இயல்பை மீறிய ரோம வளர்ச்சி (Hirsutism)

பெண்கள் சிலருக்குக் கன்ன ஓரங்கள், உதட்டுக்கு மேல், தாடை, கைகால்கள், அடிவயிறு என இயல்புக்கு அதிகமாக ரோம வளர்ச்சி இருக்கும்போது, அவர்களை மன இறுக்கம் வாட்டும். ‘எதனால் இப்படி?’, `பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’, `நமக்குள் ஆண்தன்மை அதிகரித்து வருகிறதா?’, `இதை இப்படியே விட்டால் என்னவாகும்?’ என அவர்களுக் குள்ளேயே மனப்போராட்டம் நடக்கும். வெளியில் சொல்ல முடியாமலும் தீர்வைத் தேட

முடியாமலும் தவிக்கும் அந்தப் பெண்களுக்கு ஆலோசனை கூறுகிறார் நாளமில்லா சுரப்பியல் மற்றும் நீரிழிவுநோய்ச் சிறப்பு மருத்துவர் பூசந்திரன்.
‘‘பொதுவாகப் பெண்களுக்கு முகம் மற்றும் உடம்பில் உள்ள ரோமங்கள் மென்மையாகவும் அதிகக் கறுப்புத்தன்மையற்றும் இருக்கும். ஆனால், ‘ஹிர்ஸுட்டிஸம்’ (Hirsutism) எனப்படும் பிரச்னையால் ஏற்படும் ரோம வளர்ச்சியில் முடியின் தன்மை கடினமானதாகவும் இயல்பை விட அதிகக் கறுப்பாகவும் இருக்கும்.நெஞ்சு, முதுகு எனத் தேவையற்ற இடங்களில் அதன் வளர்ச்சி இருக்கும்’’ என்ற டாக்டரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

இயல்பை மீறி மற்றும் தேவையற்ற இடங்களில் முடி வளரும் இந்தப் பிரச்னை எவ்வளவு பெண்களுக்கு இருக்கிறது?
இன்றைய காலகட்டத்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. பூப்பெய்தும் வயதிலிருந்து 45 வயது வரை எப்போது வேண்டுமானாலும் பெண்கள் இப்பிரச்னையைச் சந்திக்கலாம்

இதற்கான காரணங்கள் என்ன?
உலக அளவில் 90 முதல் 95 சதவிகிதம் பெண்கள், கருப்பையில் நீர்க்கட்டி இருப்பதால் ஏற்படும் பிரச்னை ‘பாலிசிஸ்டிக் ஓவரீஸ்’. இதனால்தான் உடலில் இயல்புக்கு மீறி முடி வளரும் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அதிக உடல் எடை, சரியான உணவுப்பழக்கமின்மை, உடற்பயிற்சியின்மை,  மாதவிலக்குப் பிரச்னைகள் உள்ளவர்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப் படலாம். ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். தலையில் முடி கொட்டுவது, அதிகப் பருக்கள், குரலில் ஆண்தன்மை வெளிப்படுவது உள்ளிட்ட மற்ற பிரச்னைகளும் இந்த ஹார்மோன் சமச் சீரின்மையால் ஏற்படலாம்.
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பரிந்துரைக்கத்தக்க வாழ்க்கைமுறை மாற்றங்கள் என்ன?
இன்றைய பெண்கள் அதிக எடையுடனும் உடற்பயிற்சியின்றியும் இருப்பதால் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னை மிக இளவயதிலேயே அவர்களைத் தாக்குகிறது. எனவே உடற்பயிற்சி, சரியான உணவு முறையின் மூலம் முதலில் உடல் எடையைக் குறைக்க முயற்சிசெய்ய வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் தவிர்க் கப்பட வேண்டும். தங்கள் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்ற எடையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைத்து, உடலில் இயல்பை மீறி முடிவளரும் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

இதற்கான சிகிச்சைகள் என்னென்ன?
முதலில் மகப்பேறு மருத்துவர், ஹார்மோன் சிறப்பு மருத்துவர், சருமச் சிறப்பு மருத்துவர் என முறையான மருத்துவரை அணுகி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு என்ன காரணத்தால் இந்த ரோம வளர்ச்சிப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ரோமம் உள்ள இடங்களில் க்ரீம் பயன்படுத்துவது, தேவைப்பட்டால் மாத்திரைகள் சாப்பிடுவது எனத் தேவையான சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சிலர் முகத்தில் உள்ள அதிக ரோம வளர்ச்சியை த்ரெடிங் முறையில் அகற்றுவது வழக்கம். இதை அடிக்கடி செய்துகொண்டே இருக்க வேண்டும். லேசர் சிகிச்சை முறையில் முடியின் வேரை அழித்துப் புதிதாக முடி வளர்வதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். க்ரீம், மருந்து, லேசர் என எந்த வகை சிகிச்சையாக இருந்தாலும் குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்காவது அதைத் தொடர்ந்தால் மட்டுமே பலன்பெற முடியும். எனவே சிகிச்சை காலத்தை முழுமையாகக் கடக்கும் பொறுமை பெண்களுக்கு அவசியம்.

இந்தப் பிரச்னைக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்?

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு வீட்டு வேலைகளே உடற்பயிற்சியாக அமைந்தது.உணவே மருந்தாக இருந்தது. இப்படியான வாழ்க்கை முறையால், அவர்கள் தங்கள் நோவு களையும் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் திணறுவதைக் காண்கிறோம். தவிர தவறான உணவுப் பழக்கமும் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்தச் சூழலில், உடல்  தன் ஆரோக்கியக் குறைவை அதிக ரோம வளர்ச்சி மூலமாக  நமக்கு உணர்த்தும்போது, அப்போதும்  சுதாரிக்காமல் விட்டால் பிரச்னையின் வீரியம் அதிகரிக்கக் கூடும். மேலும், இந்தப் புறத்தோற்றத்தால் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் மன நெருக்கடிகளும் அதிகரிக்கும். எனவே, தயக்கம், தாமதம் இன்றி மருத்துவ ஆலோசனை பெற்று, பிரச்னையிலிருந்து விடுபடலாம்.


லேசர் சிகிச்சையை எந்த வயதில் எடுத்துக்கொள்ளலாம்?
16 வயது முதல் லேசர் சிகிச்சை செய்துகொள்ளலாம். ரோமத்தின் அடர்த்தி மற்றும் தன்மைக்கு ஏற்ப லேசர் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

%d bloggers like this: