குழுத் தலைவராக இருப்பார். மாலையே ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு முறைப்படி அறிவித்துவிடலாம்’ என்று சொல்லியுள்ளார்கள். பாண்டியராஜனும் இதை ஏற்றுள்ளார். அந்த நம்பிக்கையில்தான் ஜெயலலிதா சமாதிக்கு மலர் அலங்காரம், முதல்வர் பயணத் திட்டம் எல்லாம் ரெடியானது. ஆனால், பன்னீர் வீட்டில் நடந்த ஆலோசனையில் ஏகப்பட்ட பஞ்சாயத்தாகி விட்டது.’’
‘‘என்ன பஞ்சாயத்தாம்?’’
‘‘சசிகலாவைக் கட்சியை விட்டு நீக்குகிறோம் என்று அவர்கள் சொல்லாமல் நாம் இணையக் கூடாது. கே.பி.முனுசாமிக்கு முக்கியப் பொறுப்பு வேண்டும் என்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் பங்களாவில் பரபரப்பு வாதம் நடந்துள்ளது. மாலை ஏழு மணிக்குச் சமாதிக்கு வருவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்க்க, பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே சென்றுள்ளது. முதல்வர் வீட்டிலும் பன்னீர் வீட்டிலும் செல்போன்கள் சிணுங்கிக்கொண்டே இருந்தன. பன்னீர் அணியினர் இறங்கி வரவில்லை என்பதை எட்டு மணிக்கு மேல் உணர்ந்த எடப்பாடி தரப்பு, அன்றைய இணைப்பு அறிவிப்பை ஒத்திவைத்து விட்டது. ‘இணைப்புக்கு இப்போது வழியில்லை’ என்ற கடுப்பில், ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து கடுப்புடன் வெளியேறிவிட்டார் மதுசூதனன். ‘எப்படியும் இணைப்பு நடந்துவிடும்’ என்று எதிர்பார்த்த பாண்டியராஜனும் நொந்துவிட்டாராம்’’.
‘‘பன்னீர் அணியில் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்?’’
‘‘மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும்தான். ‘இணைப்புக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் ஆளுமை கட்சிக்குள் இருந்தால் சிக்கலாகிவிடும். சின்னத்தை ஒதுக்கும்  பி ஃபார்ம் பி-யில் கையொப்பமிடும் உரிமையை நமக்குக் கொடுத்தால் இணைப்பை நடத்தலாம். எடப்பாடியின் அரசியலை நாம் நம்பமுடியாது என்று பன்னீரிடம் சொல்லியுள்ளார்கள். பன்னீரோ, ‘டெல்லியில் இருந்து எனக்கு வரும் பிரஷர் உங்களுக்குப் புரியவில்லை’ என்று புலம்பியுள்ளார். வேலுமணி, தங்கமணி ஆகியோரைத் தொடர்புகொண்ட பன்னீர், ‘சசிகலா குறித்து ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும். அதைச் செய்தால்தான் இங்கிருக்கும் மற்றவர்களை என்னால் சமாதானம் செய்ய முடியும்’ என்று சொல்லி இருக்கிறார். ‘இணைப்பு சமயத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை நீக்கித் தீர்மானம் போட்டுவிடலாம்’ என்று அந்தத் தரப்பு சொன்னது. ஒருவழியாக நிலைமை சுமுகமானது.’’
‘‘ஆனால், கவர்னர் சென்னைக்கு வந்த பிறகும், காலை 11 மணிக்கு அ.தி.மு.க அலுவலகத்துக்கு வர வேண்டிய பன்னீர், மதியத்துக்குப் பிறகுதானே வந்தார்?’’ 
‘‘18 மற்றும் 19-ம் தேதி என இரண்டு நாள்களும் நள்ளிரவுப் பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் நடந்தன. ஆனால், சசிகலாவை நீக்குவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைதான், பன்னீர் வருகையைத் தாமதமாக்கியது. அதுகுறித்து பன்னீரோடு பேசவே வேலுமணியும் தங்கமணியும் ஓர் ரகசிய இடத்துக்குச் சென்று இருந்தனர். இந்தக் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, பன்னீர் தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்துக்கு விரட்டிவிட்டார். அதனால்தான் பன்னீர் வருகை லேட் ஆனது. பன்னீர் பெரிதும் நம்பும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை இரண்டு தரப்பினரும் சந்தித்துப் பேசினர். அவர்தான் சமரச உடன்படிக்கையை முடிவு செய்தார் என்கிறார்கள்.’’
‘‘இப்படியாக இணைப்பு சாத்தியம் ஆகிவிட்டது. அடுத்து கவிழ்ப்பு என்கிறீரே?”
‘‘21-ம் தேதி கட்டப் பஞ்சாயத்து ரீதியில் இரண்டரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தர்ம யுத்தத்தை முடித்து பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இதையெல்லாம் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த டி.டி.வி.தினகரன் சொன்ன வார்த்தை, ‘எட்டப்பன்கள் ஒன்றுகூடி விட்டனர்’ என்ற ஒற்றைவரி கமென்ட் மட்டும்தான். அவரைச் சந்தித்த சில எம்.எல்.ஏ-க்கள், ‘கவர்னரைப் பார்க்கப் போவோம் வாருங்கள்’ என்று அழைத்தனர். அப்போது அவருக்கு ஏதோ போன் வந்தது. ‘பொறுத்திருங்கள்’ என்று மட்டும் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டார் தினகரன். மொத்தம் 19
எம்.எல்.ஏ-க்கள் வெளிப்படையாக இதுவரை தினகரன் பக்கம் வந்துள்ளார்கள்.’’
‘‘ஆட்சி நிலைக்க 117 உறுப்பினர் ஆதரவு வேண்டும். 19 எம்.எல்.ஏ-க்கள் மாற்றி வாக்களித்தால் ஆட்சி கவிழ்ந்து போகுமே?”
‘‘ஆமாம்! தி.மு.க கூட்டணியில் 98 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இவர்களோடு தினகரன் பக்கம் இருக்கும் 19 எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து வாக்களித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து 117 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இந்த நிலையில் தினகரன் தரப்பில் இருந்து தி.மு.க தரப்புக்குத் தூது போனதாகவும் உளவுத்துறை ஒரு தகவலைப் பரப்புகிறது!”
‘‘அது என்ன?”
‘‘தினகரன் சார்பில், ‘நாங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம். நீங்கள் ஆதரியுங்கள். பி.ஜே.பி-யை எதிர்க்கும் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்களும் எங்கள் நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். இந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும் நாம் தமிழக அரசியல் களத்தில் இணைந்து செயல்படலாம்’ என்ற ரீதியில் தி.மு.க-வுக்குத் தகவல் அனுப்பினார்களாம். ‘உங்களுடன் எந்த வகையில் ஆதரவுக் கரம் நீட்டுவது என்பது பற்றி எங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று ஸ்டாலின் சொன்னதாக உளவுத்துறையில் பேசப்படுகிறது. ‘ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கலாம். துணை முதல்வராக தினகரன் ஆகலாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் எட்டு பேர் அமைச்சர்கள்’ என்றெல்லாம் சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.”

‘‘இதுபற்றி தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தீரா?”
‘‘அவர்களைக் கேட்டால் சிரிக்கிறார்கள். ‘சசிகலா குடும்பத்தின் முதுகில் சவாரி செய்து ஆட்சியில் அமர்ந்தால், தமிழக மக்கள் எங்கள் மீது வெறுப்பாகிவிடுவார்கள். அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால், எங்களையும் சேர்த்தே மக்கள் தூக்கி எறியத் தவறமாட்டார்கள்’ என்று சொல்கிறார்கள் அவர்கள்.”
‘‘அடுத்து என்ன நடக்கும்?”
‘‘22-ம் தேதியன்று காலை தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, ‘முதல்வர் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்று கடிதம் கொடுத்துள்ளார்கள். அடுத்து, ஸ்டாலினும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிக்கும்படி கேட்கப்போகிறார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை இல்லா  தீர்மானத்தைக் கொண்டுவரும் முன்பு, அந்த தீர்மானத்தைக் கொண்டு வர 24-க்கும் குறையாத எம்.எல்.ஏ-க்கள் தேவை. இந்த அளவுக்கு தினகரன் கோஷ்டியினரிடம் எம்.எல்.ஏ-க்கள் இதுவரை இல்லை. தி.மு.க-வின் ஆதரவு இதற்குத் தேவை. ‘தி.மு.க-வின் உதவியோடு ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதா’ என்ற தயக்கம் மட்டும் சில எம்.எல்.ஏ-க்களுக்கு இருக்கிறது. இதுவரை 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது. இன்னும் பத்துப் பேரைச் சேர்த்து மொத்தமாக ராஜினாமா செய்வதும் தினகரனின் திட்டத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்கள். கூவத்தூர் 2.0 ஸ்டார்ட்ஸ்’’ என்ற கழுகார், பறந்தார்.

ஒரு மறுமொழி

  1. ஆசியர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் என்று கூறிகிறேன் தயவுசெய்து தட்டச்சு செய்யயும் போது சரியாக இருக்குமமாறு செய்து செய்தி அனுப்பவு ஐயா( உம் )பன்னிர்செல்வம் என்று எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது தவறாக பயன்படுத்தி அசிங்கமாக பேசவோ சொல்லவோ வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன் பணி சிறப்புகள் தொடரவேண்டும்

%d bloggers like this: