காகம், கிளி, மைனா, சிட்டுக்குருவி… – மரங்களை வளர்க்கும் பறவைகள்..!

யிரினங்களானாலும் சரி, பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்களானாலும் சரி அனைத்துக்கும் பொதுவாக இருக்கும் தலையாயக் கடமை, தங்களது சந்ததியைப் பெருக்குவதுதான். இதற்குத் தாவரங்களும் விதிவிலக்கல்ல. எல்லாத் தாவரங்களுமே ஏதாவது ஒரு வகையில் தன் இனத்தைப் பெருக்கும் வேலைகளைச் செய்துவருகின்றன. காற்று, நீர், கால்நடைகள், பறவைகள் எனப் பலவற்றின் மூலம் தாவரங்கள் தங்களுடைய சந்ததியைப் பெருக்குகின்றன. இவற்றில் தாவரங்களுக்கு அதிகளவில் உதவுபவை பறவைகள்தான். 

பறவைகள் உண்ட பழங்களின் விதைகள், எச்சத்தின் மூலம் மண்ணில் விழுந்து மறு பிறப்பு எடுக்கின்றன. இப்படி மலைகளிலும் காடுகளிலும் பறவைகளால் உயிர்பெற்ற தாவரங்கள் ஏராளம். ஆல், அரசு, புளி, வேம்பு போன்றவற்றில் 80 சதவிகித  மரங்கள் பறவைகளால்தான் பரவலாக்கப் பட்டிருக்கின்றன. பசிக்குப் பழம் தந்த மரங்களுக்குக் கைம்மாறு செய்யும் விதமாக அவற்றின் சந்ததிகளைப் பெருக்கிவரும் பறவைகள், அதன்மூலம் மறைமுகமாக மனிதர்களுக்கும் தொண்டாற்றுகின்றன. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத நாம், பறவைகளுக்குச் சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறோம்.    

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பறவைகள் ஆராய்ச்சியாளர் டேவிட் சற்குணம். ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையின்கீழ் செயல்படும் ‘நன்னீர் பறவைகள் பாதுகாப்பு அமைப்பி’லும் உறுப்பினராக இருக்கிறார். விதைகள் சிறப்பிதழுக்காக டேவிட் சற்குணத்தைச் சந்தித்துப் பறவைகள் மூலமான விதைப் பெருக்கம் குறித்துப் பேசியபோது பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“காடுகளிலும் மரங்கள் அடர்ந்துள்ள பகுதிகளிலும் பறவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பொதுவாக, பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக இருக்கிறது. இக்காலகட்டத்தில்தான் மா, பலா, வேம்பு, அத்தி, ஆல், அரசு, புளி, செர்ரி உள்ளிட்ட மரங்களில் பழங்களும் அதிகமாகப் பழுக்கின்றன. இப்பழங்கள்தான் பெரும்பான்மையான பறவைகளின் விருப்ப உணவாக இருக்கிறது.    

இப்படிக் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட்டு, ஆங்காங்கே எச்சமாக நிலத்தில் பரப்பும் வேலையைப் பறவைகள் செய்கின்றன. காகம் வேப்பம்பழங்களை விரும்பிச் சாப்பிடும். அதனால் வேப்பம் விதைகளை இது பரப்பும். எதிர்பாராத இடங்களில் கொய்யா மரங்கள் இருக்கும். அதற்குக் கிளிகள்தான் காரணம். அத்தி, ஆலமரங்களில் இருக்கும் பழங்களை மைனா, கிளி, குயில் ஆகியவை விரும்பிச் சாப்பிடும். தினை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை நெல்குருவி, புறா, சிட்டுக்குருவி ஆகியவை விரும்பிச் சாப்பிடும். இப்படி விரும்பிச் சாப்பிடப்படும் பழங்களின் விதைகள் பறவைகள் மூலமாக மண்ணில் விழுகின்றன.
இப்படி மண்ணில் விழுந்த விதைகள் ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்யத் தொடங்கியதும் முளைக்க ஆரம்பிக்கின்றன. பறவைகளின் எச்சத்தோடு விதைகள் கலந்து விழுவதால் இயற்கையாகவே விதைநேர்த்தியும் செய்யப்பட்டுவிடுகிறது. அதனால் விதைகளின் முளைப்புத்திறனும் சிறப்பாக இருக்கிறது.
மனிதர்களால் நட்டு வைத்து வளர்க்க முடியாத இடங்களில்கூட கொய்யா, நாவல், கொடுக்காப்புளி, சப்போட்டா, சீத்தா ஆகிய பழமரங்களை நட்டு வைப்பவை பறவைகள்தான். இப்படிச் சிறந்த விதை பரப்பிகளாகச் செயல்படுவதோடு விவசாயத்தில் பூச்சிகளை ஒழிப்பதிலும் பெரும்பங்கு ஆற்றுகின்றன பறவைகள். ஆனால், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால், பறவை இனங்களும் அழிந்துவருவது மறுக்க முடியாத உண்மை. பறவைகள் மட்டுமல்ல; ஓர் உயிர்ச் சங்கிலியையே அறுத்து வருகின்றன பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்.    

பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால் பயிர்களில் குத்துயிரும் குலையுயிருமாக இருக்கும் பூச்சிகளைப் பறவைகளும் வெட்டுக்கிளி உள்ளிட்ட சில உயிரினங்களும் சாப்பிடுகின்றன. இதனால் பாதிப்புக் குள்ளாகும் வெட்டுக்கிளியைச் சாப்பிடும் தவளை பாதிக்கப்படுகிறது. அதைச் சாப்பிடும் பாம்பு பாதிப்புக்குள்ளாகிறது. பாம்பைப் பிடித்துச் சாப்பிடும் கழுகு, மயில் உள்ளிட்ட சில உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதேபோலத்தான் வெட்டுக்கிளிகளையும் பூச்சிகளையும் சாப்பிடும் பறவைகளும் பாதிப்புக்குள்ளாகி மலட்டுத்தன்மை அடைகின்றன. இப்படிப் பறவை இனங்கள் அழிவதால், பல வகையான தாவரங்களும் விதைகளைப் பெருக்கமுடியாமல் அழிந்துவருகின்றன. இதைக் கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும். கூர்ந்து கவனித்தால்தான் இதன் விபரீதம் புரியும்.
பறவைகளை அழிக்கும் இன்னொரு செயல் மரங்களை அழிப்பது. உதாரணமாகக் குமரி மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்பட்டு ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அசைந்தாடும் மரங்கள் பறவைகளுக்கு கூடுகட்ட ஏற்றவையல்ல என்பதால், ரப்பர் மரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை. இதனால், குமரி மாவட்டத்தில் பறவைகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. வசதியான வாழிடம், உணவு, பாதுகாப்பு இந்த மூன்றும் இருக்கும் இடங்களில்தான் பறவைகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும். நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என்று மரங்களை அழிப்பதால் பறவைகளின் வாழிடமும் சேர்ந்தே அழிகின்றன. இப்படிப் பறவைகள் அழிவதால், விதைப்பெருக்கமும் அருகிவருகிறது” என்ற டேவிட் சற்குணம் நிறைவாக, “இனியாவது நாம் சுதாரித்துக்கொண்டு பறவைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.  

வீடுகளில் மரப்பெட்டிகள், அட்டைப் பெட்டிகளைத் தொங்கவிட்டால், அவற்றில் பறவைகள் தங்க ஏதுவாக இருக்கும். நிழற்பாங்கான இடங்களில் பறவைகள் வசதியாகத் தண்ணீர் குடிக்கும் வகையில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைக்கலாம். சிறுதானியங்களை அவற்றுக்கு உணவாக வைக்கலாம். உணவு, வாழிடம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிபடுத்தி விட்டால், அவை தானாகவே கூடுகட்டி வாழத் தொடங்கிவிடும்” என்று பறவைகளை வாழ வைக்கும் சில வழிமுறைகளையும் சொல்லி முடித்தார்  

%d bloggers like this: