பருமனில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

டி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா…’ – இந்தப் பாடல் வரிகளைப் பாடநூலில் படித்ததோடு சரி. ஆம், இதுவும் ஏட்டுச்சுரைக்காய் போலவே ஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் குழந்தைகள் விடுமுறை நாள்களில் சாப்பிடக்கூட மறந்து, நாள் முழுவதும் ஓடி ஆடி விளையாடிய காலங்கள் எல்லாம்

மலையேறிவிட்டன. மாறாக, இன்றைக்கு கம்ப்யூட்டர், செல்போனில் விளையாடுவதும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும்தான் பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்காக மாறிவிட்டன. குறிப்பாக உடல் உழைப்பு தரும் பொழுதுபோக்குகள் பெருமளவு குறைந்து விட்டன. அதுமட்டுமல்ல, நமது பாரம்பர்ய உணவுகளை மறந்து பீட்ஸா, பர்கர் என மேற்கத்திய உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கத்தையும் குழந்தைகளிடமும் ஏற்படுத்தி விட்டோம். இந்நிலையில் விளையாட்டுக் கல்வி நிறுவனமான எடுஸ்போர்ட்ஸ் (EduSports) பருமன் குறித்து நடத்திய ஓர் ஆய்வு முடிவு, நாளைய சந்ததிகளின் ஆரோக்கிய நிலை குறித்துக் கவலைப்பட வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 932 மாணவர்களிடம் நடத்தப்பட்ட மிகப்பெரிய சர்வே இது. அதிர்ச்சியளிக்கும் இந்த ஆய்வின் முடிவானது, மூன்றில் ஒரு மாணவருக்குச் சரியான உடல் எடை இல்லை என்கிறது.

“குழந்தைகளுக்கு பருமன் ஏற்பட  பெற்றோரிடம் விழிப்பு உணர்வு இல்லாததே, முழு முதல் காரணம்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாசலம்.
என்ன காரணம்?
குழந்தைகளின் பருமனுக்குப் பரம்பரையும் ஒரு காரணம்.  இருப்பினும், உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமையே பிரதான காரணங்களாக அமைகின்றன. அதே நேரத்தில் குண்டாக இருக்கும் பரம்பரையைச் சேர்ந்தவரும் சிறுவயது முதலே உணவுக்கட்டுப்பாடு, விளையாட்டு போன்ற உடலுழைப்பு மூலம் பருமன் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

எப்படிக் கண்டறிவது?
பிறந்த குழந்தைகள், பொதுவாக 2.5 கிலோ முதல் 3 கிலோ என்கிற சராசரி எடையுடன் இருப்பார்கள். மாதம் 500 – 600 கிராம் அளவில், அவர்களின் எடை அதிகரித்துக்கொண்டே வரும். மொத்தமாக, 6 – 7 கிலோ எடை கூடி, ஒரு வயது பூர்த்தியாகும்போது, 10 முதல் 12.5 கிலோ வரை இருப்பது ஆரோக்கியமானது. அதன்பிறகு, ‘பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (BMI – Body Mass Index) எனப்படும் பருமனை அளவிடும் முறையைக்கொண்டு அளவிடலாம். ஒருவருக்கு பருமன் உள்ளதா என்று அறிய உதவுவதுதான் பி.எம்.ஐ அளவீடு.

என்ன செய்ய வேண்டும்?
பருமன் பிரச்னையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை, குழந்தை பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உணவு ஊட்டும்போது, அந்தக் குழந்தைகளுக்கு உணவின் தேவை என்ன என்பது தெரியும். எனவே, குழந்தைகள் `போதும்’ என்று சொன்ன பிறகும், கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது. குழந்தைகள் மிகவும் குண்டாக இருப்பதாக உணர்ந்தால், உணவில் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். நொறுக்குத்தீனிகளைக் குறைக்க வேண்டும். எண்ணெய், நெய் போன்றவற்றை அளவுடன் சேர்க்க வேண்டும்.

குளிர்பானத்தில் உள்ள அதிகமான சர்க்கரையானது, கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப் படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்புதான் பருமனை உண்டாக்குகிறது. எனவே, குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்திக் கொண்டோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உணவில் கவனம் செலுத்தாமல் சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் உண்ணும் உணவின் அளவு அதிகமாக வாய்ப்புண்டு.

குழந்தைகளின் எடை அதிகரிக்கத் தூக்கமின்மையும் காரணமாகிறது. பெற்றோர் இரவில் நீண்டநேரம் கண் விழிக்க வேண்டியதாக இருந்தால், முதலில் குழந்தைகளை ஓர் அறையில் தூங்க வைத்து விட்டு, தங்கள் பணிகளைத் தொடரலாம். குழந்தைகள் தொந்தரவு தருவதாக நினைத்து செல்போன், கம்ப்யூட்டர் கொடுத்துக் கேம் விளையாடுவதை ஊக்கப்படுத்தக் கூடாது. இதனால், வெளியே சென்று விளையாடும் ஆர்வம் குறைந்துவிடும். தினசரி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி போன்றவை சிறந்த உடற்பயிற்சிகளாகும். வாரம் ஒருமுறையாவது இவற்றை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க கல்வி மட்டுமே போதுமானது அல்ல… உடல் நலனும் முக்கியம் என்பதை உணர்ந்து, நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளைக் கிரிக்கெட் அல்லது டென்னிஸ் கிளப்பில் சேர்க்கலாம். அவர்களுக்கு ஆர்வமிருந்தால் கராத்தே, சிலம்பாட்டம் போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளும் வகுப்புகளிலும் சேர்க்கலாம்.
உணவுப் பழக்கம்
வயது, எடை போன்றவற்றைப் பொறுத்து உணவுமுறைகளை உணவியல் நிபுணர்களின் ஆலோசனையின்பேரில் அமைத்துக்கொள்வது சிறந்தது. பொதுவாக, உணவில் 60 – 65 சதவிகிதம் கார்போ ஹைட்ரேட், 20 – 25 சதவிகிதம் புரோட்டீன், 10 சதவிகிதம் கொழுப்பு, 5 சதவிகிதம் தாதுச் சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு நடைமுறை
உணவு வேளைகளைக் குறைக்கக் கூடாது. அதேபோல, மூன்று வேளை உணவு என்பதை பின்வரும்படி பிரித்துக்கொள்ளலாம்.

இப்படி சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் பசி அதிகமாக எடுக்காது. அதிக உணவு உண்ண வேண்டிய தேவை இருக்காது. உடலில் தேவைக்கு அதிகமான குளூக்கோஸ் சேராது. அவை கொழுப்புச்சத்தாக மாற்றப்பட்டுச் சேமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால், எடை அதிகரிக்காமல் இருக்கும்.

பருமன் என்பது எடையை மட்டுமே சார்ந்தது அல்ல. அதன் பக்கவிளைவுகளும் ஏராளம். எனவே, குழந்தைகளின் உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோம்.


உடல் பருமன்
உடலின் ஆற்றலுக்குத் தேவையான கலோரி, நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கிறது. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் கொழுப்பாகத் தேங்குகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதையே, `உடல் பருமன்’ என்கிறோம்.

%d bloggers like this: